அண்ணன் என்னடா.. தம்பி என்னடா.. அரசியல் உலகத்தில்? – துரைமுருகன் பளீச் பதில்

Published On:

| By Pandeeswari Gurusamy

Duraimurugan Sand ED

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிக்காரன் வாளோடும், ஆளுங்கட்சிக்காரன் கேடயத்தோடுதான் செல்ல வேண்டும். அரசியல் உலகத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா என திமுக முன்னாள் அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

திமுக பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் இன்று வேலூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சட்டசபையில் எதிர்கட்சியினர் ஆளும் கட்சியினரை நோக்கி மாமா, மச்சான் என கூப்பிடுவது குறித்த கேள்விக்கு, ” நாங்களெல்லாம் சுமார் 50 வருஷமா இருந்திருக்கோம். எத்தனையோ எம்.ஜி.ஆர், அண்ணா, கலைஞர் , ஜெயலலிதா ஓபிஎஸ், ஈபிஎஸ், என எல்லோர் பீரியடையும் பார்த்திருக்கிறோம்.

ADVERTISEMENT

எப்பவுமே இந்த மாதிரியெல்லாம் வந்தது கிடையாது. ‘மாமா’, ‘மச்சான்’ எனக்கு வேண்டியவருங்க என்றெல்லாம் இல்லை. எதிரினா எதிரியாதான் இருக்கணும். சபைக்குள் என்ன சார் ‘மாமா’, ‘மச்சான்’ உறவு? சபைக்குள் ‘அண்ணன் என்னடா, தம்பி என்னடா அரசியல் உலகத்தில்’? அதுதான் என் கேள்வி!

“நாங்கள் அப்படித்தான் இருந்தோம். என்னை வளர்த்தவர் எம்.ஜி.ஆர்.; 7 வருஷம் படிக்க வச்சவர் எம்.ஜி.ஆர். என்னை கூப்பிட்டு ‘வாடா, வந்து பதவியை ஏத்துக்கோ’ன்னு சொன்னவர் எம்.ஜி.ஆர். அப்பக் கூட நான், ‘என் கட்சி திமுக.. நான் ஏற்க முடியாது’ன்னு சொன்னவன் நான்.”

ADVERTISEMENT

அவர் பாராட்டி விட்டு ‘உன்னுடைய உறுதியை நான் பாராட்டுறேன்டா… இவ்வளவு உறுதியாக இருப்பாய் என்று நான் நினைக்க வில்லை என்றார். ‘நான் உங்களைப் பார்த்து கட்சிக்கு வரல, அண்ணா திராவிட நாடு கேட்டாரே.. அப்போது ஒரு போராளியாக போக வேண்டும் என நினைத்து வந்தவன் நான். எனக்கு அந்த ஐடியாலஜிதான் நிற்கிறதே தவிர, யாரைப் பார்த்தும் நான் வரவில்லை’ என்று சொன்னவன் நான்.

ஆனால், அப்பேர்ப்பட்ட என்னை வளர்த்த தாயுள்ளம் கொண்ட எம்.ஜி.ஆரையே… அவரு என்னுடைய கல்யாணத்துக்கு வர்றதுக்கு சார்ட்டர் பிளைட் பிடிச்சுட்டு வந்து.. 25 பவுன் செயின் போட்டு, சாப்பிட்டு விட்டு எல்லாரையும் சாப்பிட வச்சுட்டு போன அந்த எம்.ஜி.ஆரையே… சட்டமன்றத்திலே நேருக்கு நேர் நின்று கேள்வி கேட்டவன் நான்.

ADVERTISEMENT

ஈந்து சிவந்தது எம்.ஜி.ஆர். திருக்கரம்’… ஒரு காலத்தில் கேட்டு நாங்க கைதட்டி கைதட்டி காய்ச்சு போய் விட்டது. இன்றைக்கு ‘ஈந்து சிவந்தது இல்லை, வாங்கிச் சிவந்தது’ன்னு சொன்னேன்.

அவர் எதிரில் உட்கார்ந்து டேய்.. என்றார். அப்படி நேருக்கு நேர் மோதணும்! களத்துல போய் ‘அண்ணன் என்னடா தம்பி என்னடா’ன்னு பாடுறவதுதான். சுருக்கமா சொல்றேங்க… எதிர்க்கட்சிக்காரன் வாளோடு சபைக்கு போக வேண்டும். ஆளுங்கட்சிக்காரன் கேடயத்தோடுதான் வரணும். இவன் சுழற்றி வாளை வீசுவான், அவன் தடுக்கணும். தடுக்க முடிஞ்சா தடுக்கணும், இல்லைன்னா சலாம் போட்டு போகணும்!” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share