- ஓசை காளிதாசன்
மேற்குத் தொடர்ச்சி மலை தென்னிந்தியாவின் வாழ்வாதாரமாகத் திகழ்கிறது. இந்திய நிலப்பரப்பில் 5%-க்கும் குறைவான பரப்பளவைக் கொண்டிருந்தாலும் 28% மக்களுக்கு (சுமார் 40 கோடி பேர் ) இந்த மலை வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது.

ஆண்டில் சில நாட்கள் மட்டுமே பெய்யும் மழை நீரைத் தேக்கி வைத்து ஆண்டு முழுவதும் ஓடும் உயிர்ப்புள்ள ஓடைகளை உருவாக்குகிற இந்த மலையின் தனித்துவமான உயிர்ச் சூழல் அமைப்பே தென்னிந்திய ஆறுகளை ஈன்றெடுக்கும் தாய்மடியாகத் திகழ்கிறது. குடிநீர், வேளாண்மை, தொழில் என அனைத்தும் இந்த மலையில் உருவாகும் ஆறுகளைச் சார்ந்தே உள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலை இல்லையெனில் தென்னிந்தியா தார்பாலைவனத்தின் நீட்சியாகவே இருந்திருக்கும். எனவே இந்த மலை நமது தண்ணீர் மலையாகக் கருதப்படுகிறது.
காலநிலை மாற்றத்தின் விளைவாக மழை நாட்கள் குறைந்துள்ளன. பல ஆண்டுகளில் பருவமழைகள் பொய்த்துப் போகின்றன. அக்காலங்களில் கிடைக்கும் சொற்ப மழை நீரைத் தேக்கி வைத்து, சில மாதங்களுக்காவது ஆறுகளுக்கு உயிர்ப்பூட்டும் மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மழைக்காடுகளின் பாதுகாப்பு கூடுதல் கவனம் பெறுகிறது.
இந்த மலை அரிய உயிர்ச்சூழல் வளமையையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
பிரிட்டிஷ்காரர்கள் வந்த பிறகே மலையின் உயிர்ச் சூழல் பாதிப்புக்கு உள்ளானது. அவர்கள் சென்ற பிறகும் பாதிப்புகள் தொடர்ந்தன என்பது அவலம். கடந்த 1920-1990 காலகட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் காலங்காலமாய் இருந்த இயல் தாவர உயிர்ச்சூழல் பகுதிகளில் (original vegetation cover ) 40% அழிக்கப்பட்டுள்ளன. இப்போது 7% பகுதியில் மட்டுமே இயல் தாவரங்கள் மீதம் உள்ளன. மற்ற பகுதியில் இருப்பவை ஏற்கனவே அழிக்கப்பட்டு, பின்னர் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலைத் தாவரங்களாகும் (secondary vegetation).
இங்கு காணப்படும் தன்நில உயிர்கள் (Endemic species) இந்த மலையின் சிறப்புமிகு உயிர்ச்சூழல் வளமையாகக் கருதப்படுகிறது.



இங்குள்ள சுமார் 4300 வகை பூக்கும் தாவரங்களில் 2100 வகை இந்த மலையைத் தவிர உலகில் வேறெங்கும் இல்லை. சுமார் 650 வகை பசுமை மாறா மரங்களில் 360 வகை இங்கு மட்டுமே காணப்படுபவை. இங்குள்ள 11% வண்ணத்துப்பூச்சிகள், 40% தட்டான்கள், 41% மீன்கள், 78% இருவாழ்விகள், 62% ஊர்வன வகைகள் ஆகியவை இந்த மலையில் மட்டுமே காணப்படும் தன்நில உயிர்கள் ஆகும். வரையாடு, சிங்கவால் குரங்கு, நீலகிரி மந்தி உள்ளிட்ட பல நூறு உயிரினங்கள் இந்த மலையில் மட்டுமே காணப்படுபவை. உலகில் அதிக எண்ணிக்கையில் ஆசிய யானைகள், புலிகள் வாழும் இடமாகவும் இந்த மலை உள்ளது.
