நவ. 9 முதல் 137 புற்றுநோய் மருந்துகளின் விலை 70% வரை குறைப்பு அமல்!

Published On:

| By Mathi

Cancer Drugs Pirce-Union Govt

புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் 137 மருந்துகளின் விலை 70% வரை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மருந்துகளின் புதிய விலை நவம்பர் 9-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

புற்றுநோய்க்கான மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுவதால் நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் பெரும் செலவை சந்தித்து வருகின்றனர். இந்த செலவைக் குறைக்க மத்திய அரசு புதிய நடவடிக்கை எடுத்துள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து மருந்துகளை வாங்கி, நோயாளிகளுக்கு விற்பனை செய்யும்போது இடையில் உள்ள விற்பனையாளர்கள் லாபம் வைத்து விற்கின்றனர். சில மருந்துகளுக்கு இந்த லாபம் மிக அதிகமாக உள்ளது.

இதைக் கட்டுப்படுத்த புற்றுநோய்க்கான 137 மருந்துகளைத் தேர்வு செய்துள்ள மத்திய அரசு, அவற்றின் விற்பனை லாபத்திற்கு வரம்பு நிர்ணயித்துள்ளது.

ADVERTISEMENT

இனி இந்த மருந்துகளின் அதிகபட்ச விற்பனை விலையில் 30% வரை மட்டுமே வர்த்தக லாபம் வைத்துக்கொள்ள முடியும்.

இதனால் சில மருந்துகளின் விலை 70% வரை குறைய வாய்ப்புள்ளது. அதாவது, உதாரணமாக ரூ.1,000-க்கு விற்கப்படும் ஒரு மருந்தின் விலை 70% குறைந்தால், அந்த மருந்தை ரூ.300-க்கு வாங்க முடியும்.

ADVERTISEMENT

ஏற்கெனவே 2019-ம் ஆண்டு புற்றுநோய்க்கான 42 மருந்துகளின் விற்பனை லாபத்திற்கு மத்திய அரசு கட்டுப்பாடு விதித்தது. இதனால் அந்த மருந்துகளின் 526 பிராண்டுகளின் விலை 90% வரை குறைந்தது.

தற்போது புற்றுநோய் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 137 மருந்துகளுக்கு இந்த விலைக் கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

நவம்பர் 9 முதல் புதிய விலை

மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் அடுத்த 7 நாட்களுக்குள் தங்களது மருந்துகளின் புதிய விலையை மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டும்.

நவம்பர் 9-ந் தேதி முதல் மருந்துக் கடைகளும் மருத்துவமனைகளும் குறைக்கப்பட்ட புதிய விலையில்தான் இந்த மருந்துகளை விற்க வேண்டும்.

மருந்துகளின் புதிய விலைப்பட்டியலை மருந்துக் கடைகளிலும் மருத்துவமனைகளிலும் பொதுமக்கள் பார்க்கும்படி வைக்க வேண்டும். மருத்துவமனைகள் தங்களது இணையதளங்களிலும் புதிய விலையை வெளியிட வேண்டும்.

பொதுமக்கள் தாங்கள் வாங்கும் புற்றுநோய் மருந்தின் விலை குறைந்துள்ளதா என்பதை மத்திய அரசின் Pharma Sahi Daam செயலி அல்லது தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

மருந்துகளின் விலை குறைக்கப்பட்டதால் அவற்றின் உற்பத்தியையோ விற்பனையையோ குறைக்கக் கூடாது என்றும் மருந்து நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share