வந்தாச்சு… வந்தாச்சு… வடகிழக்கு பருவமழை.. இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. நாளை 6 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

Published On:

| By Mathi

North East Monsoon-Rain-Weather

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை இன்று (அக்டோபர் 15-ந் தேதி) தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று 9 மாவட்டங்களுக்கும், நாளை 6 மாவட்டங்களுக்கும் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ADVERTISEMENT

தென்மேற்குப் பருவமழை இன்று இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் முழுமையாக விலகியுள்ளது. அதேநேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, கேரளா மற்றும் மாஹே பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது.

தென் தமிழகக் கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. மேலும், தென்னிந்தியப் பகுதிகளிலும் வங்கக்கடலிலும் கிழக்கு மற்றும் வடகிழக்குத் திசைக் காற்று வீசத் தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது.

இன்று 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

இன்று (அக்டோபர் 15-ந் தேதி) நீலகிரி, கோவை, தேனி, ஈரோடு, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, திருவண்ணாமலை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருநெல்வேலி, திண்டுக்கல் ஆகிய 16 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்தப் பகுதிகளுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் பகுதிகளில் இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

நாளை (அக்டோபர் 16-ந் தேதி) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, மதுரை ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய 20 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு எப்போது கனமழை?

அக்டோபர் 17-ந் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் ஆகிய 26 மாவட்டங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நீலகிரி, கோவைக்கு?

அக்டோபர் 18-ந் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலும், அக்டோபர் 19-ந் தேதி நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், மதுரை ஆகிய 6 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும்.

அக்டோபர் 20-ந் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர், மதுரை ஆகிய 4 மாவட்டங்களிலும், அக்டோபர் 21-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி ஆகிய 3 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 முதல் 26 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

கரூரில் 11 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகைமலையில் 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம், காரைக்கால், சேலம் மாவட்டம் தம்மம்பட்டி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை, நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share