எனவேதான் உலகில் உள்ள 8 அரிதினும் அரிதான பல்லுயிரிய செற்றிடங்களில் (Biodiversity Hottest Hotspot ) ஒன்றாக மேற்குத் தொடர்ச்சி மலையை அறிஞர்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 2012 -ஆம் ஆண்டு இம்மலையின் 39 பகுதிகளை (7,953 ச.கி.மீ ) உலக பாரம்பரிய இயற்கைத் தலங்களாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

காலநிலை மாற்றத்தின் விளைவுகளை உலகம் உணர்ந்து வரும் சூழலில் 1,64,280 சதுர.கி.மீ பரப்பளவு கொண்ட இந்த மலையில் மீதமிருக்கும் பசுமைப் பரப்பு காற்றில் கலந்துள்ள மித மிஞ்சிய கரிமவளியைக் (corban dioxide ) குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது.
எனவே மேற்குத் தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு காலத்தின் தேவையாகிறது.
கடந்த1986-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 3, தகுதியுள்ள சில இடங்களை சூழலியல் உணர்திறப் பரப்பாக (Ecologically Sensitive Areas)
சட்டபூர்வமாக அறிவிக்க வழிவகை செய்கிறது. அதன்படியே மேற்குத் தொடர்ச்சி மலை அறிவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சூழலியல் அறிஞர்களாலும் செயல்பாட்டாளர்களாலும் முன்வைக்கப்பட்டது.
அதனை வலியுறுத்தி கடந்த1987-ஆம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலை அமைந்துள்ள 6 மாநிலங்களைச் சார்ந்த இயற்கை ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து 100 நாட்கள் ஒரு நெடும் பயணத்தை நடத்தினர். பயணத்தின் இறுதியில் 1988-பிப்ரவரியில் கோவாவில் “மேற்கு மலைப் பாதுகாப்பு மாநாடு” நடத்தப்பட்டது. அங்கு மலை பாதுகாப்புப் பிரகடனம் வெளியிடப்பட்டது. மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கம் உருவானது.
அந்த இயக்கத்தின் கோரிக்கை பல்வேறு சூழலிய அமைப்புகளால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டது.
அதன் விளைவாக பிரணாப்சன் குழு (2000), விஜயராகவன் குழு ( 2003) , மோகன்ராம் குழு (2006) ஆகிய குழுக்கள் அமைக்கப்பட்டு பரிந்துரைகள் பெறப்பட்டன. ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

கடந்த 2009-ஆம் ஆண்டு கோத்தகிரியில் நடைபெற்ற மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பு இயக்கத்தின் மாநாட்டில் பங்கேற்ற அன்றைய ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு.ஜெயராம் ரமேஷ் அவர்களிடம் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது. அவரின் முயற்சியால் 2010-ஆம் ஆண்டு முனைவர் மாதவ் காட்கில் தலைமையில் “மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு” (Western Ghats Geology Expert Panel) அமைக்கப்பட்டது.
மிகுந்த அக்கறையோடும் ஆழமான அறிவியல் தரவுகளோடும் மேற்கு மலை பாதுகாப்பிற்கான செயல்திட்டங்களை வரையறுத்த, அக்குழுவின் அறிக்கை 2011-ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை முழுமையும் சூழலியல் உணர்திறப் பரப்பாக (Ecologically Sensitive Area) அக்குழு கருதியது. மலையை 4 பகுதிகளாகப் பிரித்தது.
