ராஜன் குறை
கார்காலம் என்றால் மழைக்காலம். ஆனால் இந்த கட்டுரையின் தலைப்பில் உள்ள ‘கார்’காலம், சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் காலத்தைக் குறிக்கிறது. முதல்வர் விஜய் பிற கட்சிகளுடன் எந்த ஆலோசனையும் செய்யாமல், சட்டமன்றத்தில் விவாதிக்காமல், தான் தோன்றித்தனமாக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்கும் ஒரு கார் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு நிர்வாகிகள் அல்ல. மக்களுடைய தேவைகளை கவனிக்க வேண்டியது மாவட்ட ஆட்சியர் தலைமையிலான நிர்வாகமும், உள்ளூராட்சி அமைப்புகளும்தான். சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மக்களை சந்திக்க வேண்டுமென்றால் அவர்கள் சொந்தப் பொறுப்பில்தான் செல்ல வேண்டும். அவர்களுக்கு அரசு நிர்வாகப் பொறுப்பு எதுவும் கிடையாது. அவராக மேற்கொள்ளும் பயணச்செலவுகளை அவர்தான் செய்துகொள்ள வேண்டும் அல்லது அவர் சார்ந்துள்ள கட்சி செய்து தரவேண்டும்.
சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தொகுதி மக்களுக்கும் பாலமாக செயல்படுபவர்கள் கட்சி நிர்வாகிகள்தான். அவர்களெல்லாம் பொதுநல ஊழியர்கள்தான். அவர்கள்தான் மக்களின் தேவைகளை, குறைகளை சட்டமன்றத்தின் மூலம் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லவேண்டும் என்றால் சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவிப்பார்கள். அவர்கள்தான் மாவட்ட, உள்ளூராட்சி நிர்வாகங்களுக்கும் மக்களுக்கும் இடையிலும் பாலமாக செயல்படுவார்கள்.
சட்டமன்ற உறுப்பினர்களின் முக்கியமான பணி சட்டங்கள் இயற்றுவது, அரசின் வரவு செலவு கணக்கும், அரசு திட்டங்கள், செயல்பாடுகள் ஆகியவற்றை விவாதிப்பது, தொகுதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள வலியுறுத்துவது, மக்கள் சந்திக்கும் பொதுப்பிரச்சினைகளை அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்வது ஆகியவைதான். தொகுதி நிர்வாகம் அவர்கள் பொறுப்பல்ல. உதாரணமாக ஒரு பகுதியில் சாலைகள் சரியில்லை, கால்வாய் தூர்வாரவில்லை என்றால் அவர்கள் துறை அதிகாரிகள் அல்லது அமைச்சர்கள் கவனத்திற்கு எடுத்துச் செல்லலாம். ஆனால் அவற்றை செய்து முடிப்பது அவர்கள் பொறுப்பல்ல. மக்கள் தொடர்புடைய அரசு அதிகாரிகளையோ, அமைச்சர்களையோ நேரடியாக அணுக வேண்டும், கேள்வி கேட்க வேண்டும்.
மக்கள் பிரதிநிதிகளுக்கும் (legislative), அரசு நிர்வாகத்திற்கும் (executive) வேறுபாடு தெரியாமல் போகக் காரணம் தேர்தல்களில் பிரதிநிதிகளுக்குத்தான் மக்கள் வாக்களிக்கிறார்கள் என்பதுதான். பெரும்பான்மை பெறும் கட்சியிலிருந்து அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள்தான் நிர்வாகத்திற்கு தலைமை தாங்குவார்களே தவிர, அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் நிர்வாகத்தின் அங்கங்கள் கிடையாது. இந்த வித்தியாசத்தை உள்வாங்காமல் நாங்கள் இன்னாருக்கு வாக்களித்தோம் அவர்கள் எங்களுக்கு சாலை அமைத்துத் தரவில்லை என்று கூறுவது பழக்கமாகிவிட்டது. அதனால் சட்டமன்ற உறுப்பினர்களே அரசு நிர்வாகத்தில் பங்கேற்பது போன்ற மனமயக்கம் ஏற்படுகிறது. இது மக்களாட்சிக்கு நன்மை பயப்பது அல்ல.
