கா.கணேசன்
மனித அறிவு இன்று எத்தனை உயரங்களைத் தொட்டிருக்கிறது! விண்வெளியை ஆராய்கிறோம். கடலின் ஆழத்தை அளக்கிறோம். நோய்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகிறோம்.
சில நொடிகளில் கோடிக்கணக்கான தரவுகளைப் பகுப்பாய்வு செய்யும் தொழில்நுட்பத்தை உருவாக்கியிருக்கிறோம். வானிலை மாற்றங்களை முன்கூட்டியே கணிக்கிறோம். விவசாயத்தில் செயற்கைக்கோள், ட்ரோன், சென்சார், வானிலை முன்னறிவிப்பு உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் இன்று பயன்பாட்டுக்கு வந்துவிட்டன.
ஆனால், இத்தனை அறிவையும் தொழில்நுட்பத்தையும் உருவாக்கிய மனிதனால், இன்னும் ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்ய முடியவில்லை!.
செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கணிக்கிறது; ஆனால் பசியுடன் இருக்கும் ஒரு குழந்தையின் “அடுத்த வேளை உணவு எங்கே?” என்ற கேள்விக்கு உலகம் இன்னும் முழுமையான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறது.
விண்வெளியில் உயிரின் தடயங்களைத் தேடும் மனிதன், பூமியில் பசியால் தவிக்கும் உயிரைக் காப்பதில் தடுமாறுகிறான். விண்வெளியை வெல்வது அறிவியலின் சாதனை. ஆனால், பூமியில் யாரும் பசியுடன் உறங்காத உலகை உருவாக்குவதே மனிதநேயத்தின் உண்மையான வெற்றி.
அக்டோபர் 16: உணவை நினைவூட்டும் ஒரு நாள்
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16, “உலக உணவு நாள்” (World Food Day) என பன்னாட்டளவில் கடைப்பிடிக்கப்படுகிறது.
இது வெறுமனே உணவைப் பற்றிப் பேசுவதற்கான ஒரு நாளல்ல. பசி, ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பாதுகாப்பு, விவசாயம், கிராமப்புற வாழ்வாதாரம், காலநிலை மாற்றம், உணவுக்கான சமமான அணுகல் போன்ற உலகின் அடிப்படைப் பிரச்சினைகளை மீண்டும் நமது கவனத்திற்கு கொண்டு வரும் ஒரு முக்கியமான நாளாகும். இந்த நாளுக்கு ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது.
1945ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று, கனடாவின் கியூபெக் நகரில் நடைபெற்ற முதல் மாநாட்டில் “உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு” (Food and Agriculture Organization of the United Nations – FAO) உருவாக்கப்பட்டது. உலக மக்களின் உணவு மற்றும் வேளாண்மை சார்ந்த பிரச்சினைகளுக்கு சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை என்ற எண்ணத்தின் அடிப்படையில் FAO உருவானது.
பின்னர், 1979ஆம் ஆண்டு நடைபெற்ற FAO மாநாட்டில் அக்டோபர் 16ஆம் நாளினை “உலக உணவு நாள்” எனக் கடைப்பிடிக்க முடிவு செய்யப்பட்டது. பசியும் ஊட்டச்சத்துக் குறைபாடும் வறுமையும் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். மேலும் விவசாயம், உணவு உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்தல், சிறு விவசாயிகளிடம் அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன்களைக் கொண்டு சேர்த்தல் ஆகியன இதன் முக்கிய செயல்பாடாகும்.
அக்டோபர் 16 – உலக உணவு நாள் என 1981ஆம் ஆண்டு முதல் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இன்று உலகளவில் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், சமூகப் பங்கேற்பு நிகழ்வுகள் மூலம் “உலக உணவு நாள்” குறித்து விழிப்புணர்வும், உறுதி ஏற்பும் நடக்கிறது.
நாளைய பசியைப் போக்க, இன்றே புதுமையைப் புகுத்து!

