நா.மணி
உலகம் எதிர்கொண்டிருக்கும் இன்றைய தலையாய ஆபத்து எது என்ற கேள்விக்கு, காலநிலை மாற்றம் என்று பதிலளிப்பதில் பெரும்பாலானோருக்கு எந்தச் சந்தேகமும் இருக்காது.
அதற்கடுத்த மிகப் பெரிய ஆபத்து எது என்று கேட்டால், சற்றே யோசிக்க வேண்டியிருக்கும். அது பல்லுயிர் அழிவு. இந்த இரு பேராபத்துகளையும் எதிர்கொள்வதற்காக உலகம் முழுவதும் அறிவியல் ஆய்வுகள் நடைபெறுகின்றன. புதிய புதிய தரவுகள் வெளிவருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து மாநாடுகளை நடத்துகின்றன. எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. ஆனால், இத்தனை அறிவியல் கண்டுபிடிப்புகளும், ஆய்வுகளும், கருத்தரங்குகளும் இணைந்தும் இந்தப் பேரழிவைத் தடுத்து நிறுத்துவதற்குத் தேவையான சமூக சக்தியாக இன்னும் மாறவில்லை. ஏன்?
காலநிலை மாற்றமும் பல்லுயிர் அழிவும் இன்னும் மனிதர்களின் அறிவைத் தொட்ட அளவுக்கு அவர்களுடைய உணர்வைத் தொடவில்லை என்பதும் அதற்கான ஒரு முக்கியமான காரணம். ஒரு பேராபத்து புள்ளிவிவரமாகவும் அறிவியல் அறிக்கையாகவும் மட்டுமே இருந்துவிட்டால் அது சமூக மாற்றத்தை உருவாக்காது. அது மனிதர்களின் நெஞ்சுக்குள் செல்ல வேண்டும். நெஞ்சைத் தைக்க வேண்டும். அப்போதுதான் அதற்கு எதிரான ஒரு பண்பாட்டு எதிர்வினை உருவாகும்.
அந்த இடத்தில்தான் இலக்கியம் தேவைப்படுகிறது. ஒரு அறிவியல் அறிக்கை நம்மை எச்சரிக்கலாம். ஆனால் ஒரு சிறந்த இலக்கியப் படைப்பு நம்முடைய மனநிலையையே மாற்றிவிடும்.
அத்தகைய ஒரு பண்பாட்டு முயற்சியாகத்தான் கவிஞர் அறிவுமதியின் ‘பாரி’.

இந்த நூல் பாரியின் கதையை மட்டும் சொல்லவில்லை. சங்க இலக்கியங்களை மீண்டும் வாசிக்கச் செய்கிறது. அதைவிட முக்கியமாக, இயற்கையோடு மனிதன் கொண்டிருந்த உறவைப் பற்றிய சங்கத் தமிழரின் நுண்ணுணர்வை இன்றைய காலநிலை மாற்றத்தின் வெளிச்சத்தில் மறுவாசிப்பு செய்கிறது. புறநானூறு போர்களின் வரலாறு மட்டுமல்ல
சங்க இலக்கியங்களில் பல மன்னர்கள், போர்கள், வீரர்கள், கொடை, அரசியல் ஆகியவற்றின் தொகுப்பு என்ற ஒரு பொதுவான வாசிப்பு நம்மிடம் நீண்ட காலமாக இருந்து வருகிறது. அந்த வாசிப்பின் காரணமாக அதன் உள்ளே புதைந்து கிடக்கும் மிகப் பெரிய சூழலியல் சிந்தனைப் புதையலை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்.“சங்க இலக்கியம் தானே என் சடுதியில் புறந்தள்ளுவது எவ்வளவு பெரிய அறிவீனம் என்பதை கவிஞர் அறிவுமதி இந்த நூலின் வழியாக நமக்கு உணர்த்துகிறார்.
இறையன்பு அவர்கள் சுட்டிக்காட்டியிருப்பதைப் போல, இதுவரை தமிழ் சமூகம் முழுமையாகக் கண்டு கொள்ளாத ஒரு புதையலை அறிவுமதி நம் முன் எடுத்துவைக்கிறார்.