‘இந்திய காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் -1972 ‘ மூலம் பாதுகாக்கப்பட்ட பகுதியாக (Protected Areas) உள்ள சரணாலயங்கள், தேசிய பூங்காக்கள் ஆகியவை ஒரு பகுதியாகவும் மீதமுள்ள பகுதிகள் உச்ச உணர்திறப் பகுதி (ESZ 1), உயர் உணர்திறப் பகுதி (ESZ 2) , மித உணர்திறப் பகுதி (ESZ 3 ) என 3 சூழலியல் உணர்திறப் பகுதிகளாகவும் (Ecological Sensitive Zones) பிரித்து வரையறுக்கப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு ( Protected Areas) இணையாக உச்ச உணர்திறப் பகுதி ( ESZ 1) கருதப்பட்டதால் அவை இரண்டும் சேர்ந்து 60% இருக்க வரையறுக்கப்பட்டது. அவற்றோடு உயர் உணர்திறப் பகுதியும் ( ESZ 2) சேர்ந்து 75% இருக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது. இந்தியாவின் வனக் கொள்கைப்படி ( Forest policy ) மலைப்பகுதியில் மூன்றில் இரண்டு பங்கு (66%) நிலம் காடாக இருக்க வேண்டும் என்பதால் இவ்வாறு வரையறுக்கப்பட்டது. மீதமுள்ள 25% பகுதி மித உணர்திறப் பகுதி (ESZ 3 ) என பரிந்துரைக்கப்பட்டது.
ஆறு மாநிலங்களில் உள்ள 44 மாவட்டங்களைச் சார்ந்த 142 வட்டங்களும் ( taluks)
ஏதாவது ஓர் உணர்திறப் பகுதிக்குள் வரையறுக்கப்பட்டன.
ஒவ்வொரு உணர்திறப் பகுதிக்கும் அனுமதிக்கக் கூடாத அல்லது கட்டுப்படுத்த வேண்டிய செயல்பாடுகள் தனித்தனியே வரையறுக்கப்பட்டன. சில செயல்பாடுகள் மலை முழுமைக்கும் தடை செய்யப் பரிந்துரைக்கப்பட்டது.
மலைப்பகுதியின் சூழலியல், மலைவாழ் மக்களின் வாழ்வியல் ஆகியவற்றை மேம்படுத்த மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் ஆணையம் (Western Ghats Ecology Authority) அமைக்கப்பட வலியுறுத்தப்பட்டது.
இவ்வாறு மிகுந்த அக்கறையோடு வரையறுக்கப்பட்ட மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகள் ஒன்றிய, மாநில அரசுகளால் நிராகரிக்கப்பட்டது துயர நிகழ்வாகும்.

அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை அரசே நிராகரிப்பது நியாயமற்றது என
நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதன் விளைவாக வேறொரு குழு அமைக்கப்படும் என அறிவித்த அரசு திரு. கஸ்தூரிரங்கன் தலைமையிலான “உயர்நிலை பணிக்குழு’ (High Level Working Group) அமைத்தது. அக்குழு கடந்த 2013-ஆம் ஆண்டு தமது அறிக்கையை அரசிடம் ஒப்படைத்தது.
கஸ்தூரிரங்கன் குழு, மாதவ் காட்கில் குழுவின் பரிந்துரைகளைப் போல்
மலை முழுவதையும் சூழலியல் உணர்திறப் பரப்பாகக் கருதவில்லை . அக்குழு இம்மலைப் பகுதியை இயற்கை நிலப்பரப்பு (Natural Landscape) , பண்பாட்டு நிலப் பரப்பு (Cultural Landscape) என இருவகையாகப் பிரித்தது. பல்லுயிரியச் செழுமை மிகுந்த பகுதிகள் , பாதுகாக்கப்பட்ட பகுதிகள், உலகப் பாரம்பரிய இடங்களாக அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள், யானை, புலி ஆகியவற்றின் வாழ்விட இணைப்புப் பாதைகள் ( corridors) ஆகியவற்றை உள்ளடக்கியவை இயற்கை நிலப்பரப்பாகவும் . மக்கள் வாழ்விடங்கள், விளைநிலங்கள், தோட்டங்கள் ஆகியவை பண்பாட்டு நிலப்பரப்பாகவும் வரையறுக்கப்பட்டன. இயற்கை நிலப்பரப்பாக உள்ள 68,249 ச.கி.மீ பகுதியில் 90% பகுதியான 59,940 ச.கி.மீ மட்டும் சூழலியல் உணர்திறப் பரப்பாக ( ESA) அறிவிக்கப்பட்டது. இது மொத்த மலைப் பரப்பில் 36.49% ஆகும்.
கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் முழுமையானது அல்ல. பரிந்துரைக்கப்பட்ட பகுதிகளில் பெரும்பான்மை பகுதி ‘இந்திய காடுகள் பாதுகாப்பு சட்டம் 1980’ மூலம் சட்டப் பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்ட பகுதிகளாகும்.
எனினும் முதற்படியாக இவற்றையாவது நிறைவேற்ற வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் விரும்பினர். ஆனால் இக்குழுவின் பரிந்துரைகளையும் அரசுகள் நிராகரித்தன. எனவே மேற்கு மலை பாதுகாப்பு இயக்கம் மீண்டும் நீதிமன்றத்தையும் பசுமை தீர்ப்பாயத்தையும் நாடியது. அதன் விளைவாக ஒன்றிய அரசு அப்பரிந்துரைகளைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டு மாநிலங்களின் ஒப்புதலுக்கு அனுப்பியது. ஆனால் பல்வேறு காரணங்களைக் கூறி மாநில அரசுகள் அப் பரிந்துரைகளைப் புறக்கணித்து வருகின்றன.
கடந்த ஜூலை மாதம் ஏழாவது முறையாக வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்த பரப்பைக் காட்டிலும் கேரளாவில் 3114.3 சதுர.கி.மீ குறைக்கப்பட்டுள்ளது. எனவே வரைவு அறிக்கையின்படி 56,825.7 சதுர.கி.மீ பரப்பு மட்டுமே சூழலியல் உணர்திறப் பரப்பாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது மொத்த மலைப்பரப்பில் 34.59% மட்டுமே.
பெரும் பொருளீட்டும் கனிமச் சுரங்கம், வணிகத்தை மட்டுமே மையமாகக் கொண்ட சுற்றுலா, மலையைக் கூறு போட்டு விற்கும் நில வியாபாரம், உயிர்ச்சூழலைப் புறந்தள்ளும் வளர்ச்சித் திட்டங்கள் ஆகிய காரணங்களால் ஏற்படும் அழுத்தத்தால் மாநில அரசுகள் இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுக்கின்றன. இந்த மலையை வணிக நோக்கில் மட்டுமே பார்க்கும் சில வல்லமையான மனிதர்களின் தலையீட்டால் மலையின் பாதுகாப்பு புறந்தள்ளப்படுகிறது.
ஆனால் இந்த மலையில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கட்டுக்கடங்காத நில அமைப்பு மாற்றம் ஆபத்தானது.
இயற்கைப் பாதுகாப்பின் அவசியம் உணராத காலத்தில் இயற்கைக் காடுகள் அழிக்கப்பட்டுத் தேயிலை, காபித் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. அது பெரும் துயர்தான். ஆனால் இப்போது தேயிலைத் தோட்டங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறி வருகின்றன. இது பேராபத்தாகும்.
வசதி படைத்தவர்களுக்கு இந்த மலை விற்கப்படுகிறது. மாநில எல்லைகளைத் தாண்டி நிலம் வாங்கி ஓய்வு விடுதிகள், கேளிக்கை விடுதிகள் எழுப்பப்படுகின்றன.
காலம் காலமாக இந்த மலையில் வாழ்ந்த மக்கள் வரலாற்றில் முதல் முறையாக நிலமற்றவர்களாக மாற்றப்படுகின்றனர்.
பிறக்கிற இடத்திலேயே நம் ஆறுகள் மரித்துப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாழ்விடங்களையும் வலசைப் பாதைகளையும் இழந்து காட்டுயிர்கள் பரிதவிக்கின்றன
ஆனால் எளிய மக்களுக்கு எதிரானது எனக் கதைகட்டி, பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமல் தடுக்கப்படுகிறது.
