கோவை: ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் – முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்

Published On:

| By Pandeeswari Gurusamy

Periyar

கோவை காந்திபுரத்தில் கட்டப்பட்டுள்ள பெரியார் நூலகத்தை முதல்வர் ஜோசப் விஜய் அக்டோபர் 16ஆம் தேதி திறந்து வைக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

சென்னையில் அண்ணா நூலகமும், மதுரை கலைஞர் நூலகமும் உள்ளது போல கோவையில் பெரியார் நூலகத்தை அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டது.

ADVERTISEMENT

இதைத் தொடர்ந்து கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் டவுன் பஸ் நிலையம் அருகே உள்ள சிறைத்துறைக்குச் சொந்தமான இடத்தில், 7 ஏக்கர் பரப்பளவில் ரூ.300 கோடி மதிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கட்டுமானப் பணிக்கு அப்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்தப் பெரியார் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடியில் தரைத்தளம் மற்றும் 7 தளங்களுடன் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ளது. மொத்த திட்ட மதிப்பில் ரூ.245 கோடியில் கட்டுமானப் பணிக்கும், ரூ.50 கோடிக்குப் புத்தகங்கள் வாங்குவதற்கும், ரூ.5 கோடிக்கு இ-புத்தகங்கள் வாங்குவதற்கும் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நூலகத்தின் வளாகத்தில் பெரியார் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுமானப் பணி கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது நிறைவடைந்துள்ளது.

ADVERTISEMENT

பெரியார் நூலக வளாகம் ஏ மற்றும் பி என இரு பிளாக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான நூலகம், 350 பேர் அமரக்கூடிய அரங்கம் (ஆடிட்டோரியம்), அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம், விண்வெளியைக்கண்டு களிக்கும் வகையில் கோளரங்கம், ஸ்பேஸ் லிப்ட் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேல் தளத்தில் வரவேற்பறையும், அறிவியல் மையமும் கட்டப்பட்டுள்ளன.

மேலும் 2-வது தளத்தில் சொந்தமாகப் புத்தகம் எடுத்து வருபவர்கள் படிப்பதற்கான குறிப்பிட்ட இடமும், சிறுவர்களுக்கான நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன. 3-வது தளத்தில் போட்டித்தேர்வு பயிற்சி மையம், நிர்வாகப் பிரிவு, நூலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. 4-வது தளத்தில் வரலாற்றுப் புத்தகங்கள் பிரிவு, தமிழ் நூல்கள் பிரிவு, பருவ இதழ்கள் பிரிவும், 5-வது தளத்தில் ஆங்கில நூல்கள் பிரிவு, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கான இன்குபேஷன் சென்டரும், 6-வது தளத்தில் ஆங்கிலம் கற்கும் பிரிவு மற்றும் இன்குபேஷன் சென்டரும், 7-வது தளத்தில் அறிவியல் மையமும் டிஜிட்டல் நூலகமும் அமைக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

இந்நிலையில் பெரியார் நூலகத்தின் அனைத்துப் பணிகளும் நிறைவுற்ற நிலையில், வரும் 16ஆம் தேதி இதன் திறப்பு விழா நடைபெற உள்ளது. தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பெரியார் நூலகத்தைத் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும் பங்கேற்க உள்ளனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தினர் கூறும்போது, ‘‘வரும் அக்டோபர் 16-ம் தேதி கோவை வரும் முதல்வர் ஜோசப் விஜய், நஞ்சப்பா சாலையில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகம் எனப்படும் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தை திறந்து வைக்கிறார். மற்ற நிகழ்வுகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’’என்றனர்.

இது தொடர்பாக கோவை காவல்துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘முதல்வர் வருகையையொட்டி, அதற்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

இதுகுறித்து நேற்று இரவு கோவையில் அமைச்சர் செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “பெரியார் அறிவுலகம் திறப்பது குறித்து முதல்வரின் அலுவலகத்தில் இருந்து நாளையோ, நாளை மறுதினமோ தெளிவான விளக்கம் அளிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share