சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து நீண்ட இழுபறிக்குப் பின்னர் காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் நடிகர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஆனால் விஜய் தரப்பில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு கோரி அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை. பாஜகவுடன் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என த.வெ.க தரப்பில் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தேர்தலுக்கு பின்னர் அதிமுக இரு அணிகளாகப் பிரிந்துள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பில் ஒரு பகுதி எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி – ஓ. பன்னீர்செல்வம் என இரு அணிகளாகப் பிரிந்த அதிமுகவில், இறுதியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணிக்கே அதிமுக என்ற அங்கீகாரம் கிடைத்தது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி. சண்முகம் தலைமையிலான 24 எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்கள் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது, “தமிழக வெற்றிக் கழகத்தை ஆதரிப்பது என முடிவு செய்துள்ளோம்” என்றும், “திமுக ஆதரவுடன் ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிசாமி விரும்பினார்” என்றும் பகிரங்கமாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர்.
இந்த குற்றசாட்டை அதிமுக தலைமைக் கழகம் கண்டித்துள்ளது. இதனிடையே, சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் ஜோசப் விஜயைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்டசபையின் இரண்டாம் நாள் அமர்வு இன்று நிறைவடைந்ததும், சபாநாயகரைச் சந்தித்து ஆலோசனை நடத்திய நிலையில், சி.வி. சண்முகம் தலைமையிலான அதிமுக எம்எல்ஏக்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அதிமுகவில் நிலவும் இந்தப் பதற்றமான சூழல் தமிழக அரசியலில் எந்த விதமான மாற்றங்களை ஏற்படுத்தப் போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
