கோட் சூட் மாற்றமும், ஆராய வேண்டிய மக்கள் மனமும்!

Published On:

| By Minnambalam Desk

அ. குமரேசன்

முட்டுக்கட்டைகளைக் கடந்து விஜய் ஆட்சியமைத்துவிட்டார். மக்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றட்டும், பொறுப்பேற்பு நிகழ்வில் அறிவித்தது போல சமூக நீதியும் மதச்சார்பின்மைக் கோட்பாடும் நிலைபெற உழைக்கட்டும்.

ADVERTISEMENT

மாநில மக்கள் நலன்களுக்காக திமுக-வுடனான உறவு தொடரும், போதுமான பெரும்பான்மை கிடைக்காத நெருக்கடியை பாஜக பயன்படுத்திக்கொள்ள அனுமதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துடனேயே ஆட்சியமைக்க ஆதரவு என்று இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் விசிக, இயூமுலீ கட்சிகளும் திட்டவட்டமாக அறிவித்திருக்கின்றன. திமுக தலைவர் இதை வரவேற்றிருக்கிறார். முன்னெப்போதும் ஏற்பட்டிராத குழப்பமான சூழலில் இதுவொரு தெளிவான முன்னுதாரண நிலைப்பாடு.

தமிழ்நாட்டில் இப்படியொரு பக்குவ முதிர்ச்சியுடன் அரசியல் பண்பாடு வெளிப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணமான தேர்தல் தீர்ப்பை அளித்த (அதாவது தனிப்பெரும் கட்சியாக வரச் செய்த, ஆனால் தனிப்பெரும்பான்மையைக் கொடுத்துவிடாத)  மக்கள் வணக்கத்திற்கு உரியவர்கள்.

ADVERTISEMENT

ஏற்கப்பட்ட வேண்டுகோள்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியாலும் கருத்துக்களச் செயல்பாட்டாளர்களாலும் இரண்டு வேண்டுகோள்கள் மக்களுக்கு விடுக்கப்பட்டன. இந்தக் கூட்டணிக்கு மறுபடி வாய்ப்பளியுங்கள், அதிமுக தலைமையிலான கூட்டணி என்று சொல்லிக்கொள்ள அனுமதித்த பாஜக கூட்டணியையும் புறக்கணியுங்கள் என்ற அந்த இரண்டு வேண்டுகோள்களில் முதலாவதை மக்கள் ஏற்கவில்லை, இரண்டாவதை ஏற்றிருக்கிறார்கள்.

ADVERTISEMENT

ஊடகங்களால் நான்காவது முனை என்று காட்டப்பட்ட சீமானின் இலக்கில்லா நாதக நான்காவது இடத்திற்குக் கூட வர முடியாமல் மக்கள் பார்த்துக்கொண்டார்கள். இந்த மக்களை எப்படித் தற்குறிகள் என்பீர்கள்?

சில மாதங்களில் இந்த ஆட்சி ஆட்டம் கண்டுவிடும் அல்லது தவெக அரசால் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது என்றெல்லாம் மண் வாரித் தூற்றுவதற்கில்லை. முற்றிலும் புதிதான அரசு எப்படிச் செயல்படுகிறது என்று பொறுத்திருந்து கவனிக்கலாம். இது தொடர்பான ஒரு கலந்துரையாடலில் ஒரு நண்பர், “இடதுசாரிகள் எதிர்பார்ப்பது போல தவெக அரசு செயல்படவில்லை என்றால் அவர்கள் என்ன செய்வார்கள்,” என்று கேட்டார். மற்றொரு நண்பர், “ஐயமே வேண்டியதில்லை, வெளியே வந்துவிடுவார்கள்.  விரைவிலேயே அது நடக்கும்,” என்றார். “வெளியே வருகிற பிரச்சினையே இல்லை, அவர்கள் உள்ளேயே போகவில்லையே… வெளியே இருந்துதானே ஆதரவளிக்கிறார்கள்,” என்றேன் நான்.

எடப்பாடி எதிர்ப்பாளர்கள் ஆதரித்தால்?