காரணம் மக்கள் தங்களுடைய குடியுரிமையை புரிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்யும்போது அவர்கள் குடிமைச் சமூக அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு தெருவிலும் குடியிருப்போர் நலச் சங்கங்களை ஏற்படுத்தலாம். நுகர்வோர் சங்கங்களை ஏற்படுத்தலாம். தொழில்கள் சார்ந்த சங்கங்களை ஏற்படுத்தலாம். இந்த சங்கங்கள் அரசு அதிகாரிகளிடம் நேரடியாகச் சென்று தங்கள் பிரச்சினைகளை, தேவைகளைக் கூற வேண்டும். அவர்கள் சரியான தீர்வைத் தரவில்லை என்றால் அரசியல் கட்சிகளிடம், மக்கள் பிரதிநிதிகளிடம் முறையிடலாம். சிவில் சமூகம் என்ற குடிமைச் சமூகமாக அவர்கள் நேரடியாக அரசு நிர்வாகத்திடம் உரையாடுவது மிக, மிக அவசியமானது.
நமது மக்களாட்சியின் மிகப்பெரிய பலவீனமே குடிமைச் சமூக அமைப்புகள் தோன்றாததும், எல்லா பிரச்சினைகளுக்கும் அரசியல் கட்சிகளையே சார்ந்து இருப்பதும்தான். இதனால்தான் ஊழல் அதிகரிக்கிறது. அதிகாரிகள் குடிமக்களை மதிப்பதில்லை. தாங்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதியின் கட்சி ஆட்சி அமைக்கவில்லையென்றால் தங்கள் வாக்கு வீணாகிவிட்ட தாக மக்கள் நினைக்கிறார்கள். தங்களுக்கும் அரசுக்குமான தொடர்பு அரசியல் பிரதிநிதித்துவம் மட்டும்தான் என்று நினைக்கிறார்கள்.
உண்மையில் சொல்லப்போனால் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளூர் நிர்வாகத்தில் நேரடியாகத் தலையிடக்கூடாது. சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மூலமாகத்தான் அணுக வேண்டும். அதுதான் அதிகாரப் பகிர்வு (separation of powers). இந்த அரசியல் அடிப்படைகள் எல்லாம் குழும்பிப் போயிருப்பதன் விளைவுதான் சட்டமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் அரசே கார் வாங்கிக் கொடுக்கும் அபத்தம். இது சட்டமன்ற உறுப்பினர்களை அரசு நிர்வாகத்தின் பகுதியாக மாற்றிவிடுகிறது. அதிகாரப் பகிர்வு என்ற த த்துவத்தையே பாழாக்கிவிடுகிறது.

நல்லவேளையாக எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் கார்களை பெற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார். அதைத் தொடர்ந்து தவெக அமைச்சரும் தங்கள் கட்சியிலும் ஏற்கனவே கார் வைத்துள்ள உறுப்பினர்கள் பெற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று அறிவித்தார். சி.பி.ஐ கட்சியும் தங்கள் உறுப்பினர்களுக்கு கார் தேவையில்லை என்று கூறிவிட்டது. இந்த நிலை சட்டமன்ற உறுப்பினர்களிடையே வேறுபாடுகளை விதைக்கிறது.
தவெக அரசின் முதிர்ச்சியற்ற செயல்பாடுகளுக்கு ஒரு உதாரணம்தான் இந்த கார் வழங்கும் பிரச்சினை. இதில் முதல்வர் ஏதோ பேரரசர் போலவும். அவர் குறுநில மன்னர்களுக்கு பரிசு வழங்குவது போலவும் தோற்றம் ஏற்படுத்தப்பட்டது அருவருக்கத் தக்கது. இவ்வகையான காட்சிகள் அரங்கேற நேரலை ஒலிபரப்பும் ஒரு காரணமோ என்ற ஐயம் ஏற்படுகிறது.
சட்டமன்றமும், பொதுமன்றமும்
மக்களாட்சியில் சட்டமன்ற கூட்டங்கள் ரகசியமானவை அல்ல. அவற்றிலுள்ள பார்வையாளர் மாடங்களிலிருந்து ஊடகத் துறையினர் அவை நிகழ்ச்சிகளை பார்வையிடலாம். பொதுமக்களும் கூட அதற்குரிய அனுமதி பெற்று அங்கே அமர்ந்து பார்க்கலாம். ஆனால் அதே சமயம், சட்டமன்றம் பொதுமன்றமும் அல்ல. அதில் தனக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கிறது என்று தொடர்பற்ற செய்திகளை எந்த சட்டமன்ற உறுப்பினரும் பேச முடியாது. சட்டமன்ற விதிமுறைகளின்படி அவைத் தலைவர் அனுமதி பெற்றுதான் எதையும் பேச முடியும். முறையின்றி எதையும் பேசினால் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும்.
