AIADMK-வில் இருந்து தவெகவுக்கு தாவும் 10 MLA’s? செங்கோட்டையன் வைத்த பரபரப்பு செக்!

Published On:

| By Pandeeswari Gurusamy

CBI investigation not requested in Kodanadu case

அதிமுகவில் இருந்து மேலும் 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வர உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கச்சேரி மேடு பகுதியில் தமிழக வெற்றிக் கழக அரசின் 100 நாள் சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்டு பேசுகையில்:

ADVERTISEMENT

“பெரியார், அண்ணா வழியில் எம்.ஜி.ஆர் உடன் எனது அரசியல் பயணத்தை 26 வயதில் தொடங்கினேன். அவருடன் மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தேன். ஜெயலலிதா அமைச்சரவையிலும் பங்கேற்றேன். அவருக்குப் பின் வந்தவர்கள் என்னை ஒதுக்கிவிட்டார்கள். ‘இந்த வீதியில் உங்களால் நடக்க முடியுமா?’ என்று கேட்டார்கள். ஆனால், இன்று நான் அமைச்சராக உள்ளேன். எடப்பாடியில் இருந்து வந்து இங்கு சவால் விட்டவர் எதிர்க்கட்சியில் இருக்கிறார். அவரை நேருக்கு நேர் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்; அவர் எனக்கு நல்லதுதான் செய்துள்ளார்.

எங்கு வர வேண்டும் என்பதைச் சரியாகக் கணிக்க என்னால் முடியும். எங்கு சேர்ந்தால் வெற்றி பெற இயலும் என எனக்குத் தெரியும். ஆனால், ஒரு முறையாவது முதலமைச்சராகப் போட்டியிட்டு அவர் வெற்றி பெற்றுள்ளாரா? 11 முறை தோல்வி அடைந்துள்ளார். ‘ஆறு மாதம் கூட இந்த ஆட்சி தாங்குமா?’ என்றார்கள். ஆனால் விஜய் இருக்கும் வரை அவர்தான் முதல்வர்.

ADVERTISEMENT

‘யாரை வேண்டுமானாலும் பணம் கொடுத்து வாங்கி விடுவேன்’ என்கின்றனர். ஆனால், அந்தப் பக்கத்திலிருந்து யாரும் இங்கு வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். அவர் பொறுப்பேற்றதும் மூன்று முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். கோவில் மற்றும் பள்ளிகளுக்கு அருகில் இருந்த 717 மதுக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டன. ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அனைவரின் வரவேற்பையும் பெற்றுள்ளது” என தவெக அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

மேலும் பேசிய அமைச்சர், “அவர் முகத்தைப் பார்க்க எனக்கே ஆசையாக உள்ளது. திரைத்துறையில் உச்சத்தில் இருந்தவர், இன்று அரசியலிலும் ஆட்சியிலும் முதலிடத்தில் உள்ளார். ‘இப்போது பாலியல் குற்றங்களும் குற்றவாளிகளின் நடமாட்டமும் இருக்கிறது’ எனச் சொல்பவர்கள், இன்னும் ஆறு மாதங்களில் பாருங்கள்; மாற்றங்கள் தெரியும். சில ரகசியங்களைச் சொல்ல முடியாது.

ADVERTISEMENT

நாங்கள் 108 இடங்களில் வெற்றி பெற்றோம். ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகியிருந்தால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்போம். ஜனநாயகன் திரைப்படத்தைத் தடுத்தார்கள்; இப்போது ஜனநாயகத்தைக் காக்கும் தலைவராகவே விஜய் வந்துள்ளார். 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளோம். ‘ஆட்சி அமைக்க 118 பேருடன் வாருங்கள்’ என்று ஆளுநர் கூறினார். 47 பேரை வைத்துக்கொண்டு ஒருவரை முதலமைச்சர் என்று சொன்னால், 108 பேரை வைத்துக்கொண்டு நாங்கள் சும்மா இருப்போமா? திமுகவும் அதிமுகவும் கூட்டணி வைத்து முதலமைச்சராகத் திட்டமிட்டால் நாங்கள் விடுவோமா?

முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பின், பணத்தைக் கொடுத்து முதலமைச்சர் ஆனதை வெளியில் இருந்து பார்த்தோம். அது ஒரு ‘செட்டில்மெண்ட்’ ஆட்சி. ஆனால், இது மக்களின் தீர்ப்பு. ‘தேர்தலில் 10 கோடி ரூபாய் கொடுத்தால்தான் சீட்’ என்ற நிலை அதிமுகவில் இருந்தது. அறிமுகமே இல்லாத ஆற்றல் அசோக்குமாருக்கு சீட் வழங்கினால் அவர் எப்படி எம்பி ஆக முடியும்?

எங்கள் இயக்கத்தில் பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் அங்கீகாரம் கிடைக்கும். எங்களை நம்பி வந்த அனைவருக்கும் உண்மையாகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருப்போம்” என்று கூறிய அவர், தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டு அதிமுக குறித்துக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

மேலும் அவர் பேசுகையில், “ஏற்கனவே அதிமுகவில் இருந்த ஆறு பேர் ராஜினாமா செய்துவிட்டு தவெகவிற்கு வந்துவிட்டனர். இன்னும் 10 பேர் வரத் தயாராக இருக்கின்றனர்; அதற்கு மேலும் 25 பேர் வர உள்ளனர். அப்போது எங்களது பலம் உங்களுக்குத் தெரியும். எடப்பாடி பழனிசாமி கொள்கையே இல்லாத தலைவர்.

தொகுதி மறுவரையறை விஷயத்தில் 543 எம்பிக்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். தமிழகத்தில் 39 எம்பிக்களும், மொத்தமாக 543 எம்பிக்களும் இருக்கும்போதே எதுவும் நடக்கவில்லை. 850 எம்பிக்கள் வந்துவிட்டால் ஒன்றுமே நடக்காது. விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நிலையில், இனி தெற்கு வாழும். நல்ல ஆலோசனைகளைச் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள அவர் தயார். எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்தால் 234 தொகுதிகளிலும் தவெக வெற்றி பெறும்” என்றார்.

முன்னதாக நேற்று திருப்பூரில் நடந்த தவெகவின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், “நான் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் பயணித்துள்ளேன். இவ்விரு தலைவர்களுக்குப் பிறகு, அவர்கள் வழியில் தமிழ்நாட்டை மட்டுமல்ல, இந்தியாவையே ஆளும் சக்திதான் விஜய்” என்று தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாகத் தவெக அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் ‘விஜய் பிரதமர் ஆவார்’ என்ற தொனியில் பேசி வரும் நிலையில், மூத்த அமைச்சர் செங்கோட்டையன் “இந்தியாவையே ஆளுகிற சக்திதான் விஜய்” என்று பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share