அதிமுகவுக்குள் எடப்பாடியார் தலைமைக்கு எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. அந்தக் கட்சியிலிருந்து (கட்சித் தாவல் தடைச்சட்டம் பாய முடியாத அளவுக்கு) கணிசமான எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்கள் தனி அணியாக, விஜய்க்கு ஆதரவளிக்க முடிவு செய்தால் அப்போது இடதுசாரிகளின் நிலை என்ன ஆகும்?

தவெக கடுமையாக எதிர்த்த திமுக–வின் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகித்த கட்சிகளின் ஆதரவை விஜய் நாடியது வேறு, அதிமுக–வாகவே இருந்தவர்களின் ஆதரவைப் பெறுவது வேறு. ஒருவேளை அப்படி நடந்தால் அவர்கள் எப்படியெல்லாமோ குடைச்சல் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எடப்பாடி எதிர்ப்பாளர்களின் துணையோடு ஆட்சிப் படகை ஆட்டமின்றிச் செலுத்துவது கடும் சவாலாகவே இருக்கும்.

ஆனால், இடதுசாரிக் கட்சிகளுக்கு, சங்கடமே இல்லாமல் ஆட்சியின் தவறுகளை விமர்சிக்கவும், மக்களுக்காகப் போராடவும் ஏற்ற சூழல் உருவாகும்.

மனநிலை மதிப்பீட்டில் பிழை

இந்த அரசைப் பற்றிய சோதிடக் கணிப்புகளை விட முக்கியமானது, இந்த மாற்றத்தைக் கொண்டுவந்த மக்களின் மனக் களத்தைக் கச்சிதமாகப் புரிந்துகொள்வதில் என்ன தவறு நடந்தது என்ற நடப்புநிலை மதிப்பீடு. இது தொடர்பாக இணையவழிக் கலந்துரையாடல்களிலும், காணொளித்தள நேர்காணல்களிலும் தெரிவித்த கருத்துகளையும் இங்கே பகிர்கிறேன்.

மக்களின் மனங்களை, குறிப்பாக இளந்தலைமுறையினரின் தெரிவுகளைப் புரிந்துகொள்ளாத தவறை நானும் செய்திருக்கிறேன். திமுக கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களும் உறுப்பினரல்லாத ஆதரவாளர்களும் கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள், அவர்களின் ஆதரவுத் தளம் அப்படியே தளராமல் இருக்கும், ஆனால் அதிமுக, நாதக ஆதரவுத் தளங்களில் அரிமானம் ஏற்படும் என்றுதான் நான்  நினைத்தேன். அது தவறான நினைப்பாகிவிட்டது.

மக்கள் நெடுங்கால அனுபவத்தின் அடிப்படையில் ஒரு மாற்றம் தேவை என்று கருதியிருக்கிறார்கள். அந்த மாற்றத்தை விஜய் வழங்குவார் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கைக்கு ஏற்றவராக இருப்பாரா என்பதை இனி வரும் நாட்கள் காட்டும்.

காங்கிரஸ் முடிவும் கம்யூனிஸ்ட் நிலைப்பாடும்

தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் முதலில் ஆதரவளித்தது –இரண்டு நிபந்தனைகளுடன். அதற்கு ஒரு நிபந்தனை அரசியல் அக்கறையுடன் விதிக்கப்பட்டது. பாஜக அணியினரின் ஆதரவைக் கோரக்கூடாது.  அடுத்த நிபந்தனை அமைச்சரவையில் இடம். 

சிறுசிறு இடைவெளிகளிக்குள்ளேயும் ஊடுருவுவதற்கு பாஜக முயலும் என்ற நிலையில் முதல் நிபந்தனை முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாட்டில் ஆட்சியதிகாரத்தை இழந்து 60 ஆண்டுகள் ஓடிவிட்டன. எந்தக் கட்சி அதற்கு முதல் காரணமோ அந்தக் கட்சியுடனேயே இந்திய அளவிலும் மாநிலத்திலும் கூட்டுச் சேர வேண்டிய அரசியல் தேவைகள் ஏற்பட்டன. ஆட்சியில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைத் தலைவர்கள் வெளிப்படையாகவே முன்வைத்து வந்திருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும்  “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு” என்று பேசி வந்திருக்கிறது.

