தமிழக சட்டமன்றத்தில் விஜய் அரசு மீது நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவிற்கு எதிராக வாக்களிப்போம். அதே சமயம் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் உறுப்பினர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ண மூர்த்தி, ஓ.எஸ். மணியன் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் பல்வேறு சிக்கல்கள் வந்த போதும், ஐந்து ஆண்டுகளுக்கு சிறப்பாக ஆட்சியை வழங்கியவர் எடப்பாடி பழனிசாமி. அதிமுகவை பாதுகாத்தவர் அவரே. கட்சிக்கு பல்வேறு சோதனைகள் வந்த நிலையிலும், அதை எதிர்கொண்டு எடப்பாடி வெற்றி பெற்றார்.
“மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என தேர்தல் நேரத்தில் பயணம் செய்தார். எடப்பாடி பழனிசாமி தான் அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவர். அதிமுகவின் 47 எம்எல்ஏக்களும் இதற்கான கையெழுத்து போட்டுள்ளனர். இந்த கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளோம்.
திமுகவுடன் அதிமுக கூட்டணி பேசியதாக அவதூறான தகவலை சி.வி. சண்முகம் கூறியுள்ளார். தங்களது லாபத்திற்காக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுப்பதற்காக அவதூறு பரப்ப முயல்கிறார். அமைச்சராக வேண்டும், அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற ஆசைக்காக சி.வி. சண்முகம் இவ்வாறு பேசி வருகிறார். அதிமுகவின் பிளவை முதலமைச்சர் விஜய் இதை ஆதரிக்க மாட்டார் என நம்புகிறோம்.
அதைத் தொடர்ந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “அதிமுக கொறடா நான் தான். எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பெயரில், சட்டப்பேரவையில் தவெக அரசு மீது நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் தீர்மானத்திற்கு எதிராக அதிமுக வாக்களிக்கும். கட்சியின் உத்தரவுக்கு மாறாக வாக்களிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
