திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகருமான ரவிசங்கர், தன் தொகுதி சார்ந்த கார்த்திக் குமார் என்பவரைத் தாக்கியதாகச் சமூக வலைதளங்களில் வெளியான செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
துறையூர் கண்ணபிரான் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திக் குமார் . இவர் தீபாவளி தினத்தன்று அவசர வேலையாக மணச்சநல்லூரில் உள்ள துணை சபாநாயகர் ரவிசங்கரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு, “எங்கள் பகுதியில் கடந்த 90 நாட்களாகக் குடிநீர் வரவில்லை; நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை” என தனது தொகுதிப் பிரச்சனை குறித்து முறையிட்டுள்ளார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் துணை சபாநாயகர் ரவிசங்கர் தன்னைத் தகாத வார்த்தைகளால் பேசி, எட்டி உதைத்ததாகவும், தனது இருசக்கர வாகனத்தைப் பறித்து வைத்துக் கொண்டதாகவும் கூறி, கார்த்திக் குமார் வீடியோ ஒனறை வெளியிட்டார். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாகச் சேர்ந்த கார்த்திக் குமார் மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “விஜய்யை நம்பி வாக்களித்தோம்; ஆனால் எங்கள் நிலைமையைப் பாருங்கள். தொகுதிக்குச் சம்மந்தம் இல்லாத ஒருவரால் தான் இந்த நிலை ஏற்பட்டது. எனது மரணத்திற்குத் துணை சபாநாயகரும் அவரது குடும்பத்தினருமே காரணம். இதுகுறித்து அமைச்சர் ஆனந்த் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உருக்கமாகக் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்திற்கு அதிமுக உள்ளிட்ட பல தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிமுக சமூக வலைதளப்பதிவில், பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.
ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் விஜய் அவர்களே!
உங்கள் கட்சியின் துறையூர் “எல்லைக் காப்பாளர்” மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா?
மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்!
ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை!
இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?
இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?” என அதிமுக கேள்வி எழுப்பியது.
இந்தச் சர்ச்சை பூதாகரமான நிலையில் துணை சபாநாயகர் ரவிசங்கருடன் அருகே அமர்ந்தபடி கார்த்திக் குமார் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அதில், “நாங்கள் அனைவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள்; ஒரே குடும்பமாகப் பயணித்து வருகிறோம். கூட்ட நெரிசலில் ஏற்பட்ட தள்ளுமுள்ளு சம்பவத்தை, சமூக வலைதளங்களில் சிலர் தவறாகச் சித்தரித்து உண்மைக்கு மாறாகப் பரப்பி வருகின்றனர். அண்ணன் ரவிசங்கர் துறையூரில் தவெக வேட்பாளராகப் போட்டியிட்டபோது அவருக்காக ஓடி ஓடி வேலை செய்தவன் நான். தயவுசெய்து இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” எனப் பேசியுள்ளார்.
முதலில் “இதற்காகவா விஜய்க்கு ஓட்டு போட்டோம்.. என் சாவிற்குத் துணை சபாநாயகரே காரணம், என்னை எட்டி உதைத்தார்” என மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டவர், அடுத்த சில மணி நேரங்களிலேயே அதே துணை சபாநாயகருடன் அமர்ந்து “அது வெறும் தள்ளுமுள்ளு தான், வதந்திகளை நம்பாதீர்கள்” எனப் பேசியிருப்பது முன்னுக்குப் பின் முரணாக அமைந்திருப்பதோடு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சந்தேகங்களையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது.