2026ஆம் ஆண்டின் உலக உணவு நாளின் கருப்பொருளாக “நாளைய பசியைப் போக்க, இன்றே புதுமையைப் புகுத்து!” (Innovate today. Nourish tomorrow) என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கருப்பொருள் ஒரு முக்கியமான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. நாளைய உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமென்றால், இன்றே புதுமையான தீர்வுகளை உருவாக்க வேண்டும்.
ஆனால் இங்கு “புதுமை” என்பது தொழில்நுட்பம் மட்டுமல்ல. விவசாயியின் பாரம்பரிய அறிவையும் நவீன அறிவியலையும் இணைப்பது புதுமை. குறைந்த நீரில் அதிக விளைச்சலைப் பெறுவது புதுமை. காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர்களை புதிதாக உருவாக்குவது புதுமை. விவசாயிக்கு சரியான நேரத்தில் வானிலைத் தகவலைக் கொண்டு சேர்ப்பது புதுமை. சந்தை விலையைப் பற்றிய தகவலை விவசாயியின் கையில் கொண்டு சேர்ப்பதும் புதுமை.
அதாவது, அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் தரவுகளையும் பாரம்பரிய அறிவையும் மனித அனுபவத்தையும் இணைத்து உணவு அமைப்புகளை வலுப்படுத்துவதே உண்மையான புதுமை ஆகும். FAO-வும் 2026 கருப்பொருளில் அறிவியல், தொழில்நுட்பம், பாரம்பரிய அறிவு, அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை போன்றவற்றின் இணைப்பை வலியுறுத்துகிறது.
உலகில் உணவு இருக்கிறது; அனைவருக்கும் கிடைக்கிறதா?

இன்றைய உலகின் மிகப்பெரிய முரண்பாடுகளில் ஒன்று இதுதான். உலகம் போதுமான அளவு உணவை உற்பத்தி செய்கிறது. ஆனால் அந்த உணவு அனைவரையும் சென்றடைவதில்லை.
FAO-வின் 2026 உலக உணவு நாள் தகவலின்படி, 2025ஆம் ஆண்டில் சுமார் 64.5 கோடி மக்கள் பசியை எதிர்கொண்டனர்; சுமார் 269 கோடி மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்கும் திறனின்றி இருந்தனர்.
இதனால் பசி என்பது உணவு உற்பத்தியின் பிரச்சினை மட்டுமல்ல. உணவு இருக்கிறதா? என்பதுடன், அதை வாங்கும் திறன் இருக்கிறதா? அது கிடைக்கும் இடத்தில் வாழ்கிறார்களா? பாதுகாப்பான, சத்தான உணவு கிடைக்கிறதா? பாகுபாடின்றி அணுகல் உள்ளதா? என்ற அடுக்கடுக்கான கேள்விகளும் முக்கியம்.
பசியின் பின்னால் பல காரணங்கள்

பசியை உருவாக்கும் காரணங்கள் பல. வறுமை, வேலைவாய்ப்பின்மை, போர், மோதல்கள், பொருளாதார நெருக்கடிகள், உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, காலநிலை மாற்றம் ஆகியவை மக்களின் உணவு அணுகலை வெகுவாகப் பாதிக்கின்றன.
போர் நடைபெறும் பகுதிகளில் வயல்கள் அழிக்கப்படுகின்றன. விவசாயிகள் இடம்பெயர்கின்றனர். குடிநீர் மற்றும் உணவு விநியோகங்கள் பாதிக்கப்படுகின்றன. காலநிலை மாற்றத்தால் வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம், ஒழுங்கற்ற மழைப்பொழிவு போன்றவை விவசாயத்தைப் பாதிக்கின்றன. குறிப்பாக சிறு, குறு விவசாயிகள் இதன் தாக்கத்தை அதிகமாகச் சந்திக்கின்றனர்.
எனவே, பசியைத் தீர்ப்பது என்பது ஒரு தட்டில் உணவை வைப்பது மட்டுமல்ல. அந்தப் பசியின் பின்னால் இருக்கும் வறுமை, சமத்துவமின்மை, பொருளாதார நெருக்கடி, காலநிலைச் சவால்களை நெஞ்சுரத்துடன் எதிர்கொண்டு, பசியின் வேரை அறுப்பதே உண்மையான பசியொழிப்பு.
பசி என்பது வயிற்றின் பிரச்சினை மட்டுமல்ல

