கேரளாவில் முதல்வர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உதயமாக உள்ளது. கேரளா மாநில தவெக தலைவராக (TVK) பாஜகவில் இருந்து விலகிய நடிகர் தேவன் நியமிக்கப்பட இருக்கிறார். இது தொடர்பாக செப்டம்பர் 10-ந் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.
நடிகர் தேவன் ANI செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: எனது அரசியல் பயணம் குழந்தைப் பருவத்திலிருந்தே தொடங்கியது. நான் ஒரு மாணவனாக இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டேன். அந்த அரசியல், நான் சொந்தமாக ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கும் அளவுக்கு வளர்ந்தது.
மாணவர் காங்கிரஸ்
நான் மாணவனாக இருந்தபோது காங்கிரஸில் இருந்தேன், பட்டப்படிப்பு முடிந்ததும், நாம் நம்பியிருந்த உம்மன் சாண்டி, ஏ.கே. ஆண்டனி, ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் அதிகாரத்திற்கு வந்தவுடன், கேரளாவில் சிறந்த அரசியலை முன்னெடுப்பார்கள் என்று நான் நினைத்தேன். ஆனால் அவர்களின் செயல்பாடுகளால் நான் ஏமாற்றமடைந்தேன்.
தனி கட்சி
அதனால் 2004-ல் நாங்கள் ”கேரள மக்கள் கட்சி”யை (Kerala People’s Party) தொடங்கினோம். சமுதாயத்தில் பல மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்று நாங்கள் நினைத்தோம். அப்போது நான் 2 தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தேன். ஆனால் எனது அரசியல் பணியைத் தொடர்ந்து செய்தேன்.
சோனியாவுடன் சந்திப்பு
2008-ல் சோனியா காந்தியை சந்தித்தேன். இது கபில் சிபல் உதவியோடு நடந்தது. அப்போது என்னிடம், “தனியாக நிற்காதீர்கள், ஒரு தேசிய கட்சியில் இணையுங்கள்” என்று கூறினார். நானும் அதை முயற்சித்துப் பார்க்கலாம் என்று நினைத்தேன். ஆனால் காங்கிரஸில் மீண்டும் இணைவது நல்லதல்ல என்று முடிவு செய்தேன்.
அமித்ஷாவுடன் சந்திப்பு
இதனால் 2016-ல், நான் அமித்ஷாவுடன் தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இணைவது குறித்துப் பேசினேன். கருத்து வேறுபாடுகள் காரணமாக அப்போதும் அது கைகூடவில்லை.
பாஜகவில் ஐக்கியம்
கேரளாவில் அரசியல்மயமாக்கப்பட்ட பயங்கரவாதம் வளர்ந்துள்ளது. முன்பு அவை கண்ணுக்குத் தெரியாமல் இருந்தன, ஆனால் இப்போது அவை வெளிப்படையாகவே வந்து கேரளாவின் சமூக கட்டமைப்பை அச்சுறுத்துகின்றன. ஆகையால் ஒரு தேசிய கட்சிக்குச் செல்வது நல்லது என்று நண்பர்கள் ஆலோசனை கூறினர். அதனால் பாரதிய ஜனதா கட்சிதான் சிறந்த கட்சி என்று நான் நினைத்தேன். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்த போது, ”உங்கள் கட்சியை ஏன் பாஜகவுடன் இணைக்கக்கூடாது?” என்று என்னிடம் கேட்டார். இதனால் 2021-ல் எனது கட்சியை பாஜகவுடன் இணைத்தேன்.
ஓரம் கட்டிய பாஜக
அப்போது சில வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டன. கேரளாவில் பாஜக ஒரு தவறாக புரிந்து கொள்ளப்பட்ட கட்சியாக உள்ளது. வாக்களிக்கும் மக்களிடையே பல தவறான புரிதல்கள் உள்ளன. ஆனால் பாஜகவில் எனக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை. அவர்கள் என்னை ஒரு மூலையில் முடக்கிவிட்டார்கள், என் கண்களும் கால்களும் பூட்டப்பட்டதைப் போல என்னை அசையவிடாமல் செய்தனர். பாஜகவுடன் தொடர்ந்து பயணித்தால் ஒரு அரசியல்வாதியாக எனது லட்சியங்கள் நிறைவேறாது என்று நினைத்தேன். எனவே நான் பாஜகவிலிருந்து விலக முடிவு செய்தேன்.
விஜய் தூதர்கள் பேச்சுவார்த்தை
எனது ராஜினாமா ஊடகங்களில் வெளியானதைக் கண்ட தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய், என்னைச் சந்திக்க சிலரை அனுப்பி, நான் தவெகவில் இணைய விரும்புகிறேனா என்று கேட்டனர். நாங்கள் விரிவாக பேசினோ… சென்னையில் உள்ள தவெக மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
செப்.10-ல் விஜய்யுடன் சந்திப்பு
அப்போது, விஜய்யை நேரில் சந்திக்க வேண்டும்; அவருடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். செப்டம்பர் 10-ந் தேதி விஜய்யை சந்திக்க இருக்கிறேன். அன்றைய தினம் விஜய்யின் தவெகவில் இணைய இருக்கிறேன்.
கேரளா மாநில தவெக தலைவர்
கடவுளின் அருளால், நான் கேரள அரசியலில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறேன். தற்போதைய அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டதாகிவிட்டது. இதையெல்லாம் பார்த்து நான் மிகவும் வருத்தப்படுகிறேன். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு அரசியல்வாதியாகத் தொடங்கிய எனக்கு, மக்களுடன் இருக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக நான் நினைக்கிறேன். கேரள வாக்காளர்களை எனக்கு நன்றாகத் தெரியும். இப்போது விஜய் உதவியுடன், கேரள அரசியலில் ஒரு பெரிய மாற்றத்தை என்னால் ஏற்படுத்த முடியும் என்று நினைக்கிறேன்.
அவர்கள் எனக்கு மாநிலத் தலைவர் பதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். எனவே நான் அதற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன். கடவுளின் விருப்பப்படி எல்லாம் நன்றாக நடந்தால், நான் அங்கு இருப்பேன். இவ்வாறு நடிகர் தேவன் கூறினார்.
யார் இந்த நடிகர் தேவன்?
நடிகர் தேவன், மலையாளம்- தமிழ்- தெலுங்கு, இந்தி மொழி திரைப்படங்களில் நடித்தவர்.
1994-ல் விஜய்காந்தின் ஹானஸ்ட் ராஜ் படத்தில் விஜயகாந்தின் நண்பனாக நடித்திருந்தார்.
1995-ல் வெளியான ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படமான ‘பாட்ஷா’வில் கேசவன் என்ற பாத்திரத்தில் (கதாநாயகி நக்மாவின் தந்தை) வில்லன்களில் ஒருவராக நடித்திருந்தார்.
1996-ல் இந்திரபிரஸ்தம் படத்தில் மம்மூட்டி, சிம்ரனுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
2002-ல் விஜயகாந்த், கார்த்திக் மீனாவுடன் இணைந்து ‘தேவன்’ படத்தில் நடித்தவர்.