அந்தப் புதையல் என்ன?

இயற்கையைப் பாதுகாப்பது என்பது சங்கத் தமிழரின் வாழ்வியல் அறம்.
இன்று நாம் ‘பல்லுயிர் பெருக்கம்’, ‘சூழலியல் சமநிலை’, ‘சுற்றுச்சூழல் பாதுகாப்பு’, ‘காலநிலை நீதி’ என்று பல சொற்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால் இவற்றின் அடிப்படை உணர்வுகளில் பலவற்றை சங்கப் புலவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தங்கள் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து பதிவு செய்திருக்கிறார்கள்.
அதை அறிவுமதி நவீன சூழலியல் மொழியோடு கவி நடையில் உரையாட வைக்கிறார்.
மனித வரலாற்றின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று சக்கரம்.
அது மனித நாகரிகத்தின் இயக்கத்தை வேகப்படுத்தியது. ஆனால் அதே சக்கரம் தேராகவும், குறிப்பாக போர்த் தேராகவும் மாறியபோது, அது அழிவின் கருவியாகவும் மாறியது.
இதைத்தான் சங்கப் புலவர்கள் எவ்வளவு நுட்பமாகப் பார்த்திருக்கிறார்கள் என்பதை அறிவுமதி வெளிப்படுத்துகிறார்.
தேர்ச் சக்கரம் ஒரு பாதையில் செல்வது என்பது நமக்கு சாதாரணமான காட்சி. ஆனால் அந்தச் சக்கரம் வழியில் முளைக்கும் ஒரு கொடியை அறுக்கிறது; மலரைச் சிதைக்கிறது; எண்ணற்ற நுண்ணுயிர்களை அழிக்கிறது; தன் பாதையில் வாழும் உயிர்களின் இயல்பான இயக்கத்தைச் சிதைக்கிறது. இதைக் கவனித்த சங்கப் புலவர்களின் பார்வை எவ்வளவு நுண்ணியது! ஒரு பச்சைக் கொடியைத் தேர் அறுத்துச் செல்வதை ‘பச்சைப் படுகொலை’ என்ற உணர்வோடு பதிவு செய்யும் அந்தச் சிந்தனை, இன்றைய சூழலியல் சொற்களைக் காட்டிலும் எவ்வளவு ஆழமானது!
இயற்கையை அழிப்பது என்பது வெறும் ‘சேதம்’ அல்ல. அது ஒரு உயிர் இழப்பு. ஒரு உயிரை அழிப்பது என்பது தனித்த உயிரை மட்டுமல்ல, அதனோடு தொடர்புடைய உயிர்ச் சங்கிலியின் ஒரு கண்ணியை உடைப்பதாகும்.
பல்லுயிர் சங்கிலி உடைந்தால் உலகமே குலையும்
அறிவுமதியின் இந்த நூலின் மையச் செய்திகளில் ஒன்று இதுதான்,
“பல்லுயிர்ச் சங்கிலித் தொடரின் அழகியலால்தான் இந்த உலகம் இயங்குகிறது.”
இந்தக் கருத்தை நாம் உணர்வுபூர்வமாகப் புரிந்துகொண்டால், பல்லுயிருக்கு எதிராகச் செயல்படும் மனநிலை எங்கிருந்து வரும்?
ஒரு சிறு உயிரைக் கொல்வது கூட உலகச் சுழற்சியின் ஒரு பல்லை உடைப்பதாக இருந்தால், மனிதன் இயற்கையின் எஜமானன் அல்ல; அவன் இயற்கையின் ஒரு பங்காளி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.
இதுதான் இந்த நூலின் மிகப்பெரிய பண்பாட்டு பங்களிப்பு.