பசி முதலில் வயிற்றைத் தாக்குகிறது. ஆனால் அதன் தாக்கம் அங்கேயே நின்றுவிடுவதில்லை.
பசியால் வாடும் குழந்தைக்கு உடல் வளர்ச்சி பாதிக்கப்படலாம். கற்றலில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். பள்ளிக்குச் செல்வதில் இடைநிற்றல் ஏற்படலாம். சில நேரங்களில் குழந்தைத் தொழில், குழந்தைத் திருமணம் போன்ற அபாயங்களுக்கும் குழந்தைகள் தள்ளப்படலாம். ஒரு குழந்தையின் பசியைத் தீர்ப்பது என்பது அந்த நாளின் உணவை மட்டும் உறுதி செய்வதல்ல. அந்தக் குழந்தையின் ஆரோக்கியமான உடல்நலம், கல்வி, வளர்ச்சி, எதிர்காலம் ஆகிய அனைத்தையும் பாதுகாப்பதாகும். ஒரு குழந்தையின் கையில் புத்தகம் இருக்க வேண்டிய வயதில் பசியுடன் உணவுக்காகக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அது அந்தக் குழந்தையின் தோல்வி அல்ல; சமூகத்தின் தோல்வி.
உணவு ஒரு பொருள் மட்டுமல்ல; அது ஒரு உரிமை

உணவு என்பது சந்தையில் வாங்கி விற்கப்படும் ஒரு பொருள் மட்டுமல்ல. அது மனிதனின் வாழ்வுக்கும் கண்ணியத்திற்கும் அடிப்படையானது. இந்திய அரசமைப்பின் 21ஆம் பிரிவில் உறுதி செய்யப்படும் வாழ்வுரிமையின் ஒரு பகுதியாக உணவுக்கான உரிமையை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.
2001ஆம் ஆண்டு, People’s Union for Civil Liberties (PUCL) வழக்கில், பசியால் பாதிக்கப்படும் மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசுக்கு பல்வேறு உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது. குறிப்பாக, அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு சமைத்த மதிய உணவு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் தொடர்ச்சியாக, உணவு, ஊட்டச்சத்து, பொது விநியோகம், குழந்தைகளின் நலன் போன்றவை குறித்து நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை வழங்கியது. உணவுக்கான உரிமை என்பது வெறும் அரசின் நலத்திட்டம் அல்ல; மாண்புடன் வாழ்வதற்கான உரிமையுடன் தொடர்புடையது என்ற அணுகுமுறை இதன் மூலம் வலுப்பெற்றது.
2016ஆம் ஆண்டு Swaraj Abhiyan வழக்கிலும், வறட்சி பாதித்த பகுதிகளில் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. குழந்தைகளின் ஊட்டச்சத்திலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
சட்டம் இருப்பது மட்டும் போதாது

இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 உணவுப் பாதுகாப்புக்கு சட்டரீதியான உரிமைகளை வழங்குகிறது. ஆனால், சட்டத்தில் உரிமை இருப்பது மட்டும் போதாது. அது மக்களின் வாழ்க்கையில் உணவாக மாற வேண்டும்.
குடும்ப அட்டை தொடர்பான சிக்கல்கள், ஆவணப் பிரச்சினைகள், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் அணுகல், நியாய விலைக் கடைகளின் செயல்பாடு போன்ற களப் பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். குறிப்பாக, குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஏழைக் குடும்பங்கள் போன்ற பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உணவு தடையின்றி கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும்.
உணவுப் பாதுகாப்பு என்பது வயிற்றை நிரப்புவது மட்டும் அல்ல. பாதுகாப்பான, சத்தான உணவு கிடைப்பதும் அதில் அடங்கும். 2021ஆம் ஆண்டு Dipika Jagatram Sahani v. Union of India வழக்கில், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு போதுமான ஊட்டச்சத்து உணவு வழங்குவது அரசின் கடமை என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. சத்தான உணவு கிடைக்காமல் போவது, அரசமைப்புச் சட்டத்தின் சரத்து 21 வழங்கும் மாண்புடன் வாழும் உரிமையையும் சுகாதார உரிமையையும் பாதிக்கும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
உணவுத் தேர்விலும் கண்ணியம் வேண்டும்

அதேபோல், ஒருவர் என்ன உணவு உண்ண வேண்டும் என்பது அவரது விருப்பம், உடல்நலம், பண்பாடு, குடும்பப் பழக்கம் போன்றவற்றுடன் தொடர்புடையது. சட்டப்பூர்வமான அல்லது பொதுச் சுகாதாரத் தேவைகளைத் தவிர, பிறரின் உணவுத் தேர்வில் தேவையற்ற தலையீடு செய்வது அவரது தனிமனித சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் பாதிக்கக்கூடும்.
உணவு கிடைப்பது ஒரு உரிமை; உணவைத் தேர்வு செய்வதில் கண்ணியம் காக்கப்படுவதும் மனித உரிமையின் ஒரு முக்கியப் பகுதியாகும்.
பசியை ஒழிப்பது தொண்டு அல்ல; உரிமையை உறுதி செய்வது அவசியம். ஒரு நாட்டின் உணவுப் பாதுகாப்பை அதன் கிடங்குகளில் உள்ள உணவின் அளவால் மட்டும் அளக்க முடியாது. அங்கு யாரும் பசியுடன் உறங்குகிறார்களா என்பதுதான் அதன் உண்மையான அளவுகோல்.
விவசாயியின் கைகளில்தான் உணவின் எதிர்காலம்

ஒரு உணவுத் தட்டுக்குப் பின்னால் ஒரு விவசாயியின் உழைப்பு இருக்கிறது. விதை விதைப்பதில் தொடங்கி, நீர், மண், உரம், பூச்சி, காலநிலை, கடன், சந்தை விலை எனப் பல சவால்களை எதிர்கொண்டு விவசாயி உணவை உற்பத்தி செய்கிறார்.
எனவே, உணவுப் பாதுகாப்பைப் பற்றிப் பேசும்போது விவசாயியின் வாழ்வாதாரப் பாதுகாப்பையும் பேச வேண்டும். சிறு, குறு விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம், நிதி, பயிர் காப்பீடு, வானிலைத் தகவல், சேமிப்பு வசதி, சந்தைத் தகவல், நியாயமான சந்தை அணுகல் ஆகியவை கிடைக்க வேண்டும். FAO-வும் சிறு உற்பத்தியாளர்களின் அறிவு, அனுபவம், பாரம்பரிய நடைமுறைகளை நவீன தொழில்நுட்பத்துடன் இணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. விவசாயி பாதுகாப்பாக இருந்தால்தான் உணவின் எதிர்காலமும் பாதுகாப்பாக இருக்கும்.
புதுமை என்றால் இயந்திரம் மட்டும் அல்ல