அதென்ன அவைக்குறிப்பு? ஒவ்வொரு நாளும் சட்டமன்றத்தில் என்னவெல்லாம் பேசப்படுகின்ற து என்பதைத் தொகுத்து ஆவணப்படுத்தி வைப்பார்கள். அந்த ஆவணங்களில் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டவை இடம் பெறாது. அப்படி நீக்கப்பட்ட பேச்சுக்களை செவிமடுத்த ஊடகத் துறையினர் அவற்றை பிரசுரிக்கவோ, வெளிப்படுத்தவோ கூடாது.
அன்றாட வாழ்விலேயே ஒருவர் கண்ணியக் குறைவான சொற்களைப் பேசினால் ஆங்கிலத்தில் அவற்றை ‘அன்பார்லிமெண்டரி வேர்ட்ஸ்” என்று கூறுவது வழக்கம். அதாவது மக்களவையில் பேசக்கூடாது வார்த்தைகள். அந்த வகையில் பொதுமன்ற நாகரீகத்தை வரையறுப்பது அவை நாகரீகம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவர் தரக்குறைவான வார்த்தையை அவையில் பேசினால் அது அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்படும். அந்த நிகழ்ச்சியைக் குறித்து எழுதும் பத்திரிகையாளரும். உறுப்பினர் கோபத்தில் தகாத வார்த்தை பேசினார் என்றுதான் கூறவேண்டுமே தவிர, அதே வார்த்தையை எழுதக்கூடாது. அதுதான் சட்டமன்றத்திற்கும், பொதுமன்றத்திற்குமான தடுப்புச் சுவர்.

சட்டமன்றத்தையே பொதுமன்றமாக்கும் நேரலை
சட்டமன்ற நிகழ்வுகளை நேரலையில் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பினால் உறுப்பினர்கள் மக்கள் பார்க்கிறார்கள் என்ற காரணத்தால் கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது. இது முற்றிலும் தவறான எண்ணமாகும். ஏனெனில் ஒரு உறுப்பினர் கட்டுப்பாடின்றி உணர்ச்சிகளை வெளிப்படுத்தினால் அதனை மக்கள் நேரடியாக பார்த்து விடுவார்கள், அதன்பிறகு அவைத்தலைவர் அதனை குறிப்பிலிருந்து நீக்கினால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று நினைக்க எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
முதல்வர் விஜயே ஒரு சைகை செய்ய அனுமதி உண்டா என்று கேட்டுவிட்டு செய்கை செய்து காட்டினார். இதனை எப்படி அவைக்குறிப்பில் பதிவு செய்வது? விஜயின் நோக்கம் நேரலையில் அதனை மக்கள் பார்ப்பதுதான். அது பிறகு காணொலித் துண்டாக இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரவும். அது தனக்கு புகழ் சேர்க்கும் என்று நினைக்கிறார். அறிவார்ந்த கருத்துப் பரிமாற்றத்திற்கான அவையை அவர் அறிந்த தொழிலான திரைப்படப் படப்பிடிப்பாக மாற்றுகிறார்.
மக்களின் மனோநிலையும் சுவாரசியத்தை நாடுவது. பொதுவாக திரைப்படம் என்று எடுத்துக்கொண்டாலே கருத்தாழமிக்க, நுட்மான வாழ்வியியல் பரிமாணங்களை பதிவு செய்யும் படங்கள் பெரிதாக வெற்றிபெறாது. ஒரு சில வாரங்களாவது ஓடி தயாரிப்புக்கான செலவை ஈட்ட முடிந்தால் அதுவே பெரிய வெற்றி. ஆனால் மலிவான வன்முறைக் காட்சிகள், கிளர்ச்சியூட்டும் நடனங்கள், வெறித்தனமான கோபாவேசக் கூச்சல்கள் ஆகியவை நிரம்பிய படங்கள்தான் மிகப்பெரிய வசூலைக் கொடுக்கும். அவ்வகையான மாஸ் கேளிக்கைப் படங்களில் கதாயகர்களாக நடிப்பவர்களைத்தான் மக்கள் விரும்புவார்கள். அத்தகைய திரைபிம்ப கவர்ச்சியை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர்தான் விஜய் என்பதை மறந்துவிட முடியாது.
எனவே, மக்கள் நேரலையில் சட்டமன்ற நிகழ்வுகளை பார்க்கும்போதும் உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்வதை, எதிர்கட்சியும், ஆளும் கட்சியும் மாறி மாறி கூச்சலிடுவதையெல்லாம்தான் ரசிப்பார்கள். அதைவிடுத்து, விவசாயத்தை எப்படி மேம்படுத்தலாம் என்று விவாதித்தால் சேனலை மாற்றிவிடுவார்கள்.
