தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் நாளை (அக்டோபர் 16) ஒரு நாள் பயணமாக கோவை வரும் நிலையில், மாநகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கோவையில் ரூ.300 கோடி மதிப்பில் பிரம்மாண்டமான முறையில் பெரியார் நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் நாளை இந்த நூலகத்தை திறந்து வைக்க கோவை வர உள்ளார்.
இந்நிலையில் முதலமைச்சர் கோயம்புத்தூர் விமான நிலையத்திலிருந்து காந்திபுரம் செல்லும் வழித்தடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு, விமான நிலையம் முதல் நிகழ்ச்சி நடைபெறும் இடம் வரையிலான பகுதிகளில் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நாளை காலை 11 மணிக்கு கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் விஜய், காலை 11.45 மணிக்கு தந்தை பெரியார் திருவுருவச் சிலை மற்றும் ‘பெரியார் அறிவுலகம்’ கல்வெட்டைத் திறந்து வைக்கிறார். தொடர்ந்து, பெரியார் அறிவுலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட வசதிகளைப் பார்வையிடுகிறார்.
இதையடுத்து, மதியம் நடைபெறும் விழாவில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், 100 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.
முதலமைச்சரின் வருகையையொட்டி அவரை பார்க்க ஏராளமானோர் குவிய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம் முதல் காந்திபுரம் செல்லும் வழித்தடங்களில் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜய் பங்கேற்கும் நிகழ்ச்சி குறித்த முழு விபரம்