புதுமை என்றாலே செயற்கை நுண்ணறிவு, ரோபோ, ட்ரோன் போன்ற நவீன கருவிகள்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றன. ஆனால், புதுமை அதைவிடப் பெரியது. ஒரு பிரச்சினைக்கு எளிய, பயனுள்ள புதிய தீர்வைக் கண்டுபிடிப்பதும் புதுமையே.
- ஒரு விவசாயிக்கு மழை வருவதற்கு முன்பே சரியான தகவலை வழங்குவது புதுமை.
- வறட்சியைத் தாங்கும் விதைகளை அவரிடம் கொண்டு சேர்ப்பது புதுமை.
- குறைந்த நீரில் அதிக விளைச்சலைப் பெறும் முறைகளை உருவாக்குவது புதுமை.
- விவசாயி தனது விளைபொருளுக்கு உரிய சந்தையைக் கண்டறிய உதவுவதும் புதுமை.
- பாரம்பரிய விவசாய அறிவை நவீன அறிவியலுடன் இணைப்பதும் புதுமை.
புதிய கருவியை உருவாக்குவது மட்டும் புதுமை அல்ல. பழைய பிரச்சினைக்கு புதிய தீர்வைக் கண்டுபிடிப்பதும் புதுமை. அந்தத் தீர்வு ஒரு விவசாயியின் வாழ்க்கையைப் பாதுகாத்தால், அது நாளைய உணவையும் பாதுகாக்கும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் விவசாயம்

நாளைய உணவுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய சவால்களில் ஒன்று காலநிலை மாற்றம். வறட்சி, வெள்ளம், கடும் வெப்பம், ஒழுங்கற்ற மழை போன்றவை விவசாயத்தைப் பாதிக்கின்றன. இதன் தாக்கம் நேரடியாக உணவு உற்பத்தியிலும் தெரிகிறது.
இந்தச் சவாலை எதிர்கொள்ள விவசாயத்தில் புதுமை தேவை. மண்ணின் வளத்தைப் பாதுகாக்க வேண்டும். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும். பல்வேறு பயிர்களைப் பயிரிட வேண்டும். உள்ளூர் விதைகளைப் பாதுகாக்க வேண்டும். காலநிலைக்கு ஏற்ற பயிர் முறைகளை உருவாக்க வேண்டும்.
உணவு உற்பத்தியை அதிகரிப்பது மட்டும் போதாது. இயற்கையைப் பாதுகாத்துக்கொண்டே உணவை உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணைக் காப்போம்; நீரைப் பாதுகாப்போம்.
விவசாயத்தைத் தாங்குவோம்; நாளைய உணவை உறுதி செய்வோம்.
நாளைய பசியைப் போக்க, இன்றே புதுமையைப் புகுத்த வேண்டும். அதற்கு காலநிலையைத் தாங்கும் விவசாயமே வலுவான அடித்தளம்.
அரசின் பொறுப்பு

பசியை ஒழிப்பது தனிமனிதரின் பொறுப்பு அல்ல. அது அரசின் முக்கியமான சமூகப் பொறுப்புகளில் ஒன்று. உணவு கிடைப்பதை உறுதி செய்வதோடு, அதை அனைவரும் சமமாக அணுகும் வகையிலும் அரசு கொள்கைகளை உருவாக்க வேண்டும். விவசாயம், பொது விநியோகம், குழந்தைகளின் ஊட்டச்சத்து, பள்ளி உணவுத் திட்டங்கள், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஆதரவு, சமூகப் பாதுகாப்பு ஆகியவை உணவுப் பாதுகாப்பின் முக்கியத் தூண்கள். இவை வெறும் நலத்திட்டங்கள் அல்ல. மக்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்தும் அரசின் கடமைகள்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013, தகுதியான குடும்பங்களுக்கு உணவு தானியங்கள், குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து, கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து ஆதரவு ஆகியவற்றுக்கு சட்டப்பூர்வ உரிமைகளை வழங்குகிறது. உணவு கிடைக்காத சில சூழல்களில் உணவுப் பாதுகாப்பு உதவித்தொகைக்கான உரிமையும் இச்சட்டத்தில் உள்ளது. புகார் தீர்வு, கண்காணிப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றுக்கும் சட்டம் வழிவகுக்கிறது.
எனவே, உணவு என்பது ஏழைகளுக்கான அரசின் உதவி அல்ல; ஒவ்வொரு மனிதருக்கும் உரிய உரிமை. இந்த உரிமை கடைசி மனிதரையும் சென்றடைகிறதா என்பதே அரசின் செயல்பாட்டுக்கான முக்கியமான அளவுகோல். 2026 உலக உணவு நாளின் கருப்பொருளும் இதையே வலியுறுத்துகிறது. பசி இல்லாத சமூகத்தை உருவாக்குவது இரக்கத்தின் செயல் அல்ல; அது உரிமையை உறுதி செய்யும் அரசின் கடமை.
2030 நெருங்குகிறது; பசி இன்னும் விலகவில்லை
ஐ.நா. சபையின் நிலையான வளர்ச்சி இலக்கு 2 (SDG 2), 2030ஆம் ஆண்டுக்குள் பசியை முடிவுக்குக் கொண்டு வருவதையும், அனைவருக்கும் ஆண்டு முழுவதும் பாதுகாப்பான, சத்தான, போதுமான உணவு கிடைப்பதையும் இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால் தற்போதைய நிலை அந்த இலக்கை எட்டுவதற்கான உகந்த வேகம் இல்லை என்பதை காட்டுகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு, உணவுப் பாதுகாப்பின்மை, விவசாயிகளின் வாழ்வாதார நெருக்கடி, காலநிலை மாற்றத்தின் தாக்கம் ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடைய பிரச்சினைகள். எனவே, பசியை ஒழிப்பதற்கான நடவடிக்கை வேகப்படுத்தப்பட வேண்டிய நேரம் இதுவே ஆகும்.
நாளைய உணவை இன்று தீர்மானிப்போம்

