மேகமலையில் 118 அரசு ஊழியர்களை வெளியேற்றும் நடவடிக்கைக்கு சிபிஎம் மாநில பொதுச்செயலாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கை: தேனி மாவட்டம் மேகமலையில் 118 அரசு ஊழியர்களை அவர்களின் நிலங்களில் இருந்து உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்ட ஆட்சியர் நாளை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது.
இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்களின் முப்பாட்டன், தாத்தா, அப்பா பயிர் செய்து வந்த நிலங்களை ஆக்கிரமிப்பு என்றும், எனவே அவர்களின் வாரிசுகளான இப்போது அரசு ஊழியர்களாக உள்ளவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றும் வகைப்படுத்தி வெளியேற்ற உத்தரவு வழங்கி உள்ளது உச்சநீதிமன்றம். இல்லை என்றால் ஊழியர்கள் மீது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இது நீதியா? நியாயமா? இதே அணுகுமுறையை நாடு முழுவதும் கடைப்பிடித்தால் பல்லாயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் தங்கள் பணியை இழக்க வேண்டும் அல்லது நிலத்தை இழக்க வேண்டும்.
பட்டா இல்லாதவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்றால் நூறாண்டுகளாக பயிர் செய்தும், குடியிருந்து வரும் மக்களுக்கு பட்டா கொடுக்காததற்கு யார் பொறுப்பு ஏற்பது? அனுபவ நிலங்களுக்கு பட்டா கொடுக்காமல் இருந்த ஆட்சியாளர்கள் மீது என்ன நடவடிக்கை! வன உரிமைச்சட்டம் 2006, 20 ஆண்டுகளாக அமலில் இருந்தும் சட்டத்தை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை?
உச்சநீதிமன்ற நீதிபதிகள் “ஆக்கிரமிப்பு கண்ணாடியை” அணிந்து கொண்டு பார்த்தால் ஆக்கிரமிப்பாகத் தான் தெரியும். மக்களின் வாழ்வாதாரம் என்ற “மனிதாபிமான கண்ணாடியை” அணிந்து கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும். இவ்வாறு பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
