செவ்வாய் கிரகத்துக்கும் நெய்வேலி, திருச்சிக்கும் என்ன தொடர்பு?.. இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்த ஆச்சரியம்!

Published On:

| By Mathi

Mars-Trichy-Neyveli

செவ்வாய் கிரகத்தில் இருப்பதைப் போன்ற கனிமங்கள் தமிழகத்தின் நெய்வேலி, திருச்சி பகுதிகளில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு, செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் தண்ணீர் இருந்ததா? உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் இருந்ததா? என்பதை ஆய்வு செய்ய உதவும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். விண்கலங்கள் மூலம் கிடைக்கும் படங்கள் மற்றும் தகவல்களை மட்டும் வைத்து செவ்வாய் கிரகத்தில் உள்ள கனிமங்களின் தன்மையை முழுமையாக அறிந்துகொள்ள முடியாது. இதற்காக பூமியில் செவ்வாய் கிரகத்தைப் போன்ற நிலப்பரப்புகளையும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர் சஜின் குமார் கே.எஸ். தலைமையிலான ஆய்வுக் குழுவினர் தமிழகத்தின் நெய்வேலி, திருச்சி பகுதிகளிலும், தென் அமெரிக்க நாடான சிலியின் அடகாமா பாலைவனத்திலும் ஆய்வு மேற்கொண்டனர்.

ADVERTISEMENT

நெய்வேலியில் பழுப்பு நிலக்கரி அடுக்குகளிலிருந்து மெலன்டரைட் கனிமம் உருவாகும் விதம்- மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்ட ஆய்வுப் படம்.

இந்த ஆய்வில் நெய்வேலியில் மெலன்டரைட் (Melanterite) என்ற கனிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருச்சி பகுதியில் உள்ள வறண்ட தரிசு நிலப்பரப்பிலும், சிலியின் அடகாமா பாலைவனத்திலும் ஜிப்சம் (Gypsum) என்ற கனிமம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த 2 கனிமங்களும் தண்ணீருடன் தொடர்புடைய வேதியியல் மாற்றங்களால் உருவாகக்கூடியவை.

ஜிப்சம் கனிமம், கடந்த காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களைப் பாதுகாக்கக்கூடியது. நெய்வேலியில் கண்டுபிடிக்கப்பட்ட மெலன்டரைட் கனிமம், குறுகிய காலத்திற்கு ஈரப்பதம், அமிலத்தன்மை மற்றும் ஆக்சிஜனேற்றச் சூழல் நிலவியதற்கான ஆதாரமாக விளங்குகிறது.

செவ்வாய் கிரகத்திலும் இதுபோன்ற வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்தக் கனிமங்களைக் கண்டறிவதற்கு கேரள பல்கலைக்கழகத்தில் உள்ள அதிநவீன லேசர் ராமன் ஸ்பெக்ட்ரோமீட்டர் (Laser Raman Spectrometer) கருவி பயன்படுத்தப்பட்டுள்ளது. மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் DST-FIST திட்டத்தின் கீழ் இந்தக் கருவிக்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவுகள் கிரக அறிவியல் தொடர்பான Journal of Geophysical Research: Planets என்ற சர்வதேச ஆய்விதழில் 2 ஆய்வுக் கட்டுரைகளாக வெளியிடப்பட்டுள்ளன.

செவ்வாய் கிரகத்தில் கடந்த காலத்தில் தண்ணீர் இருந்ததற்கான தடயங்களையும், உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழல் இருந்திருக்குமா என்பதையும் புரிந்துகொள்ள இந்த ஆய்வுகள் உதவும்.

மேலும், உயிரினங்கள் வாழ்ந்ததற்கான தடயங்களைப் பாதுகாக்கக்கூடிய கனிமங்கள் எங்கெல்லாம் உள்ளன என்பதை அறிந்துகொள்வதன் மூலம், எதிர்கால செவ்வாய் கிரக ஆய்வுகளுக்கு ஏற்ற இடங்களைத் தேர்வு செய்யவும் முடியும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share