கூட்டணியில் எந்தக் கட்சி இந்தக் கோரிக்கையை முறைப்படி எழுப்பியிருந்தாலும் அதை திமுக தலைமை ஏற்றிருக்க வேண்டும் என்பதே என் கருத்து. ஒன்றியத்தில் கூட்டணியாக ஆட்சியமைக்கப்பட்ட நேரங்களில் அதில் பங்கேற்றிருக்கிறது. முக்கிய அமைச்சர் பொறுப்புகளைப் பெற்றிருக்கிறது. மாநிலத்தில் அந்தச் செய்முறையை மறுத்ததில், வறட்டுக் கௌரவமன்றி வேறேதும் இல்லை. ஆகவே, தவெக–வுக்கு காங்கிரஸ் விதித்த இந்த நிபந்தனையைப் புரிந்துகொள்ள முடிகிறது.

புரிந்துகொள்ள முடியாத, இதிலே என்ன இருக்கிறது என்று சாதாரணமாக விட்டுவிடவும் முடியாத முடிவு என்றால், குறைந்த அரசியல் பண்பைக் கூட வெளிப்படுத்தாமல் ஓடிப்போனதுதான், திமுக தலைமையிடம் நிலைமையை எடுத்துச் சொல்லி, ஓடிப்போகாமலே, முதுகில் குத்திவிட்டார்கள் என்ற விமர்சனத்திற்கு இடமில்லாமலே, நாகரிகமாக அணி மாறியிருக்கலாம்.

அப்படிப்பட்ட காங்கிரஸ்சுக்குக் கூடுதல் தொகுதிகளை ஒதுக்கிய திமுக, தங்களுக்கும் கூடுதல் இடங்கள் கோரிய சிபிஐ(எம்), சிபிஐ, விசிக ஆகிய கட்சிகளின் குரல்களை மதிக்கவில்லை. ஆனால் அந்த மூன்று கட்சிகள்தான், ஆட்சியமைப்பதற்கு மட்டுமே தவெக–வுக்கு ஆதரவு, மாநில உரிமைகளுக்காகவும் மக்கள் நலன்களுக்காகவும் திமுக அணியில்தான் இருப்போம் என்று தங்களின் நாகரிகத்தை வெளிப்படுத்தின. பின்னர் இயூமுலீ வந்துள்ளது. இனி திமுக–வும், கட்சி என்ற முறையிலும் ஆட்சி என்ற முறையிலும் தவெக–வும் எத்தகைய அணுகுமுறைகளை மேற்கொள்ளும் என்று பொதுமக்கள் கவனித்து வருவார்கள். 

மக்களை நெருங்காத இயக்கங்கள்

பொதுமக்கள் இந்த மாற்றத்தை நாடிய சூழலை ஆராய்ந்தாக வேண்டும்.  முதலில் எனக்குத் தோன்றுவது மக்களை, குறிப்பாக இளைய தலைமுறைகளை நெருங்கத் தவறிய நிலைமைதான். விஜய் வருகைகளில் பெரும் கூட்டங்களை வெறும் சினிமாக் கவர்ச்சி என்று விமர்சித்துக்கொண்டிருந்தார்கள். தவெக–வோ, அந்தக் கூட்டங்களை இவர்கள் விமர்சித்துக்கொண்டிருந்த நேரத்தில், ஊருக்குள் போய்விட்டார்கள். வீடு வீடாகப் போய்விட்டார்கள். பல்வேறு ஏமாற்றங்களுடன் மாற்றத்தை நாடிய மக்களை நெருங்கினார்கள். பாட்டிகளுக்கும் தாத்தாக்களுக்கும் “விஜய் மாமாவுக்கு ஓட்டுப் போடுங்க” என்று பேத்திகளும் பேரர்களும் “அட்வைஸ்” பண்ணினார்களே, அது தவெக எந்த அளவுக்குக் குடும்பங்களை நெருங்கினார்கள் என்பதற்கு ஒரு சாம்பிள்.

