தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக்டோபர் 15-ந் தேதி) தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தென் மாவட்டங்களிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் வட உள் மாவட்டங்களில் இயல்பைவிடக் குறைவான மழையே பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேகவெடிப்பு போன்ற தீவிர மழை நிகழ்வுகள் ஏற்படுமா என்ற கேள்விக்கும் வானிலை ஆய்வு மையம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் இன்று (அக்டோபர் 15) செய்தியாளர்களிடம் வானிலை ஆய்வு மைய இயக்குநர் துரை கூறியதாவது: தென்மேற்குப் பருவமழை இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியுள்ளது. அதேநேரத்தில் தென்னிந்தியப் பகுதிகளில் வடகிழக்குத் திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இந்தக் காற்று தரைப்பகுதியிலிருந்து 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. வட தமிழ்நாடு, தெற்கு ஆந்திரா, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.
பொதுவாக, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு வடகிழக்குத் திசைக் காற்று வீச வேண்டும். அந்தக் காற்று 1.5 கிலோ மீட்டர் உயரம் வரை பரவியிருக்க வேண்டும். பரவலாக மழை பெய்திருக்க வேண்டும். இந்த 3 நிபந்தனைகளும் பூர்த்தியாகியுள்ளதால் வடகிழக்குப் பருவமழை இன்று தொடங்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களை புரட்டி எடுக்கும்
இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இயல்பான அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் எல்லா மாவட்டங்களிலும் ஒரே அளவில் மழை பெய்யாது.
குறிப்பாக தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. காவிரி டெல்டா மாவட்டங்களிலும் இயல்பைவிட அதிக மழை கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வட மாவட்டங்களுக்கு மழை குறைவு
வட உள் மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் வட கடலோர மாவட்டங்களில் இயல்பான அளவில் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் அளவை முன்கூட்டியே கணிப்பதில் சில நிச்சயமற்ற நிலைகள் உள்ளன.
எனவே வட மாவட்டங்கள் அனைத்திலும் மழை குறையும் என்று கூற முடியாது. வட உள் மாவட்டங்களுக்கும் வட கடலோர மாவட்டங்களுக்கும் இடையே மழைக் கணிப்பில் வேறுபாடு உள்ளது. இவ்வாறு துரை கூறினார்.
மேகவெடிப்பு ஏற்படும்?
அதன் பின்னர், “கடந்த ஆண்டைப் போல குறுகிய நேரத்தில் மிக அதிக மழை பெய்யக்கூடிய தீவிர வானிலை நிகழ்வுகள் (மேகவெடிப்பு) மீண்டும் ஏற்படுமா?” என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த துரை, “காற்று ஓரிடத்தில் குவிந்து மேகங்கள் உருவாகும்போது அதிக மழை பெய்யலாம். குறிப்பாக கடலோரப் பகுதிகளில் வெப்பமும் ஈரப்பதமும் அதிகமாக இருப்பதால் தீவிர வானிலை நிகழ்வுகள் உருவாக வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும், ஆனால் ஒரு மாதம் அல்லது 2 மாதங்களுக்கு முன்பே குறிப்பிட்ட இடத்தில் மேகவெடிப்பு போன்ற தீவிர மழை பெய்யும் என்று துல்லியமாகக் கணிக்க முடியாது. குறிப்பிட்ட இடத்தில் 90 செ.மீ. அளவுக்கு மழை பெய்யும் என்பதை முன்கூட்டியே மிகத் துல்லியமாகக் கணிப்பது சாத்தியமில்லை.
வானிலை ஆய்வு மையம் அடுத்த 7 நாட்களுக்கான முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களின் அடிப்படையில் கனமழை, மிக கனமழை எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன” என்றார்.
வங்கக்கடலில் புயல் உருவாகுமா?
அதேபோல வங்க கடலில் புயல்கள் உருவாகுமா என்ற கேள்விக்கு, “அடுத்த 1 வாரத்திற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பில்லை; ஆனால் அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அவ்வாறு உருவானால் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிக மழை பெய்யக்கூடும். எல் நினோ காலங்களில் பொதுவாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை (புயல் சின்னம்) குறைவாகவே உருவாகும்” என்றார் துரை.
தென்மேற்குப் பருவமழை 23% குறைவு
அத்துடன், ”தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட சுமார் 23% குறைவாகப் பெய்துள்ளது. 2002-ம் ஆண்டு தென்மேற்குப் பருவமழை 45% குறைவாகப் பதிவாகியிருந்தது. 2012-ம் ஆண்டு 23% குறைவாகவும், 2016-ம் ஆண்டு 20% குறைவாகவும் பதிவாகியிருந்தது.
கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மிகவும் குறைவாகப் பெய்துள்ளது” என்றார் துரை.
எல் நினோவால் வெப்பநிலை அதிகரிக்குமா?
எல் நினோ குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, ”பொதுவாக எல் நினோ நிலவும் ஆண்டுகளில் வெப்பநிலை இயல்பைவிட அதிகமாகக் காணப்படும்.
தமிழகத்தின் சில பகுதிகளில் தற்போது இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக உள்ளது. ஆனால் இதனை வெப்ப அலை என்று கூற முடியாது.
எல் நினோ நிலை ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் வரை நீடித்து, அதன் பின்னர் படிப்படியாகக் குறைய வாய்ப்புள்ளது. இதனால் ஜனவரி மாதத்திலேயே கோடைக்காலம் தொடங்கிவிடும் என்று கூற முடியாது” என்றார் துரை.
