அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கலகக் குரல் எழுப்பி வரும் எஸ்பி வேலுமணி- சிவி சண்முகம் கோஷ்டிக்கு அதிமுக தலைமை கழகத்தின் பெயரில் வெளியான அறிக்கையில் கடுமையான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அதிமுக தலைமைக் கழக அறிக்கை: சொந்த மாவட்டத்தில் வெற்றி பெற வக்கில்லாதவர்களின் சங்கமம் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டிருக்கிறது!
திமுக-வுடன் கூட்டணி என்று ஊடகங்களில் வந்த சில வதந்திகளை தூக்கிக் கொண்டு வருவதை தான் இத்தனை நாள் நீங்கள் தீட்டிக் கொண்டிருந்த மாபெரும் திட்டமா?
அதே ஊடகங்களில் நீங்கள் மூன்று பேரும் போய் த.வெ.க-விடம் மந்திரி பதவிக்கு மண்டியிட்டு கிடப்பதாக கூட செய்திகள் வருகிறதே… அதையும் ஏற்கிறீர்களா?
அது சரி, அதான் ஆளுங்கட்சி பக்கம் வாலாட்ட செல்கிறோம் என்று சொல்லி விட்டீர்களே?
பிறகு, நேற்று திமுக-வின் செந்தில் பாலாஜியோடு அரை மணி நேரம் தனியாக என்ன பேசினீர்கள் என்பதையும் சொல்வீர்களா?
கழகம் யாரோடு கூட்டணியில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்ய நீங்கள் எல்லாம் யார்?
1,34,25,260 வாக்குகள் விழுந்தது நம் கழகத்திற்காக, நம் கூட்டணிக்காக, இரட்டை இலைக்காக, #எடப்பாடியார் என்ற மக்களின் முதல்வருக்காக!
அவர் போட்ட பிச்சையில் வெற்றியை பெற்றுவிட்டு, இன்று உண்ட வீட்டிற்கே இரண்டகம் செய்து, நம் கட்சியை, நம் தொண்டர்களை, நம்மை நம்பி நின்ற கூட்டணி கட்சிகளான பாஜக, பாமக, அமமுக ஆகியவற்றை, அதன் தொண்டர்களை கைகழுவி விட்டு நீங்கள் மட்டும் அதிகாரத்தோடு வாழ நினைப்பது ஈனத்தனம் இல்லையா?
நீங்கள் எல்லாம் அவ்வளவு பெரிய தலைவர்கள் என்றால், உங்கள் சொந்த மாவட்டத்தில் என்ன கிழித்தீர்கள்? உங்களின் இந்த அதிகாரத் திமிர், பண்ணையார்தனத்தை இன்னும் எத்தனை ஆண்டுகள் தொண்டர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்?
எடப்பாடி பழனிசாமிதான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காத்தவர்! எடப்பாடியாரால் தான் தொண்டர்கள்!
எடப்பாடியாருக்காக தான் தொண்டர்கள்!
இந்த இயக்கம் சில சட்டமன்ற உறுப்பினர்களின் இயக்கம் அல்ல. தொண்டர்களின் இயக்கம்.
இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், தொண்டர்கள் எடுக்கும் முடிவு தான் வெற்றி பெற்றுள்ளது.
இப்போதும் தொண்டர்கள் ஒரு முடிவை எடுத்துவிட்டார்கள்! இவ்வாறு அதிமுக தலைமைக் கழகம் பெயரில் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
