குடும்ப அரசியல் என்னும் குற்றச்சாட்டு: பொய்யும் மெய்யும்!

Published On:

| By Kavi

பேரா. நா. மணி

“குடும்ப அரசியலை ஒழிப்போம்” என்ற முழக்கம், இன்றைய இந்திய அரசியலில் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் கருவியாக மாறியுள்ளது. குறிப்பாக பாஜகவை ஆட்டிப்படைக்கும் மோடி, அமித் ஷா போன்றவர்கள் தொடர்ந்து முன்வைக்கும் வாதம் இது. அரசியல் விவாதங்களை இது திசை திருப்புகிறது. முக்கியப் பிரச்சினைகளிலிருந்து விவாதங்களை தடம் மாற்றுகிறது.

ஆனால், இந்த முழக்கத்தின் பின்னால் இருக்கும் அரசியல் யதார்த்தம் என்ன? இது உண்மையா, அல்லது ஒரு திறமையான அரசியல் கற்பிதமா?

ADVERTISEMENT

குடும்ப அரசியல் என்பது உலகளாவிய ஒரு நிகழ்வு

முதலில் ஒரு அடிப்படை உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும். குடும்ப அரசியல் என்பது இந்தியாவுக்கு மட்டும் உரிய விஷயம் அல்ல. உலக அரசியல் அரங்கில், ஜனநாயக அமைப்புகளில் இது காணப்படும் ஒரு இயல்பான நடைமுறை. ஜனநாயகத்தின் போக்கில் இது ஒரு கட்டம்.

ADVERTISEMENT

ஜனநாயக வளர்ச்சிப் போக்கின் ஓர் நிலை

அரசியல் என்பது சமூக மூலதனம், தொடர்புகள், அனுபவம் போன்றவற்றின் சேர்க்கையாக உருவாகும் ஒரு தளம். இந்த வளங்கள் பெரும்பாலும் குடும்பங்களுக்குள் பரிமாறப்படுகின்றன.

ADVERTISEMENT

இதனால், ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் குடும்ப அரசியல் வலுப்பெறுவது இயல்பானது. ஆனால், அதே சமயம் ஜனநாயகத்தின் விரிவாக்கம், கல்வி, சமூக இயக்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியுடன் அது படிப்படியாக மாற்றம் அடையும்.

எனவே, குடும்ப அரசியலை ஒரு “அசாதாரண குற்றம்” என சித்தரிப்பது, எளிதாக ஒரு குற்றச்சாட்டை மக்கள் மனதில் கொண்டு சேர்க்கும் உத்தி. இது அரசியல் எளிமைப்படுத்தல் மட்டுமே.

பாஜக மற்றும் அதிமுக கட்சிகளின் “குடும்ப அரசியல்” விமர்சனம்

பாஜக குடும்ப அரசியலை எதிர்க்கும் கட்சியாக இந்தியா முழுவதும் பீற்றிக் கொண்டு திரிகிறது. இந்தப் புள்ளிவிபரத்தை பாருங்கள்.

2014 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே, “குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்” என்ற கோஷம் அதன் தேர்தல் பிரசாரத்தின் முக்கிய அச்சாக இருந்தது. இது ஒரு உளவியல் அரசியல் உத்தி—மக்களிடையே ஒரு கோபத்தை உருவாக்கி, அதனை வாக்குகளாக மாற்றும் முயற்சி.

ஆனால், கேள்வி இங்கே தொடங்குகிறது

பாஜக உண்மையில் குடும்ப அரசியலுக்கு அப்பாற்பட்ட கட்சியா? ஆய்வுகள் சொல்வது என்ன? கஞ்சன் சந்திரா போன்ற ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் ஒரு வேறு உண்மையை வெளிப்படுத்துகின்றன. மக்களவை உறுப்பினர்களின் குடும்ப பின்னணியை ஆய்வு செய்தபோது, குடும்ப அரசியல் என்பது அனைத்து முக்கிய கட்சிகளிலும் காணப்படும் ஒரு பொதுவான பண்பாக இருக்கிறது.

குடும்ப அரசியலில் காங்கிரஸ் மற்றும் பாஜக

13வது மக்களவையில்:
காங்கிரஸ் – 8%
பாஜக – 10%

14வது மக்களவையில்:
காங்கிரஸ் – 10%
பாஜக – 20%

15வது மக்களவையில்:
காங்கிரஸ் – 24%
பாஜக – 10%

16வது மக்களவையில்:
காங்கிரஸ் – 8%
பாஜக – 20%

இந்த தரவுகள் ஒரு தெளிவான செய்தியை கூறுகின்றன

குடும்ப அரசியல் என்பது ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானது அல்ல. ஒரு தனிப்பட்ட கட்சியை மட்டும் குற்றம் சாட்ட முடியாது. அது ஜனநாயக நாடுகளில் ஒரு காலக்கட்டம். அது ஒரு போக்கு. நிச்சயமாக ஒரு குற்றமல்ல. அது ஒரு அமைப்பின் பண்பு.

