B.A., B.Com., B.Sc படித்தவர்களுக்கு குட்நியூஸ்.. ரயில்வேயில் 3,548 வேலைகள்- ரூ.35,000 ஊதியம்!

Published On:

| By Mathi

Railway Jobs

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப ரயில்வே தேர்வு வாரியம் (RRB) புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. NTPC Graduate என்ற பிரிவின் கீழ் மொத்தம் 3,548 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான கல்வித் தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு மட்டும்தான்.

காலி பணியிடங்கள்

  • சரக்கு ரயில் மேலாளர் – 2,750 காலியிடங்கள்
  • முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர் – 371 காலியிடங்கள்
  • இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் – 300 காலியிடங்கள்
  • பயணச்சீட்டு மேற்பார்வையாளர் (Chief Commercial Cum Ticket Supervisor) – 127 காலியிடங்கள்

கல்வித் தகுதி

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அதாவது பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட டிகிரி படித்தவர்கள், சம்பந்தப்பட்ட பணிக்கான மற்ற தகுதிகளையும் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

ADVERTISEMENT

வயது

விண்ணப்பதாரர்களுக்கு 2027-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சம் 33 வயதும் இருக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி உள்ளிட்ட தகுதியான பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

ADVERTISEMENT

ஊதியம் எவ்வளவு?

Chief Commercial Cum Ticket Supervisor பணிக்கு ஆரம்ப அடிப்படை சம்பளம் ₹35,400.

சரக்கு ரயில் மேலாளர், முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய 3 பணிகளுக்கும் ஆரம்ப அடிப்படை சம்பளம் ₹29,200.

ADVERTISEMENT

இது அடிப்படை சம்பளம் மட்டும்தான். இதனுடன் ரயில்வே விதிகளின்படி அகவிலைப்படி உள்ளிட்ட கூடுதல் படிகளும் வழங்கப்படும்.

தேர்வு முறை என்ன?

இந்த பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு முதலில் கணினி மூலம் முதல் கட்டத் தேர்வு நடத்தப்படும். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் 2-ம் கட்ட கணினித் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதன்பிறகு சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும். தேவையான மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்படும். தேர்வில் பெறும் மதிப்பெண்கள், இடஒதுக்கீடு மற்றும் சம்பந்தப்பட்ட பணிக்கான தகுதிகளின் அடிப்படையில் பணி வழங்கப்படும்.

முதுநிலை எழுத்தர் மற்றும் தட்டச்சர், இளநிலை கணக்கு உதவியாளர் மற்றும் தட்டச்சர் ஆகிய 2 பணிகளுக்குத் தனியாகத் தட்டச்சுத் திறன் தேர்வு நடத்தப்படாது. ஆனால், இந்த பணிகளில் சேருபவர்களுக்குக் கணினி பயன்படுத்தவும் தட்டச்சு செய்யவும் அடிப்படையான திறன் இருக்க வேண்டும். பணியில் சேர்ந்த பிறகு அந்தத் திறன் மதிப்பீடு செய்யப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது?

இந்த வேலைகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் பணி அக்டோபர் 8-ந் தேதி தொடங்கிவிட்டது.

நவம்பர் 6-ந் தேதி இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வுக் கட்டணம் செலுத்த நவம்பர் 8-ந் தேதி கடைசி நாள்.

விண்ணப்பத்தில் பெயர் உள்ளிட்ட விவரங்களைத் தவறாகப் பதிவு செய்திருந்தால், அனுமதிக்கப்பட்ட திருத்தங்களை நவம்பர் 9 முதல் 18-ந் தேதி வரை செய்துகொள்ளலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.rrbapply.gov.in என்ற முகவரிக்குச் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கு முன்பாக எந்த வேலைக்கு என்ன கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, தேர்வுக் கட்டணம் உள்ளிட்ட விவரங்கள் உள்ளன என்பதை முழுமையாகப் படித்துப் பார்க்க வேண்டும்.

இந்த வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்:

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share