தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தன்னைப்பற்றி சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ குறித்து தனது எக்ஸ் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் “ஒரு பெண் தன் அன்றாட வேலையைப் பார்த்துக்கொண்டு இயல்பாகச் செல்வதைக் காட்டும் ஒரு காணொளி அரசியல் ரீதியான கொந்தளிப்பை ஏற்படுத்துவது, அதன் பின்னணியில் உள்ள பலவீனமான மற்றும் பிற்போக்குத்தனமான மனநிலையையே காட்டுகிறது. ஆனால் இது எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை!
பெண்களைப் பற்றி தொடர்ந்து மிகவும் அவதூறாகப் பேசிவரும் ஒரு தலைவரைப் பின்பற்றுபவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?அந்த வீடியோவில் இருக்கும் பெண் நான் அல்ல என்பதை தெளிவுபடுத்துவதற்காகக் கூறுகிறேன். ஒருவேளை அது நானாகவே இருந்தாலும், அதனால் என்ன பிரச்சனை?
ஒரு பெண்ணின் உடைகள், அவளது தோற்றம் அல்லது அவளது மகிழ்ச்சி ஆகியவை ஏன் இன்னும் பொதுவெளியில் விசாரணைக்குரிய விஷயங்களாக நடத்தப்படுகின்றன?
எங்கள் கொள்கைகள், ஆட்சி முறை அல்லது சாதனைகள் குறித்து எங்களை அவர்களால் எதிர்கொள்ள முடியாதபோது, தலைவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி போலி கதைகளை உருவாக்கத் தொடங்கிவிடுகிறார்கள். நேர்மறையாகப் பங்களிக்க எதுவும் இல்லாதவர்களின் மிகப்பழைய ஆயுதமே பெண் வெறுப்புதான்.
மேலும், வெறும் முகச்சாயல் ஒற்றுமைக்காக இந்த விவகாரத்திற்குள் இழுக்கப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, நீங்கள் என்னை மன்னியுங்கள். மிகவும் அழகாக இருக்கிறீர்கள், உங்கள் சொந்த விருப்பப்படி தொடர்ந்து வாழ வாழ்த்துகிறேன் (அத்துடன் உங்கள் தலைமுடி ஹேர்-ஹைலைட்ஸ் மிகவும் நன்றாக இருக்கிறது)!” என தெரிவித்துள்ளார்.
