குடும்ப தலைவிகளுக்கு ஆண்டுக்கு 3 இலவச எரிவாயு சிலிண்டர்கள் (3 Free LPG Cylinders) வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் இன்று சட்டசபையில் அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 24) 110-வது விதியின் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்பு: நமது அரசால் பெண்கள் பயன்பெறும் வகையில், அவர்களின் முன்னேற்றத்திற்காகவும் பாதுகாப்பிற்காகவும் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு இதுவரை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைத் திட்டம், தாய்மாமன் தங்கமோதிரத் திட்டம், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம், அண்ணனின் சீர் திட்டம் போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், நமது அரசு மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தினை முதன்மை நோக்கமாகக் கொண்டு, வெற்றித் தொலைநோக்குத் திட்ட ஆவணத்தினை (Vision Document) வெளியிட்டுள்ளது. அந்தத் திட்ட ஆவணத்தின் அடிப்படையில் இலக்கு நிர்ணயம் செய்து, பல்வேறு திட்டங்கள் அடுத்து வருகின்ற முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டிற்குள் நிறைவேற்றத்தக்க திட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சிறப்பினமாக பெண்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுத்து இவ்வரசு நிறைவேற்றும். கடந்த நான்கு மாதங்களாக வளைகுடா பகுதியில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மாற்று எரிபொருட்களைப் பயன்படுத்தி வருவதாலும், எரிவாயு சிலிண்டர் விலை உயர்வினாலும், பொதுமக்கள் தங்களது வருவாயில் இருந்து கூடுதலான தொகையினைச் செலவிட்டு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
இதனைத் கருத்திற்கொண்டு,
நிதி நெருக்கடியான சூழலிலும் பொதுமக்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையிலும், பொதுமக்களின் நலனைப் பாதுகாக்கவும், மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கிலும் எரிவாயு சிலிண்டருக்காகச் செலவழிக்கப்பட்டு வரும் தொகையினை அவர்களுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
எனவே, குடும்பத் தலைவிகள் பயன்பெறும் வகையில் முதல் கட்டமாக அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். எரிவாயு சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
திட்டப் பயனாளிகள் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து, சிலிண்டர் பெற்றவுடன் எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து பட்டியல் பெற்று சிலிண்டருக்கான விலை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இத்திட்டத்தினால் சுமார் 1 கோடியே 30 லட்சத்து 16 ஆயிரத்தி 104 குடும்பங்கள் பயனடைவார்கள். அதாவது ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்திற்கு மிகாமல் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள குடும்பத்தினர், சிறுகுறு விவசாயக் குடும்பத்தினர், மாற்றுத் திறாளி குடும்பத்தினர் மற்றும் சமூகத்தில் உள்ள நலிந்த குடும்பத்தினர் பயனடைவார்கள். இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வரும் பொங்கல் பண்டிகை ஜனவரி மாதம் முதல் செயலாக்கத்திற்கு கொண்டுவரப்படும்.
இத்திட்டத்திற்காக ஆண்டுதோறும் தோராயமாக 4,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் வாயிலாக இந்த அவைக்குத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இவ்வாறு முதல்வர் விஜய் அறிவித்தார்.