நேரலையை பார்த்தவர்கள் பலர் ஏன் எதிர்கட்சியினர் ஆவேசமாக தாக்குதல் தொடுக்கவில்லை என்றெல்லாம் கருத்துக் கூறுவதைக் கேட்க முடிந்தது. நாகரீகமாக நடந்து கொண்டால் அது பணிந்து போவதாக நினைத்துவிட வாய்ப்பு இருக்கிறது. அதனால் ஏதாவது ஒரு காரணத்திற்காக பொங்கி எழவேண்டிய நிர்ப்பந்தம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுவிடலாம்.
நல்ல பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கும் கவலை
பொதுவாகவே களப்பணியாளர்கள் ஒன்றினை கவனிக்கலாம். கிராமத்திலோ, நகரத்திலோ ஒருவரிடம் தகவல்களைக் கேட்கிறோம் என்றால் அவர் இயல்பாக நம்முடன் பேசுவார். நாம் ஒரு ஒலிப்பதிவுக் கருவியைக் காட்டி, நீங்கள் கூறுவதை பதிவு செய்துகொள்ளட்டுமா என்று அனுமதி கேட்டுவிட்டால் அதன் பிறகு அவர் பேச்சின் தொனியே மாறிவிடும். தான் என்ன பேசுகிறோம் என்பதைக் குறித்து கூடுதல் தன்னுணர்வு வந்துவிடும்.
அதுவே, காமிராவில் காட்சியாக பதிவு செய்கிறோம் என்றால் ஒரு சிலருக்கு பேசவே வராது. ஒரு சிலர் சிறிதும் இயல்பற்ற முறையில் நாடகீயமாக பேசத் துவங்கி விடுவார்கள். காமிராவில் பதிவு செய்கிறார்கள் என்றால் நாம் நல்ல பர்ஃபார்மன்ஸ் கொடுக்க வேண்டுமே என்ற கவலை வந்துவிடும், அது இயல்பான அவர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருக்காது.
அதனால் களப்பணியாளர் உண்மையிலேயே அவர் நேர்காணல் செய்பவர் மனம் விட்டு பேசிக் கேட்க வேண்டும் என்றால் எந்த பதிவு செய்யும் கருவியையும் பயன்படுத்தக் கூடாது. அப்போதுதான் உண்மை சொல்வார்கள் என்பதல்ல; அப்போதுதான் உண்மையோ, பொய்யோ அது இயல்பாக வெளிப்படும். அனுபவம் உண்மையின் தடங்களை, பொய்யின் சாயைகளை பிரித்தறிய சொல்லித் தரும்.
சட்டமன்ற கூட்ட த் தொடர் முழுவதையும் நேரலையில் காட்டுவது என்பது உறுப்பினர்களிடையே பெர்ஃபார்மன்ஸ் எப்படி கொடுக்கிறோம் என்ற கவலையை அதிகரித்துவிடும். அது இயல்பான கருத்துப் பரிமாற்றம் நடப்பதற்கு மிகப்பெரிய தடையாக மாறும் வாய்ப்பிருக்கிறது. இப்படி சட்டமன்றத்தை பொதுமன்றக் காட்சியாக மாற்றுவதில் பெரிய பயனேதும் இல்லை.

நேரலையா? காட்சித் தொகுப்பா?
உண்மையில் முழுமையான நேரலை என்பது சாத்தியமில்லை. ஒட்டுமொத்த சட்டமன்றமும் காட்சிப்புலத்தில் இருப்பது போலக் காட்டினால் எந்த உறுப்பினரையும் அருகாமையில் காட்ட முடியாது. அப்போது யார் என்ன பேசுகிறார்கள் என்பதே சரியாகப் புரியாது. அதனால் பல்வேறு காமிராக்களை வைத்து, யார் பேசுகிறார்களோ அவர்கள் தெளிவாகத் தெரியும்படி காட்ட வேண்டும். அப்படி செய்யும்போது அவருக்கு எதிரில் இருப்பவர் என்ன செய்கிறார் என்பதைக் காட்ட முடியாது. பேசுபவரது முகபாவம் எதிரில் இருப்பவர் உடல்மொழியால் தீர்மானிக்கப் படலாம். அது காட்சிப் படுத்தப்படாது.
மேலும் ஆளும் கட்சியினர் அதிகம் காட்டப் படுகிறார்களா, எதிர்கட்சியினர் அதிகம் காட்டப் படுகிறார்களா என்பது போன்ற கேள்விகளும் எழத்தான் செய்யும். நேரலை என்பது உண்மையில் ஒரு சிலரால் முடிவு செய்யப்படும் படத்தொகுப்பு எனலாம். உதாரணமாக முதல்வர் அவையில் இல்லையென்பதை காட்டுவதை காமிராக் கோணங்களால் தவிர்க்க முடியும்.