தமிழ்த் தலைமுறைகளின் அறிவார்ந்த வளர்ச்சிக்கு அடிப்படையான திட்டங்களைக் கொண்டுவந்தது திமுக அரசு. பெண்களின் சமூக நடமாட்டத்தை விரிவுபடுத்தும் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம் உள்ளிட்ட ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எவரும் குறை சொல்ல முடியாது. ஆனாலும், அந்தச் சிறப்பான திட்டங்களைப் பற்றி மக்களிடையே விரிவாக எடுத்துச் சொல்லத் தவறிவிட்டார்கள் என்ற ஆதங்கத்தை ஒரு பகுதியினர் வெளிப்படுத்துகிறார்கள். மக்களுக்கு அந்த நன்மைகள் போய்ச் சேர்கிற வழியில் உடைப்புகளாக ஊழல்கள் நடந்ததாகவும் அவர்கள் வருத்தத்தோடு பேசுகிறார்கள்.

“ஊழலே நடக்கவில்லை” என்ற மறுப்பையோ,  “ஊழலெல்லாம் இந்த சிஸ்டத்திலேயே இருப்பது,” என்பதான சமாளிப்பையோ புதிய தலைமுறைகள் ஏற்கத் தயாராக இல்லை. “நான் தப்புச் செய்ய மாட்டேன், மற்றவர்கள் தப்புச்செய்ய விடவும் மாட்டேன்” என்று அறிவித்த விஜய் இதை மனதில் கொள்ள வேண்டும். 

மதவாதத்தை அரசியலாக நடத்தும் பாஜக–வையும், அதனைச் சுமந்து வந்த அதிமுக–வையும்  தவெக–வை ஆதரித்ததன் மூலம் மக்கள் ஓரங்கட்டியிருக்கிறார்கள். அத்துடன் அவர்களின் நெஞ்சங்களில் சாதி அரசியல் பற்றிய அசூயையும் இருக்கிறது. சாதியத்துக்கு எதிராக  அவர்கள் உரக்கப் பேச மாட்டார்கள்தான். மௌனக் கிளர்ச்சியாக இதைச் செய்திருக்கிறார்கள். தமிழ் மண்ணில் திராவிட இயக்கம் அடையாளம் பெற்றதில், திமுக வெற்றிப் படியேறியதில் அக்காலத்தில் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராக மேற்கொண்ட நிலைப்பாடுகளுக்கு முக்கியப் பங்கு இருந்தது.

சாதியம் அல்லது பார்ப்பனியம் வலுவான பிடிமானத்தோடு இருப்பதற்கு ஒரு முக்கியமான  காரணம் இருக்கிறது. அது உயர் சாதியினர் என்று சொல்லிக்கொள்வோர் அல்லாத, தலித்துகள் பழங்குடியினரும் அல்லாத இடைநிலைச் சாதிகள் மூலமாகச் செயல்படுகிறது என்பதே அந்தக் காரணம். ஆனால் வாக்கு வங்கிக் கண்ணோட்டத்துடனேயே, அந்தப் பகுதியினரின் கோபத்துக்கு உள்ளாகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கையுடனேயே சாதி ஆணவ வன்முறைப் பிரச்சினைகளை திமுக அணுகியது. 

பரப்புரைகள் போதுமா?

மக்களை நெருங்கத் தவறிய பிரச்சினைக்கு வருவோம். வழமையான,  பரப்புரைகள்  இனி எடுபடாது. அந்த நிகழ்ச்சிகளில்  கலந்துகொள்கிறவர்கள் அந்தந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள்தான். கட்சி மேற்கொள்ளும் முடிவுகளோடு எப்போதும் உடன்படுகிற அவர்களிடமே முழக்கங்களை முன்வைப்பதில் என்ன பயனிருக்கிறது? அவர்களைத் தாண்டித் தெருக்களுக்கும் சந்துகளுக்கும் குடியிருப்புகளுக்கும் போவதல்லவா மக்களை நெருங்கும் வழி?

