அமைச்சர் நிர்மல்குமாரின் ‘அறிவாலய’ பேச்சு.. விளாசிய ஆ.ராசா

Published On:

| By Mathi

A. Raja Slams Critics Over Minister Nirmal Kumar's 'Arivalayam' Remarks

”திமுகவினர் அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு, வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள்” என்று சட்ட அமைச்சர் நிர்மல் குமார் பேசியதற்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா (A. Raja) பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னையில் இன்று (ஆகஸ்ட் 24) நடைபெற்ற கலைஞரின் சகோதரி மகன் இயக்குநர் அமிர்தம் இல்ல திருமண விழாவில் ஆ.ராசா பேசியதாவது: தலைவர் கலைஞர் அவர்களுடைய குடும்பத்தில் நடைபெறுகின்ற இந்த திருமணம், அனைவரையும் ‘ஒரு அன்னை பெற்றெடுக்க வயிறு தாங்காத காரணத்தால் தனித்தனியே ஈன்றெடுத்த தம்பிகளே! என்று அழைத்த அண்ணாவை இதயத்திலே ஏந்தியிருக்கின்ற கலைஞர் அவர்களுடைய குடும்பம் ஒரு சமத்துவபுரம் மட்டுமல்ல; கலையுலகிற்கு என்று கலைஞர் குடும்பத்திலே வாரிசுகள் இருப்பார்கள், இதழியல் துறைக்கு என்று வாரிசுகள் உண்டு, அரசியலுக்கு என்று வாரிசுகள் உண்டு. கலை, இதழியல், அரசியல் எல்லா தரப்புக்கும் கலைஞர் குடும்பத்திலே இடம் இருக்கிறது என்பதற்கு கலைத்துறைக்கு சாட்சியாக இருக்கின்ற வணக்கத்திற்குரிய அண்ணன் அமிர்தம் அவர்களுடைய குடும்பம் திகழ்கிறது. அந்த குடும்பத்தினுடைய குலக் கொழுந்துகள் இன்றைய தினம் தங்களுடைய வாழ்க்கையை தொடங்கி இருக்கிறார்கள்.

ADVERTISEMENT

கலைஞருடைய குடும்பத்தில் நடைபெறுகின்ற எந்த நிகழ்வும் வெறும் திருமண வாழ்த்தோடு நின்று விடாது, அரசியலிலும் இருக்கிறோம் என்கிற காரணத்தினால் ஒரே ஒரு கருத்தை வந்திருக்கிற உங்கள் எல்லோருக்கும் சொல்லி விடைபெறக் கருதுகிறேன். இன்றைக்கு சில தறுதலைகளுக்கு காரிலே தேசியக் கொடி வந்துவிட்ட காரணத்தினால், அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விடலாம் என்று சில தறுதலை அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த குடும்பத்திலே நடைபெறுகின்ற இந்த விழாவில் சொல்கிறோம்: பெரியாரும், அண்ணாவும், கலைஞரும் அரசியலில் கிரகப்பிரவேசம் நடத்திய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு வெள்ளை அடித்துக் கொண்டார்கள்.

ADVERTISEMENT

அறிவாலயம் தோன்றிய பிறகுதான் தமிழர்கள் தங்கள் வீட்டுக்கு பலமுறை வெள்ளை அடித்துக் கொண்டனர், தமிழ்நாடு தனக்கு வெள்ளை அடித்துக் கொண்டது. எனவே, அந்த அறிவாலயத்தை குறை சொல்லுகின்ற ஒரு தறுதலை கூட்டம் இன்றைக்கு தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறது.

இந்த திருமண விழாவில் பெரியாரையும், அண்ணாவையும், கலைஞரையும் இதயத்தில் தாங்கி இருக்கின்ற கலைஞருடைய குடும்ப விழாவில், மணமக்கள் வாழ்க என்று வாழ்த்துகின்ற அதே நேரத்தில்,

ADVERTISEMENT

தமிழ்நாட்டில் இருக்கின்ற இந்த தறுதலைக் கூட்டத்தை ஓட்டுவதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்போம். இவ்வாறு ஆ.ராசா பேசினார்.

அமைச்சர் நிர்மல்குமார் பேசியது என்ன?

மதுரையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “இனிமேல் அறிவாலயத்திற்கு வெள்ளை அடித்து வாடகைக்கு விட்டுவிட்டு, அவர்கள் வேறு வேலையைப் பார்க்கச் சென்றுவிடுவார்கள். முரசொலி அறக்கட்டளைக்குத்தான் அவர்களுக்குள் இவ்வளவு போட்டி நடக்கிறது; ஏனெனில், அதில் தான் அனைத்துச் சொத்துகளும் உள்ளன. அந்த அறக்கட்டளையை எந்தக் குடும்பம் கைப்பற்றுவது என்பதில் தான் போட்டியே நடக்கிறது. அறக்கட்டளையைக் கைப்பற்றியவுடன், அறிவாலயத்தை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிடுவார்கள்” என விமர்சித்திருந்தார். இதற்கு ஆ.ராசா பதிலடி தந்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share