’ஜெம் வீரமணி’ மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை வழக்கில் மேலும் ஒரு வீடியோவை சென்னை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனருமான ஜெம் வீரமணி மீது சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் வீரமணி, அவரது நெருங்கிய உதவியாளர் சாந்தி, சாந்தியின் கணவர் மகேந்திர சிம்ஹன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர், ஏற்கெனவே கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் மற்றும் மின்னணு சாதனங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஜெம் வீரமணியின் நெருங்கிய உதவியாளரான சாந்தியின் வீட்டில் கைப்பற்றப்பட்ட மின்னணு சேமிப்புச் சாதனத்தை சைபர் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அதிலிருந்து அழிக்கப்பட்டிருந்த ஒரு வீடியோவை மீட்டுள்ளனர்.
அந்த வீடியோவில் சிறுமி ஒருவரை ஜெம் வீரமணி பாலியல் வன்கொடுமை செய்வது போன்ற காட்சிகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த வீடியோ பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்றும், சாந்தி இதனைப் பதிவு செய்து பின்னர் அழித்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில் இதுவரை கைப்பற்றப்பட்டுள்ள வீடியோக்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக மீட்கப்பட்ட வீடியோவில் உள்ள சிறுமியை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், மற்றொரு சிறுமி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் சாட்சியாக இருந்த ஒருவர் தற்போது புகார்தாரராக முன்வந்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த வழக்கில் ஜெம் குழும நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகளும் தற்போது முக்கியத்துவம் பெற்றுள்ளன. ஜெம் வீரமணிக்குச் சொந்தமான நிறுவனங்களுக்கும் பிரகாஷ் கண்ணையாவுக்கும் இடையே பெருமளவில் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து பிரகாஷ் கண்ணையாவின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அந்தக் கணக்குகளில் பல கோடி ரூபாய் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், 20 கிலோவுக்கும் அதிகமான தங்கக் கட்டிகள் வாங்கப்பட்டு சென்னையில் 2 இடங்களுக்கு அனுப்பப்பட்டிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள 2 நிலங்களை ஜெம் வீரமணி சுமார் ரூ.80 கோடிக்கு விற்பனை செய்த காலகட்டத்திலேயே இந்தப் பணப் பரிவர்த்தனைகளும் தங்கக் கொள்முதலும் நடைபெற்றதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தப் பணமும் தங்கமும் எதற்காகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பரிவர்த்தனைகள் குறித்த விவரங்களை அமலாக்கத் துறைக்கும் வருமான வரித் துறைக்கும் சென்னை போலீசார் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.









