லண்டன் SOAS-ல் அம்பேத்கர்–கலைஞர் ஆய்வுத் திட்டம்.. கேம்பிரிட்ஜில் கலைஞர் பெயரில் Ph.D. படிப்பு.. சபரீசனின் ரூ.16 கோடி நிதியுதவி!

Published On:

| By Mathi

Sabarisan-Research

இங்கிலாந்தில் உள்ள 2 புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் திராவிட இயக்கம், சமூக நீதி தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கான முயற்சிகளை தொழிலதிபர் சபரீசன் வேதமூர்த்தியும் அவரது மனைவியும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகளுமான செந்தாமரை ஸ்டாலினும் மேற்கொண்டுள்ளனர்.

SOAS பல்கலைக்கழகத்தில்…

லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகத்தில் அம்பேத்கர்-கலைஞர் பெயரில் ஆய்வாளர் உதவித்தொகைத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பொதுவாழ்க்கை, நிர்வாகம் மற்றும் சமூக நீதியில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர், முன்னாள் முதல்வர் கலைஞர் ஆகியோர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியின் அனுபவங்களையும் சமூக நீதி, சுயமரியாதை, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றையும் சர்வதேச கல்வியாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களிடம் கொண்டு சேர்ப்பதும் இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

இந்தத் திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் ஒரு ஆய்வாளர், பத்திரிகையாளர் அல்லது கொள்கை வகுப்பாளர் தேர்வு செய்யப்படுவார். அவர் பல்கலைக்கழகத்தில் ஒரு கல்விப் பருவம் தங்கியிருந்து சமூக நீதி, சுயமரியாதை, கூட்டாட்சி உள்ளிட்டவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ளலாம். தனது ஆய்வுகளைச் சர்வதேச கல்வியாளர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு வழங்கப்படும்.

ADVERTISEMENT

அவருக்கான பயணச் செலவு, விசா, உதவித்தொகை மற்றும் பல்கலைக்கழகக் கட்டணம் ஆகிய செலவுகளுக்கு ஆண்டுதோறும் நிதியுதவி வழங்கப்படும்.

இந்தத் திட்டத்துக்கு முதல் ஆண்டில் கல்வி, பத்திரிகை, சட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 88 பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த பகவாநிதி முதல் ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.

ADVERTISEMENT

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே உள்ள செங்கிப்பட்டியைச் சேர்ந்த பகவாநிதி, சமூகவியல் துறையில் கல்விப் பின்னணி கொண்டவர். தமிழகத்தில் தலித், பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளார்.

குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுடனும் அரசு அமைப்புகளுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். வன உரிமைகள் சட்டத்தின் கீழ் பழங்குடியின மக்கள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கும் உதவியுள்ளார். வனப்பகுதி மக்களின் வாழ்வாதாரம், சுகாதாரம் மற்றும் நிர்வாகம் தொடர்பான பிரச்சினைகளிலும் பணியாற்றியுள்ளார்.

தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான துணைத் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து SOAS பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

குறிப்பாக, பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான நிதி ஒதுக்கீடு, திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் ஆகியவற்றில் ஏற்பட்ட மாற்றங்களை ஆய்வு செய்கிறார். 2024-ம் ஆண்டு தமிழ்நாடு பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல் திட்டச் சட்டம் உருவான அரசியல் மற்றும் நிர்வாகச் சூழல்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்கிறார்.

மேலும் தமிழக அரசின் 2025–26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தனது ஆய்வின் ஒரு பகுதியாக ஆய்வு செய்துள்ளார்.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்…

இதேபோல இங்கிலாந்தில் உள்ள மற்றொரு புகழ்பெற்ற கல்வி நிறுவனமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் முனைவர் பட்ட ஆய்வாளர் உதவித்தொகைத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக சபரீசன் 13 லட்சம் பிரிட்டிஷ் பவுண்டுகள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.16 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.

இந்த நிதியின் மூலம் ஒரு மாணவர் 3 ஆண்டுகள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ள முடியும். திராவிட இயக்கம் தொடர்பான முனைவர் பட்டத்துக்குப் பிந்தைய ஆய்வுகளுக்கும் தொடர்ந்து நிதியுதவி வழங்கப்பட உள்ளது.

சமூக நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் முன்னாள் முதல்வர் கலைஞர் ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் வகையில் இந்த ஆய்வுத் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நன்கொடையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் உயர்கல்வி ஆய்வுகளை மேற்கொள்ள இந்தத் திட்டம் உதவும் என கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும் சபரீசன், செந்தாமரை ஸ்டாலின் ஆகியோர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் நன்கொடையாளர் அமைப்பிலும் (Guild of Cambridge Benefactors) இணைக்கப்பட்டுள்ளனர்.

சபரீசனுடன் சந்திப்பு

இதனிடையே லண்டன் SOAS பல்கலைக்கழகத்தில் முதல் ஆய்வாளராகத் தேர்வு செய்யப்பட்ட பகவாநிதி, சபரீசனை சந்தித்துப் பேசினார். அப்போது தமிழகத்தில் பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான நலத்திட்டங்கள் தொடர்பாகத் தான் எழுதிய Reclaiming the Mandate: From the Special Component Plan to a Right-based Development Architecture of Scheduled Castes and Scheduled Tribes என்ற ஆய்வறிக்கையை சபரீசனிடம் பகவாநிதி வழங்கினார்.

தனது SOAS ஆய்வு அனுபவம் குறித்து பகவாநிதி கூறுகையில், “இந்த 3 மாத ஆய்வாளர் திட்டம் என்னை அடுத்த கட்டத்துக்குத் தயார்படுத்தியுள்ளது. ஆங்கில மொழித் திறன் ஒரு தேர்வு நிபந்தனையாக இல்லாததும், நிதிச் சுமை இல்லாமல் ஆய்வில் முழுமையாகக் கவனம் செலுத்த முடிந்ததும் மிகவும் உதவியாக இருந்தது. அடுத்ததாக முனைவர் பட்ட ஆய்வு மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளேன். பல்கலைக்கழக ஆசிரியர்களும் என்னை ஊக்குவித்து வருகின்றனர்” என்றார்.

திராவிட இயக்கம், சமூக நீதி மற்றும் தமிழக அரசியல் தொடர்பான ஆய்வுகளை சர்வதேச அளவில் அதிகமானோரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என சபரீசன் தெரிவித்துள்ளார்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share