அமமுகவில் இருந்து காமராஜ் எம்எல்ஏ நீக்கம்

Published On:

| By Pandeeswari Gurusamy

kamaraj

தமிழக சட்டமன்றத்தில் நாளை நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு ஆதரவு அளிப்பேன் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக எம்எல்ஏ காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (மே 12) அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் S.காமராஜ் அவர்கள், கட்சியின் நிலைப்பாட்டினை மீறி இன்று சட்டமன்றத்தில் தன்னிச்சையாகத் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்திருப்பது கட்சியின் குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணானது.

ADVERTISEMENT

S.காமராஜ் அவர்களின் இன்றைய செயல்பாடு, அவரின் வெற்றிக்காகப் பாடுபட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கும், அவர் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் இழைத்திருக்கும் மிகப்பெரிய துரோகம் ஆகும்.

ஆகவே, கழகத்தின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்குக் களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திரு.S.காமராஜ் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் இன்று முதல் நீக்கி வைக்கப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னதாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆட்சி அமைக்க பல்வேறு கட்சிகளிடம் ஆதரவு கோரி பேச்சுவார்த்தை நடத்தியபோது அமமுக எம்எல்ஏ காமராஜ், த.வெ.க.-வை ஆதரித்து கடிதம் கொடுத்தார். அந்த கடிதம் போலி என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் தெரிவித்தார். அந்த கடிதத்தில் நான் கையெழுத்திடவில்லை என்று காமராஜ் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் முதலமைச்சர் விஜய் பதவி ஏற்றதும், 3 கோப்புகளில் கையெழுத்திட்டார். இது தொடர்பாக இன்று காமராஜ் எம்எல்ஏ முதல்வர் விஜயை பாராட்டியிருந்தார். மேலும் நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் ஆதரவு அளிக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share