பேரவையில் காதுகளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை ஒருவருக்கொருவர் வீசிக்கொள்வது எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பினாமிகள் குறித்து பேசியதைத் தொடர்ந்து ஆளும் கட்சியான தவெக மற்றும் திமுக இடையே கடும் வாக்குவாதம் நடந்தது. இதைத் தொடர்ந்து பேசிய பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர், ” வருத்தத்துடன் ஒரு கருத்தை வெளியிட விரும்புகிறேன். மிகுந்த ஜனநாயக உணர்வோடும் அன்போடும், சபை கண்ணியத்தை மீறாமல், அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்த சபையை இப்படித்தான் நடத்த வேண்டும் என்று மக்கள் விரும்புகிற அளவிற்கு நடத்த வேண்டும் என்று இறைவன் அருளால் முதல்வர் அளித்த இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அப்படித்தான் இதுகாறும் நடந்தது. ஆனால் கடந்த இரண்டு நாட்களாக, சில உறுப்பினர்கள், முன்வரிசையில் இருக்கும் மூத்த உறுப்பினர்களை நான் குறிப்பிட மாட்டேன், பின் வரிசைகளில் இருப்பவர்கள் இரண்டு புறமும் தங்களது இருப்பைக் காட்டிக்கொள்ள மேலே ஏறி வந்து, எல்லைகளைத் தாண்டி, இருக்கைகளைத் தாண்டி வந்து தாவிக்குதிப்பதும், கையை நீட்டிக்கொண்டு ஓடிவருவதும், தகாத வார்த்தைகளால் இந்த அவையில் காதுகளில் கேட்கக்கூடாத வார்த்தைகளை ஒருவருக்கொருவர் வீசிக்கொள்வதும் எனக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பார்க்கும் மக்களும் என்ன நினைப்பார்கள் என்ற கவலையும் எனக்கு இருக்கிறது; ஏனென்றால் நேரடி ஒளிபரப்பு போய்க்கொண்டிருக்கிறது.
சாதாரணமாக மிக அமைதியாக இருந்த, பெயர் சொல்ல விரும்பாத பேரறிஞர் அண்ணாவின் பெயரைத் தாங்கி இருக்கும் அந்த உறுப்பினர் கூட, இன்று முதல்முறையாக ஒரு வார்த்தை அவர் வாயிலிருந்து வந்தது. இவர் கூட இப்படி பேசுவாரா என்று நான் நினைத்துக் கொண்டிருக்கையில், இந்தப் புறத்தில் இருந்து அதே வார்த்தை வருகிறது.
‘முன்னால் வராதீர்கள்’ என்று சொன்ன பிறகும், நமது உறுப்பினர் ஆஸ்டின் இருக்கையை விட்டு எழுந்து வருகிறார். இந்த எல்லையைத் தாண்டி விடுவாரோ என்ற கவலையில் நான் ஆழ்ந்துவிடும் அளவிற்கு வருகிறார். நாம் எதை சாதிக்கப் போகிறோம்? எதை நோக்கி இது போய்க்கொண்டிருக்கிறது? என்ற எண்ணத்தை உங்கள் உள்ளத்தில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இது முறையல்ல.
என்னைப் பொறுத்தவரை, யாரையும் இந்த அவையை விட்டுப் பேரவைத் தலைவர் அனுப்பினார் என்ற வருத்தத்திற்குரிய செய்கைக்கு நான் ஆட்பட்டு விடக்கூடாது என்ற கவலையில் சொல்கிறேன். யாரையும் வெளியேற்றுவது எனது நோக்கம் அல்ல. அப்படி வெளியேற்றுவதை நியாயப்படுத்திப் பேசும் நிலைமையை எனக்கு உருவாக்க கூடாது என்றுதான் நான் நினைக்கிறேன். ஆனால், சபையின் மாண்பு, பார்த்துக் கொண்டிருக்கும் மக்களும், சக உறுப்பினர்களும் நம்மைப்பற்றி என்ன நினைப்பார்கள்? இது கட்டுப்பாடு இல்லாமல் போக அனுமதித்தால், அவையை யார் தான் கட்டுப்படுத்துவது? என்ற கவலை எனக்கு வந்திருக்கிறது.
நான் மீண்டும் சொல்கிறேன், இந்த அவையின் மரபையும், கண்ணியத்தையும், கௌரவத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் உள்ளது. உங்களைப் பொறுத்தவரை, இரண்டு தண்டவாளங்கள் இருந்தால் தான் ஒரு ரயில் வண்டி வேகமாக ஓட முடியும் என்ற முதுமொழிக்கு ஏற்பத்தான் இந்த அவையை நடத்த முடியும். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் ஒத்துழைப்பு வேண்டும்.

சில விஷயங்களை பொதுவாகச் சொல்லிக்கொண்டே போகிறார்கள். காலையில் கூட மதுரை உறுப்பினர் பேசுகையில், ஆதாரம் இருக்கிறதா என்று நான் பார்த்தேன், ஆதாரம் இருந்தது. ஆதாரம் இருந்தால் கூட, இதை வெளியிட்டு நான் அதை வளர்க்க விரும்பவில்லை. மக்கள் நலனுக்காகவும் அவையின் கண்ணியத்திற்காகவும் அதை நான் வெளியிட விரும்பவில்லை என்று சொன்னேன்.