எந்த மக்களின் பிரச்சினைக்காக ஒரு போராட்டம் அறிவிக்கப்படுகிறதோ, அந்த மக்களைத் திரட்டாமலே, இயக்க விசுவாசத்துடன் தொண்டர்கள் மட்டும் பங்கேற்கிற போராட்டமாக நடத்தப்படும். மக்களுக்கான போராட்டங்கள்தான், மக்களின் போராட்டங்கள் இல்லை. ஆனால் அப்படிப்பட்ட போராட்டங்களே தேவையில்லை என்று ஒரு தலைவரும் அவரது கட்சியும் செல்வாக்குப் பெற முடிந்திருக்கிறது. அது நிலையான நீரோட்டமா அல்லது நீர்க்குமிழியா?

குடும்ப வாரிசு அரசியல் பற்றியும் பேசப்படுகிறது. “எனது ஆட்சியில் ஒரே அதிகார மையம்தான் இருக்கும்” என்கிறார் புதிய முதலமைச்சர். ஆனால், குடும்பமாக அரசியல் பங்கேற்பு வரவேற்கத்தக்கது.  குடும்பமே அதிகார மையமாவதுதான் தள்ளப்பட வேண்டியது. குடும்ப வாரிசு அரசியல் செயல்பாடுகளோடும் அனுபவங்களோடும் தலைமைத் தகுதிகளுக்கான பயிற்சிகளோடும் வருவது நலமானது. குடும்ப வாரிசு என்பதற்காகவே அந்தப் பயிற்சிகள் அளிக்கப்படுமானால்  அது நலங்குன்றியது. 

மின்னம்பலம்‘ கட்டுரையில் பேராசிரியர் ந. மணி எழுதியிருப்பது போல, பாஜக தனது எல்லா மட்டங்களிலும் வாரிசுகளின் செல்வாக்குக்கு வழி செய்திருப்பது நாடறிந்தது. ஆனால் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஏதோ காங்கிரஸ் கட்சியும் திமுக–வும் மட்டுமே அப்படி இருப்பதாகக் கூசாமல் பேசி வந்தார்கள். ஒரு பகுதி மக்கள் அதை ஏற்றிருக்கிறார்கள்.

அதே வேளையில், ஆசிய, இந்திய சமூக அமைப்பில் வாரிசுகளின் அரசியல் நுழைவு இயல்பானதாகவே இருக்கிறது. கட்சியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு இது உதவுகிறது. தங்களுக்குள் பதவிக்காக அடித்துக்கொள்ளக்கூடிய அடுத்தடுத்த மட்டங்களில் இருப்பவர்கள் உச்சத் தலைவரின் வாரிசுக்கு முன் அடங்கிப் போகிறார்கள். கட்சியினரே ஏற்கிறபோது மற்றவர்கள் அதைச் சாடுவதில்  பொருளென்ன இருக்கிறது?

அரசாங்க அதிகாரத்துக்கே ஒரு வாரிசு வருவாரானால், அவர் என்ன பேசுகிறார், என்ன செய்கிறார் என்று பார்த்துதான் விமர்சிக்க வேண்டுமேயன்றி வாரிசு என்பதற்காக மட்டுமே எதிர்ப்பது பொருளற்றது மட்டுமல்ல,பொறாமையால் தூண்டப்படுவதுமாகும். வேடிக்கை என்னவென்றால், அனைவருக்கும் பொதுவான அரசாங்கத்துக்கு வாரிசுகள் வருவதா என்று கரித்துக்கொட்டுகிறவர்கள்தான், அனைவருக்கும் பொதுவான ஆலயத்திற்குள் வாரிசுகள் மட்டுமே  அர்ச்சகர்களாக இருக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சிகளில் தோழர்கள் குடும்பத்தோடு இயக்கத்தில் ஈடுபடவும், வாரிசுகளுக்கு அரசியல் உணர்வையும், சமுதாயப் புரிதலையும் ஏற்படுத்தவும் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. அத்தகு இயக்கங்களும் இந்த முறை மக்களின் நாடித்துடிப்பைக் கணிப்பதில் பிழை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு, முதலில் குறிப்பிட்டது போன்ற, மக்களுடன் உறவாடத் தவறியது உள்ளிட்ட பல காரணங்கள் இருக்கின்றன. 