அறிக்கையின்படி 20,000 சதுர மீட்டர் (சுமார் 2,15,000 சதுர அடி) வரை கட்டிடம் கட்ட அனுமதிக்கப்படுகிறது. இது குடியரசுத் தலைவரின் மாளிகையை விட பெரியது . உள்ளூர் மக்களா இத்தகு கட்டடங்களை கட்டப் போகிறார்கள்?
உண்மையில் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் எவையும் பரிந்துரைக்கப்படவில்லை.
மலை என்பது சிறு விளைவுகளாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் மென்மையான இயற்கை அமைப்பு (fragile ecosystem).

அண்மையில் நேபாளத்தில் ஏற்பட்ட பாதிப்பும், சில ஆண்டுகளுக்கு முன்பு வயநாட்டில் நிகழ்ந்த துயரமும் நமக்குப் படிப்பினையாக இருக்க வேண்டும். பெரு மழையும், பெருவெள்ளமும் எங்கு வேண்டுமானாலும் நிகழலாம் என்பதை அண்மைய காலநிலை நிகழ்வுகள் காட்டுகின்றன. இதில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாவது எளிய உள்ளூர் மக்கள்தான்.
மலைவாழ் மக்களுக்கு மட்டுமல்ல, தென்னிந்தியா முழுமைக்கும் இந்த மலைப் பாதுகாப்பு அவசியம் ஆகிறது.
மலை முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை. குறைந்தபட்சமாக 34.59% பகுதிகளுக்கு பாதுகாப்பை வலியுறுத்தும் இந்த பரிந்துரைகளை அனைத்து மாநிலங்களும் எவ்விதத் தயக்கமும் இன்றி ஏற்க அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்த வேண்டும்.
தமிழ்நாடு பகுதியில் 6914 சதுர கி.மீ சூழலியல் உணர்திறப் பரப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது மாநில மலைப்பரப்பில் 25.54% மட்டுமே. மாநிலத்தின் மொத்த நிலப்பரப்பில் 5.31% ஆகும்.
மலை சார்ந்த குறிஞ்சி நிலத்தைச் சேதப்படுத்தாமல் காத்து வைத்திருந்த தமிழர்களின் மரபை உணர்ந்து தமிழ்நாடு அரசு வரைவு அறிக்கையை ஏற்றுக் கொண்டதாக அறிவிக்க வேண்டும்.
மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்த முன்னோடி மாநிலம் எனும் பெருமையை ஈட்டிக் கொள்ள வேண்டும். பிற மாநிலங்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
இந்த மலையை சுற்றுலாத்தலமாக மட்டும் பார்க்கும் மனநிலை மாறி நமது தண்ணீர் மலையாக ஒட்டுமொத்த சமூகமும் கருத வேண்டும்.
மாதவ் காட்கில் குழு பரிந்துரையின்படி இந்த மலை முழுவதும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்பதை உணர வேண்டும்.
கட்டுரையாளர் குறிப்பு

ஒத்த கருத்துள்ள நண்பர்களுடன் சேர்ந்து `ஓசை’ என்ற சுற்றுச்சூழல் இயக்கத்தை 2000 ஆம் ஆண்டு முதல் நடத்திவருகிறார். மேற்கு மலைத்தொடர் பாதுகாப்பு இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர். கனரா வங்கியில் பணிபுரிந்த காளிதாசன் சுற்றுச்சூழல் கருத்தியலைப் பரப்புவதற்காகவும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் வங்கிப் பணியைத் துறந்தவர். தமிழ்நாடு வன உயிரின வாரியம், தமிழகக் கடலோர மேலாண்மைக் குழுமம், ஆனைமலை புலிகள் காப்பக ஆளுமைக்குழு உள்ளிட்ட பல்வேறு உயர்நிலை அமைப்புகளில் உறுப்பினராக இருந்துள்ளார்.
இவரைத் தொடர்புகொள்ள : 9443022655, pasumaiosai@gmail.com