வனத்திற்குள் ஒரு தேர் செல்லும்போது, அதன் சக்கரத்தின் சத்தம் மட்டுமல்ல, அந்த வனத்தில் வாழும் எண்ணற்ற உயிர்களின் அச்சமும் கவனிக்கப்பட்டிருக்கிறது. தேரின் மணிகள் அசைந்து ஒலித்து வன உயிர்களை அச்சுறுத்தக்கூடாது என்பதற்காக அவற்றை அடக்கிக் கட்டி விட்டு தேரைச் செலுத்திய மன்னனின் செயல், இன்றைய வன உயிர்களின் நுண்ணுர்வு (wildlife sensitivity) என்ற கருத்துக்குக் கூட ஒரு பழமையான முன்னோடியாகத் தோன்றுகிறது.
‘பல்லுயிர்’ என்பது அறிவியல் ஆய்வகங்களின் சொல்லாக இருக்கிறது. ஆனால் சங்கப் புலவர்களின் உலகில் அது வாழ்வின் இயல்பாக இருந்திருக்கிறது.
இயற்கையைப் பாதுகாப்பதற்கு அறிவியல் அறிவு மட்டும் போதாது. இயற்கையின் மீதான நுண்ணுணர்வு வேண்டும்.
அந்த நுண்ணுணர்வைத்தான் இந்த நூல் நமக்கு மீட்டுத் தருகிறது.
‘காட்டுமிராண்டி’ யார்?

இந்த நூலை வாசிக்கும்போது ஒரு சொல் நம்மையே திரும்பிப் பார்க்கச் செய்கிறது.
மரங்களை வெட்டி, ஆறுகளைத் திருப்பி, மலைகளைப் பிளந்து, உயிரினங்களின் வாழிடங்களை அழித்து வாழ்வதையா? இயற்கையோடு தொடர்புடைய மக்களை ‘காட்டுமிராண்டிகள்’ என்று அழைப்பதா? எவ்வளவு பெரிய முரண்! பூர்வகுடிகள் இயற்கையின் பங்காளிகளாக இருந்திருக்கிறார்கள். பின்னாளில் வந்த ‘வளர்ச்சி’தான் காடுகளை வெட்டுகிறது; ஆறுகளை மாசுபடுத்துகிறது. உயிரினங்களின் வாழிடங்களை அழிக்கிறது.
இந்த முரணை அறிவுமதி மிக வலுவாக நம்முன் நிறுத்துகிறார்.
மரத்தை வெட்டுவதை வெறும் மரம் வெட்டுதல் என்று அல்லாமல் காட்டில் நடக்கும் ஒரு கொலை என்று சங்கப் புலவர்கள் பதிவு செய்திருந்தார்கள் என்பதை அறியும் போது, இயற்கைக்கும் மனிதனுக்கும் இடையிலான உறவை அவர்கள் எந்த அளவுக்கு அறமாகப் புரிந்துகொண்டிருந்தார்கள் என்பதை உணர முடிகிறது.
பாரியின் வள்ளல் தன்மை உலகறிந்தது.ஆனால் பாரியை வெறும் ‘முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல்’ என்று மட்டுமே நினைவுகூர்வது, பாரியின் மிகப்பெரிய பண்பாட்டு அர்த்தத்தைச் சுருக்கிவிடுகிறது.
அறிவுமதி பாரியை வேறொரு கோணத்தில் பார்க்கச் செய்கிறார்.
பாரி இயற்கைக்கு வெளியே நின்ற மன்னன் அல்ல. இயற்கைச் சூழலின் ஒரு குடிமகன்.
தனக்கென ஒரு பிடி மண்ணைக்கூடத் தனியுரிமையாகக் கருதாத மன்னன். தன் நாட்டையும் அதன் வளங்களையும் தன்னுடைய சொத்தாக மட்டும் பார்க்காத மன்னன். மழை, மண், மரம், கொடி, மலர், விலங்கு என எல்லாவற்றுடனும் இணைந்த வாழ்வின் ஒரு பகுதியாகத் தன்னை உணர்ந்த மன்னன்.
அதனால் ‘முல்லைக்குத் தேர் கொடுத்தான்’ என்ற செய்தி வெறும் வள்ளல்தனத்தின் கதை அல்ல.
அது ஒரு சூழலியல் குறியீடு.
