புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 1,364 மருந்துத் தயாரிப்புகளுக்கான புதிய விலை நாடு முழுவதும் நவ. 9-ந் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. சில மருந்துகளின் விலை 90%க்கும் அதிகமாகக் குறைந்துள்ள நிலையில், இந்த நடவடிக்கையால் நோயாளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.3,540 கோடிக்கும் அதிகமான சேமிப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவது குறித்து மின்னம்பலத்தில் ஏற்கெனவே விரிவான செய்திகள் வெளியிட்டிருந்தோம். குறிப்பாக, ரூ.11,000 மதிப்புள்ள புற்றுநோய் ஊசிக்கு மருத்துவமனையில் ரூ.1.30 லட்சம் வசூலிக்கப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்விகளை எழுப்பியிருந்தது.
இந்த நிலையில், புற்றுநோய் மருந்துகளின் விற்பனை லாபத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசின் தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் (NPPA) கடந்த அக். 17-ந் தேதி நடவடிக்கை மேற்கொண்டது.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார சேவைகள் தலைமை இயக்குநரகம் அமைத்த நிபுணர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், 137 வகையான புற்றுநோய் மருந்துகளின் விற்பனை லாபத்துக்கு வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த மருந்துகளின் புதிய விலைகள் நவ. 9-ந் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
543 பிராண்டுகளில் இருந்து 1,364 மருந்துத் தயாரிப்புகள்
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அக். 28-ந் தேதி முதல்கட்டமாக 543 மருந்து பிராண்டுகளின் புதிய விலைப்பட்டியலை வெளியிட்டது. அதன்பின்னர் மருந்து நிறுவனங்கள் தொடர்ந்து திருத்தப்பட்ட விலை விவரங்களைச் சமர்ப்பித்து வந்தன.
மத்திய அரசு நவ. 7-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், 76 நிறுவனங்கள் 1,225 மருந்துத் தயாரிப்புகளின் புதிய விலைகளை அறிவித்துள்ளதாகத் தெரிவித்திருந்தது. அவற்றில் 1,031 தயாரிப்புகளின் விலை குறைக்கப்பட்டிருந்தது. இந்த எண்ணிக்கை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.
நவ. 8-ந் தேதி நிலவரப்படி 85 மருந்து நிறுவனங்கள், 121 வகையான புற்றுநோய் மருந்துகளைச் சேர்ந்த 1,364 தயாரிப்புகளின் திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை அறிவித்துள்ளன. இவற்றில் 679 பிராண்டுகளின் விலை 50%க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. அதிகபட்சமாக ஒரு மருந்தின் விலை 96.45% குறைக்கப்பட்டுள்ளது.
ரூ.41,250 மருந்து ரூ.3,218 ஆகக் குறைப்பு
- புரோஸ்டேட் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Abiraterone acetate 250 mg மருந்தின் Abirone பிராண்டு விலை ரூ.41,250-ல் இருந்து ரூ.3,218.23 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- இதன் மூலம் அந்த மருந்தின் குறிப்பிட்ட தயாரிப்புக்கு ரூ.38,031.77 விலை குறைந்துள்ளது.
- அதே மருந்தின் Abirat பிராண்டு ரூ.36,088.81-ல் இருந்து ரூ.4,064.48 ஆகவும், Ahabir பிராண்டு ரூ.33,876.50-ல் இருந்து ரூ.4,925 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
- நுரையீரல், பெருங்குடல், கருப்பை மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் Bevacizumab 100 mg ஊசி மருந்தின் Bryxta பிராண்டு விலை ரூ.25,995-ல் இருந்து ரூ.3,318 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
- BevaciRel பிராண்டு விலை ரூ.24,079-ல் இருந்து ரூ.3,985 ஆகவும், Cizumab பிராண்டு விலை ரூ.15,658-ல் இருந்து ரூ.3,103 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
- மார்பக மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயாளிகளுக்கு ஏற்படும் எலும்பு பாதிப்புகளைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் Denosumab 60 mg ஊசி மருந்தின் DenOsteoRel பிராண்டு ரூ.24,955-ல் இருந்து ரூ.6,240 ஆகக் குறைந்துள்ளது.
- ரத்தப் புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் Azacitidine 100 mg ஊசி மருந்தின் AzatiRel பிராண்டு ரூ.7,790-ல் இருந்து ரூ.1,397 ஆகவும், Azadine பிராண்டு ரூ.5,964.70-ல் இருந்து ரூ.1,199.50 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளன.
- புற்றுநோய் சிகிச்சையின்போது வெள்ளை ரத்த அணுக்கள் குறைவதைத் தடுக்கப் பயன்படுத்தப்படும் Pegfilgrastim 6 mg ஊசி மருந்தின் Peg Filtero பிராண்டு ரூ.9,093-ல் இருந்து ரூ.1,631 ஆகக் குறைந்துள்ளது.
137 மருந்துகள் என்றால் 1,364 எப்படி?
புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஒரே மருந்தை வெவ்வேறு நிறுவனங்கள் பல பிராண்டு பெயர்களில் தயாரித்து விற்பனை செய்கின்றன. அதே மருந்து வெவ்வேறு அளவுகளிலும் மாத்திரை, ஊசி போன்ற வடிவங்களிலும் விற்பனை செய்யப்படலாம். இதனால் மத்திய அரசு தேர்வு செய்துள்ள 137 மருந்து வகைகளுக்குள் பல நிறுவனங்களின் ஆயிரக்கணக்கான தயாரிப்புகள் இடம்பெறுகின்றன. தற்போது 121 மருந்து வகைகளைச் சேர்ந்த 1,364 தயாரிப்புகளின் திருத்தப்பட்ட விலை விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட 137 மருந்துகளில் சில இன்னும் இந்தியச் சந்தையில் அறிமுகமாகவில்லை. அவை விற்பனைக்கு வரும்போதும் இந்த விற்பனை லாபக் கட்டுப்பாடு பொருந்தும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.3,540 கோடி சேமிப்பு
புற்றுநோய் மருந்துகளின் விலைக் குறைப்பால் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் ஆண்டுக்கு ரூ.3,540.38 கோடி சேமிப்பு கிடைக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. இது முந்தைய மதிப்பீட்டைவிட அதிகமாகும். நவ. 7-ந் தேதி வெளியான அறிக்கையில் ஆண்டுக்கு ரூ.3,502.31 கோடி சேமிப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கூடுதல் மருந்துத் தயாரிப்புகளின் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் சேமிப்பு மதிப்பீடும் அதிகரித்துள்ளது.
மருந்துக் கடைகள் கூடுதல் விலை வசூலிக்க முடியாது
திருத்தப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையைவிடக் கூடுதலாக மருந்துக் கடைகளோ, மருத்துவமனை மருந்தகங்களோ புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்யக் கூடாது என்று தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மருந்து நிறுவனங்கள், மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவமனைகள் புதிய விலைப்பட்டியலை பொதுமக்கள் பார்க்கும் வகையில் வெளியிட வேண்டும்.
நோயாளிகள் தாங்கள் பயன்படுத்தும் மருந்தின் புதிய விலையை மருந்துப் பெட்டியில் உள்ள MRP விவரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மேலும் Pharma Sahi Daam மொபைல் செயலி அல்லது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளம் மூலமும் விலையைச் சரிபார்க்கலாம்.
அதிக விலைக்கு மருந்துகள் விற்கப்பட்டால் Pharma Jan Samadhan இணையதளம் மூலமாகவோ, 1800-111-255 என்ற உதவி எண்ணிலோ புகார் அளிக்கலாம்.