கற்பிதம்” vs “யதார்த்தம்

பாஜக, குடும்ப அரசியலை எதிர்க்கும் கட்சி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது. இந்த பிம்பம், மீண்டும் மீண்டும் கூறப்படும் அரசியல் மொழியின் மூலம் மக்களின் மனதில் பதியப்படுகிறது. இது ஒரு கற்பிதம். ஆனால், அந்த கற்பிதம் நிஜத்தை மூடி மறைக்கிறது. பாஜகவும் குடும்ப அரசியலில் ஈடுபட்டுள்ளது. காங்கிரஸை விட சில கட்டங்களில் அதிக அளவில் கூட உள்ளது. மாநில அளவிலும் இதே போக்கு தொடர்கிறது. உதாரணமாக, உத்தரப் பிரதேசத்தில் குடும்ப அரசியல் குடும்பங்களின் எண்ணிக்கையில் பாஜகவும் முன்னணியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

திமுக மீது விமர்சனங்கள்: ஓரு அரசியல் பிதற்றல்

தமிழக அரசியலில், திமுக மீது குடும்ப அரசியல் குற்றச்சாட்டு அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. இறுதி கட்ட பிரச்சாரத்தில் அது மிகப் பெரிய அளவில் கை கொடுக்கும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி எடுத்து சுற்றுக்கு விட்டுள்ளார். அதே குற்றச்சாட்டை மீண்டும் மீண்டும் எழுப்பும் பாஜக போன்ற கட்சிகள் தங்கள் சொந்த அரசியல் நடைமுறைகளை மறைக்கின்றன, உதாரணமாக அதிமுவையே எடுத்துக் கொள்வோம். தற்போதைய ஒன்றியச் செயலாளர் முதல் எடப்பாடி பழனிச்சாமி வரை எத்தனை பேருடைய பிள்ளைகள் மாற்றுக் கட்சியில் உள்ளனர்? எந்தப் பதவியும் இல்லாமல் தந்தை பதவியை வைத்து அரசாட்சி செய்வோர் எத்தனை பேர்? இது எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு தெரியாதா?

இந்த விமர்சனம் ஒரு உண்மையான ஜனநாயக கவலை அல்ல என்பது தெளிவாகிறது.

குடும்ப அரசியல் என்பது ஓர் அரசியல் ஆயுதம்

ஜனநாயகத்தின் வளர்ச்சி பாதையில் குடும்ப அரசியல் என்பது ஜனநாயகத்தின் ஒரு இடைக்கால கட்டம். சமூக அமைப்புகளின் பிரதிபலிப்பு. அரசியல் வாய்ப்புகளின் சமச்சீரின்மையின் விளைவு. காலப்போக்கில் மாறக்கூடியது.

எனவே, குடும்ப அரசியலை எதிர்க்கும் பெயரில் ஒரே கட்சியை குறிவைத்து பேசுவது அறிவியல் பூர்வமான அணுகுமுறை அல்ல.

உண்மையான கேள்வி – விவாதிக்க வேண்டிய விஷயம்

ஓர் கட்சி நல்ல ஆட்சி வழங்குகிறதா?

களத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில் ஒப்பீட்டளவில் எது சிறந்தது?

சமூக நீதி, பொருளாதார முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் ஆகியவற்றை பாதுகாக்கிறதா?

இந்த அடிப்படைகளில்தான் அரசியலை மதிப்பீடு செய்ய வேண்டும்.

குடும்பத்தை அல்ல, அரசியல் செயல்பாட்டை முன் நிறுத்தி ஆரோக்கியமான விவாதங்களை முன்வைக்க வேண்டும். தேவைப்பட்டால் பாட்டாளி மக்கள் கட்சியில் நடப்பது போல் தந்தை மகன் யுத்தம் விமர்சிக்கப்படலாம்.

குறிப்பு

Democratic Dynasties: State, Party and Family in Contemporary Indian Politics என்ற தலைப்பில் கஞ்சன் சந்திரா எழுதிய ஆய்வு நூலை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கட்டுரையாளர்


நா.மணி, பேராசிரியர், மேனாள் தலைவர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share