வெறிநாய்க்கடி மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் நோயைக் கட்டுப்படுத்துவதில் பூடான் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. நாய்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் ரேபிஸ் நோய், பொது சுகாதாரப் பிரச்சினையாக இனி இல்லை என்று உலக சுகாதார அமைப்பு (WHO) பூடானுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் இந்தப் சாதனையைப் பெற்ற முதல் நாடு என்ற பெருமையையும் பூடான் பெற்றுள்ளது.
பூடானுக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்!
2026 செப்டம்பர் 4 ஆம் தேதி உலக சுகாதார அமைப்பு இந்த அங்கீகாரத்தை அறிவித்தது. 2023 ஜூன் மாதத்துக்குப் பிறகு நாய்க்கடி மூலம் பரவும் ரேபிஸ் நோயால் மனித உயிரிழப்புகள் எதுவும் பூடானில் பதிவாகவில்லை.
இந்தச் சாதனையை எட்டுவதற்கு நோயைக் கண்காணிப்பது மட்டுமின்றி, மீண்டும் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான மருத்துவ மற்றும் கால்நடைப் பராமரிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாய்களுக்குத் தடுப்பூசி; இலவச சிகிச்சை!
பூடானின் வெற்றிக்குப் பின்னால் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட நடவடிக்கைகள் உள்ளன. நாய்களுக்குப் பெருமளவில் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துதல், கருத்தடை செய்தல், நாய்களைக் கண்காணித்தல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மேலும், நாய்க்கடி அல்லது கீறல் மூலம் பாதிக்கப்படுபவர்களுக்கு நோய்த்தடுப்பு சிகிச்சை இலவசமாகக் கிடைப்பதற்கான வசதிகள் நாட்டின் 20 மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத் துறையினரும் கால்நடை மருத்துவர்களும் இணைந்து செயல்பட்டதும் இந்த முன்னேற்றத்துக்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
மக்களின் பங்களிப்பும் முக்கியக் காரணம்!
பூடானில் அரசுத் துறைகளுடன் இணைந்து தன்னார்வலர்களும் உள்ளூர் மக்களும் தடுப்பூசி முகாம்கள், நாய்களின் எண்ணிக்கைக் கணக்கெடுப்பு மற்றும் விழிப்புணர்வுப் பணிகளில் பங்கேற்றனர். தெருநாய்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானவற்றுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நோய்ப் பரவலைத் தடுக்க நாய்களில் குறைந்தபட்சம் 70 சதவீதத்துக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பது அதன் பரிந்துரை.
இந்தியாவுக்கும் கிடைத்துள்ள பாடம்!
ரேபிஸ் நோய் அறிகுறிகள் வெளிப்பட்ட பிறகு, அது பெரும்பாலும் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடியது. இருப்பினும், நாய்களுக்குத் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளித்தல் மூலம் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும்.
பூடானின் இந்தச் சாதனை, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு முக்கிய முன்னுதாரணமாக அமைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாய்கள் மூலம் மனிதர்களுக்கு ஏற்படும் ரேபிஸ் உயிரிழப்புகளை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற உலகளாவிய இலக்கை அடைய, தொடர்ந்து தடுப்பூசி செலுத்துதல், கண்காணிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வு அவசியமாகிறது.
