தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் (TAPS) கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத்தைக் குறைத்ததுடன், ஏற்கெனவே வழங்கிய கூடுதல் தொகையை 10 தவணைகளில் பிடித்தம் செய்யவும் பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவை முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
முந்தைய திமுக ஆட்சியில் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் TAPS அறிவிக்கப்பட்டது. இதற்கான அரசாணை ஜனவரி 9-ந் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், திட்டத்துக்கான முழுமையான விதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றது.
ஜூன் மாதம் விஜய் அரசு பிறப்பித்த அரசாணை
இந்த நிலையில், TAPS திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு இடைக்கால ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக ஜூன் 16-ந் தேதி அரசாணை எண் 111-ஐ முதல்வர் விஜய் அரசு வெளியிட்டது.
அதன்படி, 2026 ஜனவரி 1-ந் தேதி முதல் ஓய்வு பெற்ற, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய அரசு ஊழியர்களுக்கு அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி நிவாரணத்தையும் சேர்த்து இடைக்கால ஓய்வூதியமாக வழங்க உத்தரவிடப்பட்டது.
பணியில் இருக்கும்போது உயிரிழந்த தகுதியான அரசு ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் இந்த இடைக்காலத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
செப்டம்பரில் விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடு
ஆனால், செப்டம்பர் 11-ந் தேதி விஜய் அரசின் நிதித்துறை வெளியிட்ட கடிதத்தில் இடைக்கால ஓய்வூதியக் கணக்கீட்டில் முக்கியமான மாற்றம் செய்யப்பட்டது.
10 ஆண்டுகளுக்கு மேல், 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மாதம் ரூ.10,000 மற்றும் அதற்குரிய அகவிலைப்படி நிவாரணம் மட்டுமே வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
18 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் பணியாற்றியவர்களுக்கு மட்டுமே கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் அகவிலைப்படி நிவாரணம் வழங்கும் நடைமுறை தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு ஏற்கெனவே 30 சதவீத அடிப்படையில் கூடுதலாக இடைக்கால ஓய்வூதியம் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தொகையை செப்டம்பர் மாதம் முதல் 10 சம தவணைகளில் பிடித்தம் செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இறுதி ஓய்வூதியத்துக்கான தகுதியான பணிக்காலம் இன்னும் நிர்ணயிக்கப்படாத நிலையில், கூடுதலாக வழங்கப்படும் இடைக்காலத் தொகையைப் பின்னர் திரும்பப் பெற வேண்டிய சூழல் ஏற்படலாம் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக நிதித்துறை விளக்கம் அளித்தது.
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் எதிர்ப்பு
முதல்வர் விஜய் அரசின் இந்த உத்தரவுக்கு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
ஜாக்டோ ஜியோ கடந்த செப்டம்பர் 18-ந் தேதி வெளியிட்ட அறிக்கையில், TAPS திட்டத்துக்கான முழு விதிகளையே அரசு வெளியிடாத நிலையில், ஏற்கெனவே வழங்கிய ஓய்வூதியத் தொகையைத் திரும்பப் பிடிப்பதும், இடைக்கால ஓய்வூதியத்தைக் குறைப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஜாக்டோ-ஜியோ தெரிவித்தது. முதல்வர் விஜய் உடனடியாகத் தலையிட்டு நிதித்துறையின் இந்தக் கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியது.
இதேபோல, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கமும் விஜய் அரசின் TAPS திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. கடந்த ஆகஸ்ட் 19-ந் தேதி நடைபெற்ற அந்த இயக்கத்தின் மாநில ஆலோசனைக் கூட்டத்தில், திமுக அரசு அறிமுகப்படுத்திய TAPS திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்ற தவெகவின் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக விஜய் அரசு செயல்படுவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. TAPS திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 2 கட்டப் போராட்டங்களையும் அந்த இயக்கம் அறிவித்திருந்தது.
அக்டோபர் 15-ந் தேதி அரசு கல்லூரி ஆசிரியர்களும் இந்த உத்தரவைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்டோபர் 16-ல் வாபஸ்
இந்த நிலையில், தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் அருண் ராய், கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அக்டோபர் 16-ந் தேதி புதிய கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், செப்டம்பர் 11-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட அறிவுறுத்தல்கள் திரும்பப் பெறப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக ஜூன் 16-ந் தேதி அரசாணை எண் 111-ன்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றிய தகுதியான ஓய்வூதியர்களுக்கு கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகையுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணத்தைச் சேர்த்து இடைக்கால ஓய்வூதியம் வழங்கும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏற்கெனவே தொடங்கப்பட்ட கூடுதல் ஓய்வூதியத் தொகையைப் பிடித்தம் செய்யும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இடைக்காலமாக வழங்கப்பட்ட தொகைக்கும் TAPS விதிகளின்படி இறுதியாக வழங்கப்பட வேண்டிய தொகைக்கும் வித்தியாசம் இருந்தால், அது பின்னர் சரிசெய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜூன் மாதம் இடைக்கால ஓய்வூதியத்தை அறிவித்த விஜய் அரசு, செப்டம்பரில் அதைக் குறைத்து பணப் பிடித்தத்துக்கும் உத்தரவிட்டு, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் எதிர்ப்புகளுக்குப் பின்னர் அக்டோபரில் அந்த உத்தரவைத் திரும்பப் பெற்றுள்ளது.
