விஜய் அரசின் ஆணவமும் கோமாளித்தனமும்.. உதயநிதி தாக்கு!

Published On:

| By Mathi

Arrogance, buffoonery of Vijay govt: Udhayanidhi attacks

முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசின் ஆணவம் மற்றும் கோமாளித்தனமான நடவடிக்கைகளுக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தஞ்சாவூரில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.கே.வெங்கடேசன் இல்ல திருமண விழாவில் பங்கேற்று உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: நான் அடிக்கடி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வருகிறேன். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் நான்கு முறை தஞ்சாவூருக்கு வந்திருக்கிறேன். நானே தஞ்சாவூருக்கு வரவில்லை என்றாலும், இந்த அரசு என்னை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வருகிறது.

ADVERTISEMENT

இந்த த.வெ.க அரசால் பெரிதும் பாதிக்கப்படுவது விவசாயிகள் தான். விவசாயிகள் பிரச்சனைகளை இந்த அரசுக்கு புரிய வைக்கும் நோக்கத்தில் போராடுவதற்காகத்தான் நான் தஞ்சாவூருக்கு வந்தேன். ஆனால், காவிரியில் தண்ணீர் வரவில்லை என சொன்னதற்காக என்னை கைது செய்தனர்.

“டம்மி முதலமைச்சராக, செயல்படாத முதலமைச்சராக விஜய் இருக்கிறார்” என அந்தப் போராட்டத்தில் 22 நிமிடங்கள் பேசினேன். ஆனால், அதற்கெல்லாம் அவர்கள் என்னை கைது செய்யவில்லை. “காவிரியில் தண்ணீர் வரவில்லை” என சொன்னதற்காகத்தான் கைது செய்தார்கள்.

ADVERTISEMENT

என்னை கைது செய்து தஞ்சாவூருக்கு அழைத்து வந்தனர். தஞ்சாவூரே ஸ்தம்பித்தது. பிறகு, என்னை கைது செய்ததற்காக நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டு பல்டி அடித்தது இந்த த.வெ.க அரசு.

டெல்டா மண்டலம் எப்போதுமே தி.மு.க.வின் கோட்டை என்பதை இந்த தேர்தலிலும் நிரூபித்திருக்கிறது. டெல்டா மண்டலத்தில் வெறும் நான்கு தொகுதிகளை மட்டும்தான் இந்த ஆளுங்கட்சியினரால் பெற முடிந்தது.

ADVERTISEMENT

கடந்த ஐந்து ஆண்டுகளாக நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில் ஜூன் 12 ஆம் தேதி சரியாக மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால், இந்த அரசு சரியான நேரத்தில் தண்ணீரை திறக்காததால் டெல்டா மாவட்டம் முழுவதும் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, விவசாயிகளுக்கு வறட்சி நிவாரண நிதி அறிவிக்க வேண்டும் என சட்டமன்றத்தில் தொடர்ந்து பேசி வருகிறேன். ஆனால், ‘நிதி இல்லை’ என மறுத்துவிட்டார்கள். விவசாயிகளுக்கு நிதி இல்லை. ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வாங்குவதற்கு மட்டும் பணம் இருக்கிறது.

தி.மு.க எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வேண்டாம். அதற்கு பதிலாக விவசாயிகள் பிரச்சனையை தீர்த்து வையுங்கள்” என நம்முடைய தலைவர் ஏற்கனவே சொல்லிவிட்டார். அதற்கும் ஆளுங்கட்சியினர் சண்டைக்கு வருகிறார்கள்.

தினசரி சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியினர் அடிக்கும் கூத்துக்களை மக்களாகிய நீங்கள் நேரலையாக பார்த்து வருகிறீர்கள்.

மக்கள் பிரச்சினையை பேசுவதற்காக ஆளுங்கட்சியினர் சட்டமன்றத்திற்கு வருவதில்லை, திசைதிருப்பல் அரசியலை மேற்கொள்ளத்தான் வருகிறார்கள்.

நாம் மக்கள் பிரச்சனையை மையப்படுத்தி கேள்வி கேட்டால், முதலமைச்சர் எந்த பதிலும் அளிப்பதில்லை. இந்த மூன்று அமைச்சர்கள் தான் மாறி மாறி பேசுகிறார்கள். அதுவும் நாம் ஒன்று கேட்டால், பதில் வேறொன்றாக வருகிறது.

மக்கள் பிரச்சனையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசாமல் பாடல் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இந்த அரசின் ஆணவத்திற்கும், கோமாளித்தனத்திற்கும் மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள். இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share