கள ஆய்வும் பணியும்

மக்களின் மனநிலை பற்றி, கட்சியின் பல்வேறு மட்டங்களிலான குழுக்களின் உறுப்பினர்கள் சொல்வதை மட்டும் கேட்பது என்ற மனநிலையிலிருந்து விடுபட வேண்டும். அவர்கள் என்ன கள ஆய்வு நடத்தியா சொல்கிறார்கள்? இது உள்பட சமுதாயத்தின் பல்வேறு மெய்யான நிலவரங்களை அறிவியல்பூர்வமாக ஆராய்வதற்கென்றே தனியான அமைப்புகளை கட்சிகளுக்குள் ஏற்படுத்த வேண்டும். ஏற்கெனவே அப்படிப்பட்ட ஆய்வுக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டிருக்குமானால் அவை வலுப்படுத்தப்பட்டு களங்களில் இறக்கிவிடப்பட வேண்டும்.

சரியானதைச் செய்ய வேண்டும் என்பதைக் காட்டிலும், தவறானதைச் செய்துவிடக் கூடாது என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, புதிதாக எதையுமே செய்ய முற்படாத அமைப்பு மனநிலையிலிருந்து விடுதலை பெறுவது, ஓரடி ஓரடியாக முன்னால் செல்வதற்கு ஓர் அடிப்படைத் தேவை.

கலந்துரையாடலின்போது ஒரு நண்பர், “முற்போக்கான நோக்கங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டுள்ள அரசியல் இயக்கங்கள், இனிமேலாவது மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேச வேண்டும்,” என்ற கருத்தைக் கூறினார். மறுக்க முடியாத அந்தக் கருத்தை வழிமொழிந்துவிட்டுக் கூடுதலாக எனது கருத்தையும் அங்கே பகிர்ந்தேன். “மக்கள் புரிந்துகொள்ளும் வகையில் பேசுவது மட்டுமல்ல, மக்கள் பேசுவதைப் புரிந்துகொள்வதும் முக்கியம்.”

டிஜிட்டல் தாக்கம்?

வாக்காளர்களின் சிந்தனைகளை விஜய் மீது குவித்திடும் வகையில் டிஜிட்டல் உத்திகள் பயன்படுத்தப்பட்டதாகவும், அதற்கென்றே குறிப்பிட்ட நிறுவனம் நியமிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அது தேர்தல் நெறிகளுக்கு எதிரானது என்றும், அது தொடர்பாகச் சட்டப்படி வழக்குத் தொடுக்கப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் ஓர் இணையத்தளக் கட்டுரை கூறுகிறது. பரப்புரைக் காலத்திலேயே கூட இது தொடர்பாகத் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. சட்ட விதிகள் மீறப்பட்டிருந்தால் அது வழக்காடப்பட வேண்டியதுதான். ஆயினும், மக்கள் ஒட்டுமொத்தமாக டிஜிட்டல் சொல்வதே கடவுள் வாக்கு என்று எடுத்துக்கொண்டு உடன்பட்டுப் போவார்களா என்ற கேள்வியும் எழுகிறது. அவர்கள் ஏற்னெவே எடுத்திருந்த முடிவுக்கு டிஜிட்டல் தயாரிப்புகள் வலுச் சேர்த்திருக்கும் என கூறலாம்.

கடவுள் வாக்கு என்ற சொல்லாடல் மற்றொரு சிந்தனைக்கு இட்டுச் செல்கிறது. வாக்குப் பதிவு நாளுக்கு முன்பும் பின்பும்  (குறிப்பிட்ட) மதச்சார்பின்றி பல வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று வந்தார் விஜய்.  இது பொதுவாகப் பல கட்சிகளின் தலைவர்களும் செய்யக் கூடியதுதான். முதலமைச்சராகப் பொறுப்பேற்ற நேரத்தில் ஆண்டவன் பெயரால்தான் உறுதியளித்தார். இது அவருடைய நம்பிக்கை சார்ந்ததுதான். ஆனால், அவருடைய “சர்க்கார்” கனவு நிறைவேறியது ஆதரவளித்துள்ள கட்சிகளால்தான். அதற்குக் கைமாறு செய்யும் வழி நல்லாட்சியாக நடத்துவதுதான். 