இவ்வகையான காட்சிப்படுத்தல் தேர்வுகளை மேற்கொள்பவர்கள் அவைத்தலைவர், ஆளும் கட்சியினர் கூறும்படியே செய்வார்கள் என்பது இயல்பு. அதனால் காலப்போக்கில் அது எதிர்கட்சியினரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகும். நீங்கள் ஏன் அதைக் காட்டவில்லை, இதைக்காட்டவில்லை என்ற கேள்விகள் அதிகரிக்கும். காமிராவின் காட்சிப்புலத்திற்கு வெளியே ஆளும் கட்சியினர் முதல்வர் சைகை செய்த து போல ஏதாவது செய்கை செய்யலாம். அதனால் கோபமடையும் எதிர்கட்சியினரை மட்டும் காட்டலாம்.

எப்படிப் பகிரலாம்?
சட்டமன்ற நிகழ்வுகளை காணொலிக் காட்சியாக பொதுமன்றத்தில் பகிர வேண்டும் என்றால் அதற்கு நேரலை சிறந்த வழியல்ல. மாறாக, அன்றைய நிகழ்ச்சிகள் முடிந்த பிறகு, மக்களுக்கு உண்மையிலேயே பயனளிக்க க் கூடிய கருத்துப் பரிமாற்றங்களை மட்டும் தொகுத்து சட்டமன்ற வலைத்தளத்தில் டைம் கோடுடன் பகிரலாம்.
அவைக்குறிப்பு ஆவணங்களில் பதினோரு மணி இருபத்திரெண்டு நிமிட த்தில் கல்வித் துறை அமைச்சர் ஆசிரியப் பணி நியமனம் குறித்துப் பேசினார் எனக் காண்பவர், காணொலித் தொகுப்பில் அந்த நேரத்திற்குச் சென்றால் அவர் கூறுவதைக் காணொலியாகக் காண வகை செய்யலாம். ஊடகங்கள் தங்களுக்குத் தேவையான தருணங்களை எடுத்து தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்விதம் செய்யும்போது அவைக்குறிப்பிலிருந்து நீக்குவதற்கும் பொருள் இருக்கும். அவை நாகரீகத்திற்குப் பொருந்தாமல் பேசினால், சைகை செய்தால் அது காணொலித் தொகுப்பில் இடம் பெறாது என்ற நிலை நேரலையில் மக்களுக்காக பெர்ஃபார்மென்ஸ் காட்டும் மனோவியலைத் தவிர்க்கும் எனலாம்.
இறுதியாக ஒன்ரைக் கவனிக்க வேண்டும். ஆளும் கட்சி, எதிர்கட்சி என்பதைக் கடந்து கண்ணியமற்ற நடத்தை, தவறான உச்சரிப்பு, தனி நபர் தாக்குதல்களை ஆகியவை பொதுமன்றத்தில் பகிரப்படுவது மாநிலத்தின் நலனுக்கு உகந்ததல்ல. ஒரு அயல்நாட்டு முதலீட்டாளரே பார்க்கிறார் என்றால், அவர் மனம் மாறி இந்த மாநிலத்தின் சட்டமன்றமே இப்படித்தான் நடைபெறும் என்றால் சட்டம் ஒழுங்கு எவ்வளவு மோசமாக இருக்கும் என்று நினைத்துவிடக் கூடும்.
முக்கியமாக முதல்வர் பெரும்பாலும் முக்கியமான தருணங்களில் மெளனமாக அமர்ந்திருப்பதை பலரும் சாதகமானதாகப் பார்க்க மாட்டார்கள். ஒரு திறமையற்ற நிர்வாகி என்ற மனப்பதிவையே அவர் விட்டேத்தியாக அமர்ந்திருக்கும் கோலம் உருவாக்குகிறது. அது மாநிலத்திற்கு எந்த வகையிலும் நல்லதல்ல. எனவே, அவருக்கு தக்க பேச்சாற்றல், அதற்கான மன ஓர்மை உருவாகும் வரை தவெக அரசு நேரலையை ஒத்திப்போடுவதே நல்லது. நிரந்திரமாக கைவிட்டாலும் இழப்பொன்றுமில்லை. இளம் வயதினர் தவறான தமிழ் உச்சரிப்பை பழகும் ஆபத்தாவது குறையும்.