உலக உணவு நாள் ஆண்டுக்கு ஒருமுறை கடைப்பிடிக்கும் நாளாக மட்டும் இருக்கக் கூடாது. அது நம் மனதில் ஒரு கேள்வியை எழுப்ப வேண்டும்:
“நாம் வாழும் உலகில் யாரும் பசியுடன் உறங்காத நிலையை உருவாக்க என்ன செய்யப் போகிறோம்?”
அதற்கான விடை வெறும் வார்த்தைகளில் இருக்கக் கூடாது. அரசின் கொள்கைகளில் இருக்க வேண்டும். விவசாயிகளின் வயலில் இருக்க வேண்டும். குழந்தையின் உணவுத் தட்டில் இருக்க வேண்டும். அறிவியலின் புதுமையில் இருக்க வேண்டும்.
- அரசுகள் பொறுப்பான கொள்கைகளை உருவாக்க வேண்டும்.
- விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட வேண்டும்.
- குழந்தைகளின் ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
- காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் உணவு முறைகள் உருவாக வேண்டும்
- அறிவியல், தொழில்நுட்பத்தின் பயன் கடைசி மனிதரையும் சென்றடைய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு ஒரு பொருள் அல்ல; அது வாழ்வதற்கான அடிப்படை உரிமை என்பதை நாம் உணர வேண்டும். இன்று நாம் எடுக்கும் முடிவுகள்தான் நாளைய உணவைத் தீர்மானிக்கும். அதனால், “நாளைய பசியைப் போக்க, இன்றே புதுமையைப் புகுத்து!” என்பது ஒரு நாளின் கருப்பொருளாக மட்டும் நின்றுவிடக் கூடாது. அது பசியற்ற உலகை உருவாக்கும் நமது உறுதிமொழியாக மாற வேண்டும்.
வயிறு நிறைந்த உலகம் மட்டும் போதாது..
கண்ணியம் நிறைந்த உலகம் வேண்டும்..
ஒரு குழந்தை பசியுடன் உறங்காத உலகம் வேண்டும்.
ஒரு தாய், தன் குழந்தையின் அடுத்த வேளை உணவை எண்ணிக் கலங்காத உலகம்.
உணவுக்காக எந்த மனிதரும் கையேந்தாத உலகம்.
கட்டுரையாளர் குறிப்பு

வழக்கறிஞர் கா.கணேசன், எழுத்தாளர், குழந்தை உரிமைச் செயற்பாட்டாளர்
