பொத்தாம் பொதுவாக பத்திரிகைகள் குறித்து ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவோ காசு வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்று அமைச்சர்கள் இந்த அவையில் சொல்வது அழகல்ல என திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், ” திமுக ஆட்சியில் தொழில் துறை இந்தியாவில் முதல் மாநிலம் என்ற அந்தஸ்தை பெற்றது. கடந்த 13.08.2026 அன்று ஒரு முதலீட்டாளர் மாநாட்டை கூட்டினீர்கள். அதில் பத்திரிகைகளைக் கூட அனுமதிக்கவில்லை. அந்த மாநாட்டில் 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன” என்று பேசினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “‘ரகசியம்’ என்ற வார்த்தை அவைக்குப் புறம்பானது; அதைப் பயன்படுத்தக் கூடாது” என தெரிவித்ததை தொடர்ந்து அதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ ஆஸ்டின், “04.06.2026 மற்றும் 09.07.2026 அன்று எல் அண்ட் டி (L&T) மற்றும் விக்ரம் சோலார் நிறுவனங்கள் மூலம் ரூ. 33 ஆயிரம் கோடி முதலீடு வந்ததாகவும், 97 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும் சொல்லியுள்ளீர்கள். இதில் எத்தனை நிறுவனங்களுடன் புதிதாக ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது? எங்களது கணக்குப்படி, கிட்டத்தட்ட 80 சதவீதம் வரை ஏற்கனவே திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொழிலைத் தொடங்கி, இங்கு முதலீடு செய்து தொழில் செய்து கொண்டிருக்கும் நிறுவனங்களின் விரிவாக்கமாகத்தான் இதனை நீங்கள் எடுத்துள்ளீர்கள். அதை நாங்கள் இல்லை என்று சொல்லவில்லை. ஆனால், புதிய தொழில் ஒரு 10 சதவீதம் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். மற்றவை திராவிட மாடல் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முதலீட்டாளர்களின் நிறுவனங்களின் விரிவாக்கமாகத்தான் இந்த ஒரு லட்சம் கோடி முதலீட்டை நான் பார்க்கிறேன்” என்றார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் கீர்த்தனா, “திமுக ஆட்சியில் இருந்தபோது, முதல் 30 நாட்களில் எவ்வளவு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன?” என்று கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த திமுக உறுப்பினர் ஆஸ்டின், “2021-ல் ஆட்சிப் பொறுப்பேற்ற போது கொரோனா உச்சத்தில் இருந்த காலகட்டம். அந்த நெருக்கடியான நேரத்தில் கூட, மூன்று மாத காலத்தில் ரூ. 44,036 கோடியாக திட்ட முதலீட்டைக் கொண்டு வந்துள்ளோம். ஒப்பீடு சொல்ல வேண்டும் என்றால், கடந்த 13-ஆம் தேதி தான் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினீர்கள். நான்கு மாநிலங்களுக்கு இடையில் ஜூலை 31 அன்று முதல் காலாண்டுகளுக்கான தொழில் முதலீட்டு ஒப்பீடு வெளியானது.
கடந்த 2021-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்கும், 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குமான ஒப்பீட்டில், கர்நாடகாவில் வளர்ச்சி விகிதம் 232.53 சதவீதம் அதிகரித்துள்ளது; கேரளாவில் முந்தைய காலாண்டை விட 294.94 சதவீதம் அதிகரித்துள்ளது; மேற்கு வங்கத்தில் 119.58 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் முந்தைய காலாண்டை விட 74.48 சதவீதம் சரிந்துள்ளது. இதை யாரும் மறுக்க முடியாது” என்றார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் கீர்த்தனா, “அவர் குற்றச்சாட்டை பயங்கரமாக வைக்கிறார். ‘ப்ராஜெக்ட்ஸ் டுடே’ என்ற ஒரு பத்திரிகை உள்ளது. அந்தப் பத்திரிகையில் நீங்கள் காசு கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் எழுதுவார்கள். அது ஒரு தனியார் பத்திரிகை. அதில் எழுதப்பட்ட ஒரு தவறான செய்தியை இங்கு எடுத்து வந்து படித்து, நமது தமிழ்நாடு எங்கேயோ போய்க்கொண்டிருக்கிறது என்ற தப்பான நோக்கத்தை சொல்லக்கூடாது.