காற்றில் அசையும் ஒற்றைக் கொடியைத் தாங்குவதற்காகத் தன் தேரையே விட்டுச் செல்லும் மனநிலை, மனிதன் தன்னை இயற்கையின் மேலானவன் என்று கருதாத மனநிலை.
இந்த இடத்தில் பாரி ஒரு வரலாற்று மன்னனாக இருப்பதைத் தாண்டி, இன்றைய காலநிலை நெருக்கடியின் காலத்தில் நமக்குத் தேவையான ஒரு பண்பாட்டு உருவகமாக மாறுகிறார்.
நூல் முன்வைக்கும் இன்னொரு முக்கியமான விசயம், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மனிதனுக்கு விடுதலையைக் கொடுக்கிறதா, அல்லது அழிவை வேகப்படுத்துகிறதா?
சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது முன்னேற்றத்திற்காக. ஆனால் அது போர்த் தேராக மாறியபோது அழிவைத் துரிதப்படுத்தியது.
இன்றைய நிலை அதைவிட ஆபத்தானது.நாம் ஆயுதங்களைத் தொடர்ந்து நவீனப்படுத்துகிறோம். ஆனால் குடிநீரை உறுதி செய்ய முடியாமல் தவிக்கிறோம். அழிவுக்கான தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கிறோம்.
உயிர்வாழ்வுக்கான இயற்கை வளங்களைப் பாதுகாப்பதில் அதே அளவிலான அக்கறை காட்டுவதில்லை.
இதற்கான காரணத்தை அறிவுமதி மிகத் தெளிவாகச் சொல்கிறார்:
அறிவியல் முன்னேற்றம் யாருடைய தலைமையில், எந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் அதன் விளைவைக் தீர்மானிக்கிறது.
அறிவியல் மனிதனின் கையில் இருக்கும்போது அது முன்னேற்றத்தின் கருவியாக இருக்கலாம். அதிகாரத்தின் கையில் சிக்கும்போது அது அழிவின் கருவியாகவும் மாறலாம்.
இயற்கையைப் பார்த்த பார்வை
சங்க இலக்கிய புலவர்களின் மிகப்பெரிய சிறப்பு அவர்கள் இயற்கையை ‘பார்த்தது’ மட்டுமல்ல; இயற்கையின் உள்ளே வாழ்ந்தார்கள் என்பதுதான்.
மலர் என்பது மலர் மட்டுமல்ல.
அதற்குள் மகரந்தச் சேர்க்கை இருக்கிறது.
தூசி என்பது வெறும் தூசி அல்ல. அந்த தூசி/ புழுதி பற்றிய பார்வை, அறிவியல் அறிஞர்கள் ஹிக்ஸ்-போசான் கடவுள் துகள் ஆய்வுப் பயணத்தின் தொடக்க நிலை முயற்சி என்று கூட அழைக்கலாம். வனம் என்பது மரங்களின் கூட்டம் மட்டுமல்ல.அதற்குள் எண்ணற்ற உயிர்களின் உலகம் இருக்கிறது.
தேரின் சக்கரம் என்பது வெறும் இயக்கத்தின் கருவி அல்ல.
அது செல்லும் இடத்தில் எத்தனை உயிர்கள் பாதிக்கப்படுகின்றன என்பதையும் சிந்திக்க வேண்டிய கருவி.
இவ்வளவு நுட்பமாக இயற்கையை அவதானித்து எழுத முடியுமா என்று நம்மையே கேட்க வைக்கும் அளவுக்கு சங்கப் புலவர்களின் பார்வை விரிந்திருக்கிறது. இயற்கையை வெறும் காட்சியாக அல்ல, உறவாகப் பார்த்திருக்கிறார்கள்.
அதுவே சங்க இலக்கியத்தின் சூழலியல் ஆழம்.
‘பூமிக்குள் தான் வாழ வேண்டும்; இதற்குள் தான் சாக வேண்டும்’

அறிவுமதியின் சில வரிகள் நம்மை அறிவால் அல்ல, உணர்வால் தாக்குகின்றன. “இந்தப் பூமிக்குள் தான் வாழ்ந்தாக வேண்டும்; இதற்குள் தான் செத்தாக வேண்டும்.” இதுதான் நமது காலத்தின் மிக அடிப்படையான உண்மை. நாம் பூமியை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இன்னொரு உலகத்தை உருவாக்கிவிடவில்லை. இந்தப் பூமிதான் நமது ஒரே வீடு.