இது எதை காட்டுகிறது என்றால், இங்கு இருந்து வெளியேறும் செய்திகள் இந்த நாட்டிற்கு என்ன நல்லுரைகளைத் தருகிறோம்? ஆலோசனைகளைத் தருகிறோம்? திட்டங்களைத் தருகிறோம்? எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்போடு இருக்கும் மக்களுக்கு என்ன பயனை இந்த அவை தரப் போகிறது? என்பதைத் தவிர என் சிந்தனையில் வேறு எதுவும் ஓடவில்லை.
இங்கு வந்து அமர்ந்தவுடன் நான் சொன்னேன்; நீர்வளத்துறை அமைச்சரைப் பாராட்டினேன். நான் பல ஆண்டுகளாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்; போன வாரம் பொதுப்பணித்துறை அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, எதிர்க்கட்சிகளுக்கும் சொல்கிறேன்) ‘உங்கள் தொகுதியில் உள்ள கட்டிடம் சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளையும் கவனத்திற்கு கொண்டு வாருங்கள், அதிகாரிகள் என் அறையில் உட்கார்ந்து இருப்பார்கள், எல்லா பிரச்சனைகளையும் கவனத்திற்கு கொண்டு வாருங்கள், எங்கு ரெட் லேபிள், கிரீன் லேபிள் ஒட்ட வேண்டும் என்று முடிவெடுத்து உடனே பணியாற்றுவோம் வாருங்கள்’ என்றார். இந்த புதிய அணுகுமுறை இதுவரை சட்டமன்ற வரலாற்றில் இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.
சாதாரணமாக எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் ஆளும் கட்சி அமைச்சரிடம் சென்று, அமைதியாகச் சென்று ஒரு மனுவைக் கொடுத்துவிட்டு வருவார்கள், இதைத்தான் நான் பார்த்திருக்கிறேன். ஆனால், அவையிலேயே வைத்து எல்லா உறுப்பினர்களும் குறையைத் தாருங்கள், குறையை தீர்த்து வைக்கிறேன், முதலமைச்சர் ஆணையிட்டிருக்கிறார் என்று சொன்னார்.
அதேபோல் இன்று காலை நீர்வளத்துறை அமைச்சரும், இன்று காலை கேட்கப்பட்ட கேள்விக்கு உடனடியாகப் பதில் கொண்டு வந்தார். இப்போதும் என்ன சொன்னார் என்றால், ‘உங்கள் தொகுதியில் என்ன பிரச்சனை என்றாலும் என்னிடம் கொண்டு வாருங்கள், என்னால் முடிந்தவரை உடனே தீர்க்கிறேன்’ என்று, ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, இருக்கும் எல்லா உறுப்பினர்களுக்கும் சொல்லும் இந்த முறையும், அதை அவையிலேயே அறிவிப்பதும், இதுதான் வரலாற்றில் முதல்முறை என்று நான் கருதுகிறேன்.
இப்படி ஆக்கபூர்வமாக ஒரு பக்கம் போய்க்கொண்டிருந்தாலும், அன்போடு ஆளும் தரப்பில் இருப்பவர்களுக்குச் சொல்லிக்கொள்கிறேன்: அவையில் ஆக்கபூர்வமான செய்திகளை முதலில் நீங்கள் பரிமாறிக்கொள்ளும்போது, ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதில் அளிக்கக்கூடிய சங்கடமான சூழ்நிலையை அவர்களுக்கும் ஏற்படுத்தாமல் இருங்கள். இனிவரும் காலத்தில் அமைதி காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இனிமேல் இருப்பிடத்தைத் தாண்டி வெளியில் வரும் எந்த உறுப்பினராக இருந்தாலும் நடவடிக்கை எடுப்பேன். அதேபோல் உட்கார்ந்தபடியே ஏசுகின்ற, நா கூசுகின்ற வார்த்தைகளை யார் பேசினாலும் நான் அனுமதிக்க முடியாது. அதற்காக நீங்கள் எல்லோரும் வெகுண்டு எழத் தேவையில்லை. அவர்களோடு எந்த வார்த்தையை யார் பேசுகிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; அதற்காகப் பதிலுக்குப் பதில் மோத வேண்டும் என்று அவசியம் இல்லை.
ஆளும் பொறுப்பில் இருப்பவர்களுக்கு எதிர்க்கட்சியினரை விட அதிக பொறுப்பு உள்ளது. அந்தப் பணிகளை நீங்கள் தொடர வேண்டும். சட்டப்பேரவையில் அந்தந்த கட்சிகளின் தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பவர்கள், கட்சியின் உறுப்பினர்களை எல்லை தாண்டாமல் பார்த்துக் கொள்ளும் மிகப்பெரிய பொறுப்பும் கடமையும் இருக்கிறது. அந்த கடமையை அனைவரும் செய்வீர்கள் என்று நம்புகிறேன்” என்றார்.
