VIDEO: நேபாளத்தில் மீண்டும் திடீர் பேரிரைச்சலுடன் வெள்ளப்பெருக்கு… வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்ட கோர காட்சிகள்!

Published On:

| By Mathi

Nepal-Flood

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் புத்திகண்டகி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சிலரை காணவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 11-ந் தேதி) அதிகாலை புத்திகண்டகி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ADVERTISEMENT

கோர்கா மாவட்டத்தின் சும்நுப்ரி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவால் ஆற்றின் நீரோட்டம் தடைப்பட்டு, பின்னர் தண்ணீர் பெருக்கெடுத்து பெருவெள்ளமாக பாய்ந்தோடியது.

அதிகாலை 4 மணி முதல் ஆற்றில் பயங்கரமான சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆற்றில் தண்ணீருடன் சேறும் சகதியும் பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டன.

ADVERTISEMENT

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் ஆற்றங்கரையோரம் இருந்த வீடுகள் அடித்துச் செல்லப்பட்டதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், 2 தொங்கு பாலங்கள், வாகனங்கள் செல்லக்கூடிய இரும்புப் பாலம் ஆகியவையும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

341 மெகாவாட் மின்சார உற்பத்தித் திறன் கொண்ட புத்திகண்டகி நீர்மின் திட்டத்தின் கட்டுமான முகாம் மற்றும் உபகரணங்களும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த வெள்ளப்பெருக்கில் 4 பேரைக் காணவில்லை என உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழப்புகள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

கரையோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை

புத்திகண்டகி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் கரையோர மக்கள் உடனடியாக உயரமான பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு நேபாள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

கோர்கா, தனாஹு, சித்வான், கிழக்கு நவல்பராசி, மேற்கு நவல்பராசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராணுவம் மற்றும் போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாகவும் வெள்ள பாதிப்புகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் வீடுகளும் பாலங்களும் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share