அப்படியிருக்க, நாம் வாழும் வீட்டையே அழித்துக்கொண்டிருக்கிறோம்.
இந்த உணர்வு நெஞ்சில் ஆழமாகப் பதிந்தால், மரத்தை வெட்டச் செல்லும் கை தயங்கும். ஒரு கொடியை அறுக்கும் முன் மனம் பதறும். ஒரு வனத்தை அழிக்கும் திட்டத்தின் முன் மனிதன் கேள்வி எழுப்புவான்.
இலக்கியம் செய்ய வேண்டியது இதுதான். சட்டம் தடை செய்யாத இடத்தில் மனசாட்சி தடுக்க வேண்டும். போர் வேண்டாம்; மலர்களின் புன்னகை போதும்
பாரியைப் பற்றிய இந்த மறுவாசிப்பு, இறுதியில் நம்மை இன்றைய உலகின் மிகப்பெரிய கேள்விக்கு அழைத்துச் செல்கிறது.
போர்., ஒரு தேரின் சக்கரம் ஒரு சிறு கொடியை அழிப்பதிலிருந்து தொடங்கும் வன்முறை, இன்று மனித இனத்தை அழிக்கக்கூடிய ஆயுதங்களாக வளர்ந்திருக்கிறது.
நாம் போர்க்கருவிகளை நவீனப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். ஆனால் குடிநீருக்காகவும் தூய காற்றுக்காகவும் பாதுகாப்பான வாழிடத்திற்காகவும் போராட வேண்டிய காலத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே, இந்த நூலின் உள்ளார்ந்த அழைப்பு இதுவாக இருக்கிறது,
உயிர்ப் பலி வேண்டாம். உயிர்ச்சூழல் பலி வேண்டாம். பூமிக்கு அழிவு வேண்டாம். போர் வேண்டாம். மலர்களின் புன்னகை போதும்.ஒரு மறக்கப்பட்ட மகாகவிதையை மீட்டெடுக்கும் நூல். சங்க இலக்கியத்தை இவ்வளவு காலம் நாம் படித்தும், அதன் உள்ளே இருந்த இந்தச் சூழலியல் அறத்தை ஏன் கவனிக்கவில்லை என்ற மனக்குறை இந்த நூலை வாசித்து முடித்தபின் ஏற்படுகிறது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த புலவர்கள் இயற்கையின் ஒவ்வொரு அசைவையும் கவனித்திருக்கிறார்கள். ஒரு கொடியின் துயரத்தையும், ஒரு மலரின் அழிவையும், ஒரு வனத்தின் அமைதியையும், சிறு உயிர்களின் அச்சத்தையும் பதிவு செய்திருக்கிறார்கள்.
காலநிலை மாற்றத்தின் காலத்தில் அறிவியல் எச்சரிக்கைகளுக்கு அடுத்தபடியாக நமக்குத் தேவைப்படுவது இப்படிப்பட்ட உணர்வூட்டும் படைப்புகள்தான்.
அந்த வகையில், அறிவுமதியின் ‘பாரி’ ஒரு நூல், நாம் மறந்துபோன சூழலியல் மனசாட்சியைத் தேடும் ஒரு பண்பாட்டுப் பயணம்.
சங்க இலக்கியங்களில் புதைந்து கிடந்த ஒரு மகத்தான உலகப் பார்வையை நவீன உலகத்தின் பேராபத்துகளோடு இணைத்து நம் முன் வைத்திருக்கும் அறிவுமதிக்கு தமிழ் சமூகம் நன்றி கடன்பட்டிருக்கிறது.
காலநிலை மாற்றம் நம்மைச் சுற்றி நெருங்கிக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், ‘பாரி’ நம்மை விழித்தெழச் செய்யும் ஒளிவிளக்கு.

