போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் முதல்வராக நியமித்தது எப்படி என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ வளாகத்தில் உடற்கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இதன் முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் செயல்பட்டு வந்தார்.
இவர் அதே கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில், ஜார்ஜ் ஆபிரகாம் மீது போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட ஜார்ஜ் ஆபிரகாம், பின்னர் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்த சூழலில் உடற்கல்வியியல் கல்லூரியின் முதல்வராக ஜார்ஜ் ஆபிரகாம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
எனவே அவரது ஜாமினை ரத்து செய்ய கோரி குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி என். ரமேஷ் முன் இன்று (அக்டோபர் 15) விசாரணைக்கு வந்தது. அப்போது குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் மூத்த வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆஜராகி, ‘பாலியல் தொல்லை அளித்ததாக ஜார்ஜ் ஆபிரகாமுக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு உள்ளது? அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். எனவே மாணவியின் பாதுகாப்பு குறித்த கவலை எழுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்ட வாய்ப்புள்ளது. குற்ற வழக்கில் மூன்று ஆண்டுகளாகியும் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை
தமிழ்நாடு மகளிர் ஆணையம் அவரை கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளது” என்று தெரிவித்தார்.
ஜார்ஜ் ஆபிரகாம் சார்பில், ஏற்கனவே இது போல ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என கேட்டு தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போக்சோ வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவி படிக்கும் அதே கல்லூரியில் குற்றம் சாட்டப்பட்டவரை மீண்டும் நியமித்தது எப்படி என்று கல்லூரி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினார்.
அவரை பணியில் இருந்து இடமாற்றம் செய்ய உயர் நீதிமன்றமே உத்தரவிட நேரிடும் என்று எச்சரித்த நீதிபதி, ஜாமினை ரத்து செய்யக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி ஜார்ஜ் ஆபிரகாமுக்கு உத்தரவிட்டார்.
மேலும் போக்சோ வழக்கில் விசாரணையை தொடங்காமல் மூன்று ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை நவம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