கோட் சூட் நவீனம்

தமிழ்நாட்டு ஆண் அரசியல் தலைவர்கள் என்றால் தழையத் தழைய வேட்டியும் வெள்ளைச் சட்டையுமாகத்தான் வளைய வருவார்கள் என்பதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி கோட்–சூட் அணிந்து பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டார் விஜய். நவீன சமுதாயத்தை அடையாளப்படுத்துவதாக இதை எடுத்துக்கொள்ளலாம். சமுதாயம் முழுமையாக நவீனமடையாமல் பின்னுக்கு இழுத்துக்கொண்டிருக்கும் நடைமுறை விதிகளையும் திணிக்கப்படும் நியதிகளையும் (வந்தேமாதரம் போல) எதிர்கொள்வதில், மக்களுக்கு இணக்கமான அரசாங்கமாகக் கொண்டு செல்வதில், கல்வி, மருத்துவம், தொழில் எனப் பல்வேறு களங்களிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவருவதில், முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட முற்போக்கான திட்டங்களைத் தொடர்வதில் என அந்த அடையாளம் அழுத்தம் பெற வேண்டும்.

நேற்று வரையில் பொத்தாம்பொதுவாகக் குற்றச்சாட்டுகளை முந்தைய ஆட்சியின் மீது சுமத்தியது நேற்றோடு போகட்டும். மாநில அரசு பல்வேறு மக்கள் நலப் பணிகளிக்காகக் கடன் பெறுவதில் தவறில்லை என்று இப்போது புரிந்துகொள்ளட்டும். “கஜானாவைக் காலி செய்துவிட்டுப் போய்விட்டார்கள்” என்பதான, பொருளதாரப் புரிதலற்ற பேச்சுகளுக்குள் பதுங்கிக்கொள்ளாமல், வளர்ச்சித் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தட்டும்.

இதுவரை இப்படி நடந்ததில்லை என்று சொல்லத்தக்க வகையில் முன்னாள் முதலமைச்சரை மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசியிருக்கிறார். முன்னதாக, ஆட்சியமைப்பதற்கான ஆதரவுக் கடிதத்தை விசிக தாமதமாகக் கொடுத்ததற்கு, திருமாவளவனை முதலமைச்சராக்குவது என்ற ஒரு திட்டம் திமுக–அதிமுக இடையே இருந்ததாக ஒரு பரபரப்புத் தகவல் தளத்தில் ஏற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக என்ன விளக்கங்கள் வரப்போகின்றன என்ற எதிர்பார்ப்புக்கிடையே இந்தச் சந்திப்பு நிகழ்ந்து ஒரு பண்பு அறிமுகமாகியிருக்கிறது.

கோட்டைக்குள் நுழைவதில் சிக்கல்கள் ஏற்படுத்தப்பட்டபோது கண்ணீர் விட்டு அழுத, புகை மூட்டம் கலைந்து வழி திறக்கப்பட்டபோது ஆனந்தக் கண்ணீர் பூத்து மகிழ்ந்த எளிய மக்களின் முகங்களைத் தொலைக்காட்சி நேரலைகளில் பார்த்தபோது, ஒரு பதைப்பும் தொற்றியது. இவர்களின்  நம்பிக்கையை இவர் எப்படிக் காப்பாற்றப் போகிறார்? வெற்றிகரமாகக் காப்பாற்றட்டும் என்ற விருப்பத்தையே வாழ்த்தாக்கலாம். அதே போல், உதயநிதி சொன்னது போல பொறுப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறது என்ற பெயரை திமுக ஈட்டட்டும், மற்ற கட்சிகளும் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தட்டும் என்றும் வாழ்த்தலாம்.

ஆனால் ஒன்று, ஜனநாயகத்துக்காகவும்,   மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவ லட்சியம் உள்ளிட்ட அரசின் மாண்புகளுக்காகவும் காலங்காலமாகத் தங்களை ஒப்படைத்துக்கொண்டு இயங்கிடும் இயக்கங்கள் இந்த மக்களை நம்பித் தொடர்ந்து பயணிக்கலாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share