பணி நிரந்தரம், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சென்னை பெரியமேடு பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், முதலமைச்சர் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். அப்போது, சில பெண் பணியாளர்கள் அம்பேத்கர் சிலையை கட்டித் தழுவி கண்ணீர் மல்கக் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களைக் காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அதில் சிலர் ஏறுவதற்கு மறுப்பு தெரிவித்தனர். அவர்கள் குண்டுக்கட்டாக தூக்கி காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையருடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின் உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் பாரதி செய்தியாளர்களிடம் பேசிகையில்,”பென்ஸ், ஆடி, டிஃபெண்டர் உள்ளிட்ட விலை உயர்ந்த கார் வைத்திருக்கும் எம்.எல்.ஏ-க்களுக்குப் புதிய கார் வேண்டும் என்று கேட்டவுடன், உடனே கார் அறிவிப்பு வருகிறது. அடுத்த நாளே மகேந்திரா கார் வந்து நிற்கிறது. ஆனால், வாழ்க்கையில் 10, 20 ஆண்டுகள் வேலை பார்த்த தூய்மைப் பணியாளர்களாகிய எங்களுக்கு ரூ.19,000 சம்பளம் போதவில்லை என்று சொன்னால் அரசு கண்டுகொள்வதில்லை.
எம்.எல்.ஏ-க்களின் எரிபொருள் செலவுக்கு ரூ. 75,000 மற்றும் உதவியாளருக்கு ரூ.25,000 வழங்கப்படுகிறது. எம்.எல்.ஏ-வின் உதவியாளருக்கு மாதம் ரூ.25,000 தேவைப்படும் எனக் கருதும் அரசு, இறந்துபோன விலங்குகளை அகற்றுபவர்கள், கழிவுகளைக் கையாள்பவர்கள், குப்பை அள்ளுபவர்கள் என நோய் நொடிகளை எதிர்கொள்ளும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஏன் குறைந்தபட்சச் சம்பளமாக ரூ.25,000 வழங்கக் கூடாது? குறைந்த பட்சமாக ஆட்சியர் ரூ.832 தினக்கூலியாக அறிவித்தும், அந்தச் சம்பளத்தைக் கொடுப்பதற்குக்கூட அரசுக்கு ஏன் மனமில்லை?
ஒரு எம்.எல்.ஏ ஆட்டோவில் வருகிறேன் என்று சொன்னால் யோசிக்கும் அரசு, கார் வைத்திருக்கும் அவர்களுக்குக் கரிசனத்துடன் கார் வழங்க யோசிக்கிறது. ஆனால், சாதாரண மக்களுக்குச் சம்பளம் கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது?
அரசு ஊழியர்களுக்கு மூன்றாவது குழந்தைக்கு ஒன்றரை மாதமாக இருந்த விடுப்பை ஓராண்டாகச் சம்பளத்துடன் நீட்டிக்கிறது. இதில் தவறு இல்லை; மகளிருக்கு கொடுத்தாலும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்தாலும் தவறில்லை. ஆனால், மாநகராட்சியில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு கிடையாது என்கின்றனர். இங்கு வேலை செய்பவர்கள் எல்லாம் கொத்தடிமைகளா? இந்த பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ளக் கூடாதா? எங்களுக்கெல்லாம் அந்தத் தகுதி இல்லையா? இங்கு வேலை செய்பவர்கள் பூர்வகுடி மக்கள், அருந்ததியர், ஆதி திராவிடர் மற்றும் அனைத்துச் சமூகங்களைச் சேர்ந்த ஏழைப் பெண்கள். மூன்றாவது குழந்தைக்கு ஓராண்டு விடுமுறை அளிக்கும்போது, முதல் குழந்தைக்குக் கூட இந்த மக்களுக்கு விடுமுறை தேவைப்படாதா? எங்களுக்கு மகப்பேறு விடுப்பை அரசு அறிவித்தே தீர வேண்டும்.
365 நாட்களும் தூய்மைப் பணியாளர்கள் உழைக்கிறார்கள். ஆனால், ஒரே ஒரு நாள் கூட சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடையாது. காலில் குப்பை வண்டி ஏறினாலோ, பாட்டில் குத்தினாலோ, நாய் கடித்தாலோ, நோய் வாய்ப்பட்டாலோ எதற்கும் விடுப்பு வழங்கப்படுவதில்லை. இவர்களை மனிதர்களாகவே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை.
தற்போது காவல்துறையினர் தூய்மைப்பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொந்தரவு கொடுக்க ஆரம்பித்துள்ளனர். நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களைச் சீருடை அணியாத காவல்துறையினர் தாக்கினர். பெண் தூய்மைப் பணியாளர்கள் போராடும் இடத்தில் ஆண் காவல்துறையினரை நிறுத்துவது மிகவும் ஆபத்தானது. சீருடை இல்லாத ஆண்களைக் களமிறக்க காவல்துறைக்கு என்ன மனநிலை இருக்கிறது? பெண்கள் மீது கை வைத்தால் அவர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். முதலமைச்சரைச் சந்தித்துத் தீர்வு காணும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என உறுதிபடத் தெரிவித்தார்.
