எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். அரசு பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம்- முதல்வர் விஜய் அறிவிப்பு

Published On:

| By Mathi

CM Vijay Bus

தமிழ்நாட்டில் எக்ஸ்பிரஸ், டீலக்ஸ், எல்.எஸ்.எஸ். அரசு பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் (Free Travel for Women) என்று தமிழக முதல்வர் விஜய் இன்று அறிவித்தார்.

தமிழக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் இன்று (ஆகஸ்ட் 24) முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: உண்மையான முன்னேற்றம் என்பது அதன் பொருளாதார வளர்ச்சியால் மட்டுமல்ல, பெண் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம், வணிகம் மற்றும் சமூக வாழ்வின் அனைத்து தளங்களிலும் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் பங்கேற்கும் வாய்ப்புகளாலும் அளவிடப்படுகிறது.

ADVERTISEMENT

மகளிரின் பயண சுதந்திரம் அவர்களின் பொருளாதார சுதந்திரத்திற்கும், குடும்பங்களின் முன்னேற்றத்திற்கும் அடித்தளமாக இருக்கிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தில், மாநகரம், நகர்ப்புறங்களில் சாதாரண மற்றும் மலைப்பகுதி பேருந்துகளில் 40 கிலோமீட்டர் வரை மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறது.

எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுவதில்லை. தமிழ்நாட்டின் எந்தப் பகுதியிலும் வசிக்கும் ஒரு மகளிரும் போக்குவரத்து கட்டணத்தால் தமது வாய்ப்புகளை இழக்கக்கூடாது என்ற சமூக நீதி சிந்தனையை இவ்வரசு முதன்மையாக கொண்டுள்ளது.

ADVERTISEMENT

இதனை கருத்தில் கொண்டு, மகளிர் கட்டணமில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக “வெற்றிப் பயணம்” என்ற பெயரில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்த நாளான அக்டோபர் இரண்டாம் தேதி முதல் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது என்பதை இந்த மாமன்றத்தில் மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன்.

அதன்படி முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரண பேருந்துகள் மட்டுமின்றி, மாநகரம், நகர்ப் பகுதிகளில் இயங்கும் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ், டீலக்ஸ் அரசு பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.

ADVERTISEMENT

மேலும் கூடுதலாக மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப்பகுதியில் சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் பயன்பெற வருமான உச்சவரம்போ மற்றும் மேற்கொள்ள விரும்பும் பயண எண்ணிக்கையிலையோ கட்டுப்பாடுகள் இல்லை.

வெற்றிப்பயணம் இதர சேவைகளிலும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் மகளிருக்கான எளிதில் அணுகக்கூடிய பொதுப்போக்குவரத்து வசதி பெருமளவில் கிடைக்கும். இதன் மூலம் மாணவிகள் தொலைதூரத்தில் உள்ள கல்லூரிகளுக்குச் செல்லவும், பணியிடங்களுக்குச் செல்லவும், மருத்துவம் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கும் கட்டணமின்றி பேருந்துகளில் பயணிக்க இயலும்.

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, வெற்றிப் பயணம் என்பது கட்டணமில்லா ஒரு பேருந்து பயணம் மட்டுமல்ல, ஒரு மாணவியின் கல்வி, ஒரு தொழிலாளியின் வேலைவாய்ப்பு, ஒரு தாயின் குடும்பப் பொறுப்பு, ஒரு தொழில் முனைவோரின் முன்னேற்றம் போன்றவற்றை உறுதி செய்யும் சமூக முதலீடு ஆகும். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் வாழ்ந்தாலும் மகளிரின் இயற்கை சுதந்திரத்திற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் அரசு உறுதுணையாக இருக்கும்.

இத்திட்டத்தின் கீழ் திருநங்கைகளும் கட்டணமில்லா பயணங்கள் மேற்கொள்ளலாம். வெற்றிப் பயணம் வழியாக மகளிரின் வாய்ப்புகள் விரிவடைந்து குடும்பங்கள் முன்னேறி, சமூக நீதியும் சமத்துவமும் நிலைபெற்று, வளமான வெற்றித் தமிழ்நாட்டை உருவாக்கும் நமது பயணம் மேலும் வலுப்பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ஆண்டுதோறும் தோராயமாக 6,000 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share