வந்த மூன்றே மாதத்தில் ஒரு லட்சம் கோடி முதலீடு என்பதை இன்று வரை எந்த அரசாங்கமும் செய்யவில்லை; நாங்கள் செய்துள்ளோம். ஒரு லட்சம் இளைஞர்களுக்கும் இதனால் வேலை கிடைக்கப் போகிறது. இங்கு அரசியல் பார்க்காமல் இருக்க வேண்டும். தொழில்துறை என்பது ஒரு சென்சிடிவான விவகாரம். இதை முதலீட்டாளர்கள் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதில் அரசியல் என்பதைப் புகுத்தக் கூடாது. இங்கிருக்கும் 234 உறுப்பினர்களும் 1.5 ட்ரில்லியன் பொருளாதாரத்தை எட்ட உதவ வேண்டும். அந்த அரசு செய்தது, இந்த அரசு செய்தது என்று அரசியல் செய்யாமல், இளைஞர்களை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்தால் இதைப் பற்றி நீங்கள் பேச மாட்டீர்கள்” என்றார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக எம்.எல்.ஏ எ.வ. வேலு, “சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் குறிப்பைக் கொண்டும், கொள்கை விளக்கப் புத்தகத்தை வைத்தும், வெளியிலிருந்து வரும் செய்திகளை வைத்தும்தான் ஒப்பீட்டைச் செய்து பேச முடியும். அரசைப் பொறுத்தவரை, அவர்களுக்குத் தகவல்களைச் சேகரிக்க அதிகாரிகள் இருக்கிறார்கள். நாங்கள் சொல்லும் ஒப்பீடு சரியில்லை என்று சொல்ல அவர்களுக்கு முழு உரிமை உள்ளது; அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அதைச் சொல்லும்போது, ‘காசு கொடுத்தால் பத்திரிகைக்காரர்கள் எதை வேண்டுமானாலும் எழுதுவார்கள்’ என்று சொல்வது ஒட்டுமொத்த ஜனநாயகத்தை இழிவுபடுத்துவதாகும். ஜனநாயகத்தின் நான்காவது தூண் பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள். அதை கொச்சைப்படுத்தக் கூடாது என்பதுதான் எனது முதல் பிரச்சனை” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய திமுக எம்.எல்.ஏ தங்கம் தென்னரசு, “ஒரு அரசாங்கத்தின் செயல்பாடுகள் குறித்து மூன்றாவது கண்ணாக இருந்து விமர்சனங்களை எடுத்து வைப்பது பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள். அந்தப் பத்திரிகைகளில் வரக்கூடிய செய்திகளின் மீது இப்படி அவையில் சொல்லக் கூடாது. என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதைப்பற்றி அவர்கள் எழுதுவார்கள். எழுதினால்தான் ஒப்பீடுகளைச் செய்ய முடியும். அப்படி எழுதும் பத்திரிகைகளை, ஆளுங்கட்சிக்கு ஆதரவாகவோ அல்லது எதிர்க்கட்சிக்கு ஆதரவாகவோ காசுகளை வாங்கிக்கொண்டு எழுதுகிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக பத்திரிகைகள் குறித்து அமைச்சர்கள் இந்த அவையில் சொல்லக் கூடாது. ஒரு குறிப்பிட்ட பத்திரிகை ஒரு ஒப்பீட்டைச் செய்திருக்கிறது, புள்ளிவிவரத்தைக் கொடுத்திருக்கிறது என்பதற்காக, இவர்கள் காசு வாங்கிக்கொண்டார்கள் என்று குறிப்பிடும்போது, அது ஒட்டுமொத்தமாக எல்லாப் பத்திரிகைகளையும் குறிப்பிடுவதாக அமைந்துவிடும். எனவே, அதுபோன்ற ஒரு நிலைப்பாட்டையோ அல்லது செய்தியையோ அமைச்சர் அவையில் சொல்வது அழகல்ல” என்றார்.
இதைத் தொடர்ந்து பேசிய சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார், “ஒருசில பத்திரிகைகள் அவர்களுக்குத் தேவையான செய்திகளை வெளியிடுகின்றன என்றுதான் அமைச்சர் சொல்கிறார். அதை எடுத்து வந்து இதுபோன்ற ஒரு சபையில் பேசும்போது, முதலீட்டாளர்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குத் தவறான எண்ணம் உருவாகும், அதன் மூலம் மாநிலத்திற்குக் கெட்ட பெயர் வரும் என்ற எண்ணத்தில்தான் அவர் சொன்னார். அதற்கு ஆதாரப்பூர்வமாக தேசிய அளவில் கொடுக்கப்படும் கணக்கீடுகளைச் சொல்லலாம். ‘லஞ்சம், ஊழலுக்கு எதிராக முதல்வர் விஜய் சாட்டையை சுழற்றுகிறார்’ என்று தினத்தந்தியில் எழுதியிருந்தார்கள். அதுபோன்ற விஷயங்களை நாம் கண்டிப்பாக நம்புகிறோம். ஏனென்றால், ஆக்கபூர்வமான, நம்பகத்தன்மை உள்ள பத்திரிகைகள் நிறைய உள்ளன. அதையெல்லாம் நாம் கண்டிப்பாக எடுத்துக் கொள்கிறோம். நம்பகத்தன்மை இல்லாத பத்திரிகைகளை மட்டும்தான் அவர் குறிப்பிடுகிறார்” என்றார்.
