என்னது ‘அம்மை வார்த்தவர்கள் தங்குவதற்கு’ கோவிலில் தனி மண்டபமா? புதிய சர்ச்சையில் விஜய் அரசு

Published On:

| By Mathi

Chickenpox treatment hall in temple? A fresh controversy involving Vijay govt

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் ‘அம்மை வார்த்தவர்கள் தங்குவதற்கு’ தனி மண்டபம் கட்ட ரூ.1.50 கோடி ஒதுக்கப்பட்டதாக வெளியான தமிழக அரசின் அறிவிப்பால் சர்ச்சை வெடித்துள்ளது.

தமிழக சட்டசபையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தாக்கல் செய்த மானிய கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்”.. ரூ.1.50 கோடியில் திருச்சி- திருவரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலின் உபகோவிலான அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்” என்கிற அறிவிப்பு இடம் பெற்றிருந்தது.

ADVERTISEMENT

இது தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ டாக்டர் எழிலன், “ எந்த உலகத்தில் உள்ளீர்கள் ? தந்தை பெரியார் உங்கள் கொள்கை தலைவரா…. அவரின் தடியடி தான் உங்களுக்கு.. அம்மை தடுப்பூசியை தமிழ்நாட்டில் விஜய் அரசு குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல்..அதை விட்டுவிட்டு மண்டபம் அமைப்பது?

Antiviral drugs and chicken pox vaccine are very much available everywhere in the state
Don’t push back Tamil society back to its superstitious days” என விமர்சித்திருந்தார்.

ADVERTISEMENT

அவிநாசி தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் டாக்டர் கோகிலாமணி, “ அடுத்து என்ன? மஞ்சள் காமாலைக்கு சூடு போடும் திட்டமா?

அறிவியலை அடிப்படையாகக் கொண்ட பொது சுகாதாரக் கொள்கைகளை முன்னெடுக்க வேண்டிய அரசு, பொது சுகாதாரத்திற்கே அச்சுறுத்தலாக அமையும் நடைமுறைகளை மக்கள் வரிப்பணத்தில் ஊக்குவிப்பதைப் பார்த்தால், எங்கே போய் சுவரில் முட்டிக்கொள்வதென்றே தெரியவில்லை!

ADVERTISEMENT

அம்மை போன்ற தொற்று நோய்களை எதிர்கொள்ள நவீன மருத்துவக் கண்காணிப்பு, உரிய தனிமைப்படுத்தல், தொற்று தடுப்பு மற்றும் தடுப்பூசி போன்ற அறிவியல் அடிப்படையிலான நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக, நோய் பாதித்தவர்களை ஒரே இடத்தில் தங்க வைக்கும் நடைமுறைக்கு அரசே ஆதரவளிப்பது தொற்று கட்டுப்பாட்டின் அடிப்படை நோக்கத்திற்கே முரணானது.

உரிய மருத்துவ மற்றும் தொற்று தடுப்பு ஏற்பாடுகள் இல்லையெனில், இது சமூகப் பரவல் அபாயத்தையும் அதிகரிக்கக்கூடும்.

மக்களின் நம்பிக்கைகள் அவர்களின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு அரசின் கொள்கைகளும் திட்டங்களும் பொது சுகாதாரத்தைப் பல தசாப்தங்கள் பின்னோக்கி இழுத்துச் செல்லக் கூடாது

​பொது சுகாதாரத்தை அறிவியல்பூர்வமாக அணுகத் தவறிய அரசின் இந்த ஆபத்தான முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.

சமூக வலைதலங்களில் பலரும் இந்த அறிவிப்பை தொடர்ந்து விமர்சித்தனர்.

இதனையடுத்து இந்து சமய அறநிலையத் துறை தரப்பில், “அம்மை வார்த்து குணமாகியவர்கள் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனுக்காக தங்கி வழிபடுவதற்காக மண்டபம் அமைப்பது இந்த அறிவிப்பின் நோக்கம். சிலர் திட்டமிட்டு, அம்மை வார்த்தவர்கள் மற்றவர்களுக்கு பரவும் வகையில் தங்குவதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என தவறாகப் பரப்புகிறார்கள். இது முற்றிலும் தவறான தகவல். உண்மைக்குப் புறம்பான செய்திகளை நம்பவோ, பரப்பவோ வேண்டாம்” என தெரிவிக்கப்பட்டது.

இந்த விளக்கம் தொடர்பாக டாக்டர் கோகிலாமணி தமது எக்ஸ் பக்கத்தில், “ எதிர்ப்புக்குப் பிறகு அந்தர்பல்டி! முதலில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில் “அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம்” என்று அச்சிட்டுவிட்டு, கடும் எதிர்ப்பு வந்ததும் அவசர அவசரமாக நள்ளிரவு 12.20 மணிக்கு “குணமானவர்கள்” என அந்தர்பல்டி அடித்துவிட்டு, விமர்சகர்கள் மீது பழிபோடுகிறது தவெக அரசு.

தப்பு நடந்தால் அதை ஒப்புக்கொண்டு திருத்திக்கொள்ள வேண்டும். அதைவிட்டுவிட்டு அடுத்தவர்கள் மேல் பழிபோடும் இந்தப் பொழப்பை எப்போது கைவிடப் போகிறது இந்தக் கையாலாகாத தவெக அரசு?

சரி. “குணமான பிறகு” என்றால் யார் குணமானது என்று முடிவு செய்வது?
மருத்துவரின் சான்றிதழ் வேண்டுமா? எந்த நாளிலிருந்து அவர்கள் தங்கலாம்?

அம்மை கொப்புளங்கள் உலர்ந்து crust ஆகிவிட்டதா என்பதை யார் உறுதி செய்வார்கள்? Varicella பாதிப்பில், lesions crust ஆகும் வரை தொற்று பரவும் அபாயம் உள்ளது. அப்படியிருக்க, நோய் பாதித்தவர்கள் தங்கும் இடத்தில் தொற்றுள்ள ஒருவர் தவறுதலாக வந்தால், அங்கு வரும் பிற பக்தர்களுக்குத் தொற்று பரவாதா?

“சிலர் திட்டமிட்டு உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பரப்புகிறார்கள்” என்று சொல்கிறீர்களே… ஓஹோ… ஓஹோ… அடுத்த பொய் வழக்குப் போடுவதற்கான திட்டத்தைத் தீட்ட ஆரம்பிச்சுட்டாங்க போல” என மீண்டும் விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமான “தகவல் நம்பகத்தன்மை பிரிவு” வெளியிட்ட விளக்கம்: அம்மை வார்த்தவர்கள் தங்கும் மண்டபம் தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல் !

பரவும் செய்தி

அம்மை தடுப்பூசியை குழந்தைகளுக்கு மருத்துவமனைகளில் வழங்க வழி செய்யாமல், அவர்களுக்காக மண்டபம் அமைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன?

இது முற்றிலும் தவறான தகவல்.

இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அளித்துள்ள விளக்கத்தில், “அன்பில் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில், அம்மை வார்த்து குணமானவர்கள் தங்களின் பிரார்த்தனை மற்றும் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், திருக்கோயிலில் தங்கி வழிபடுவதற்காக மண்டபம் வேண்டும் என்ற பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது”என தெரிவிக்கப்பட்டுள்ளது. தவறான தகவலைப் பரப்பாதீர் !. இவ்வாறு தமிழக அரசு மீண்டும் விளக்கம் தந்துள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share