பொதுமக்கள் ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள அரசு மருத்துவமனைகளில் ரேபீஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் அறிவுறுத்தியுள்ளார். Preventive Medicine alert rabies
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“கடந்த சில நாட்களுக்கு முன், ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சார்ந்த ஒரு நபர் நாய் கடித்து 3 மாதம் ஆகியும் ரேபீஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்பதால் இறந்துவிட்டார் என விசாரணையில் தெரிய வந்தது.
எனவே, மக்கள் அனைவரும் நாய் கடித்தவுடன் ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசியை செலுத்திக் கொள்வது அவசியமாகிறது. ரேபீஸ் ஒரு கொடிய வைரஸ் நோய்.
இந்நோயால் பாதிக்கப்பட்ட நாய், மனிதனை கடிப்பதால் மனிதன் பாதிப்புக்கு உள்ளாகின்றான். நாய்கள் கடிப்பதால் மட்டும் ரேபீஸ் வருவதில்லை, வீட்டில் வளர்க்கப்படும், நாய், பூனை, ஆடு, மாடு மற்றும் வீட்டு விலங்குகள் கடிப்பதால் பரவுவதற்கு வாய்ப்புள்ளது.
நாய்கள் கடிப்பதால் மட்டும் இல்லாமல், நாய் புரண்டினால் உடலில் உள்ள சிறுகாயங்களில் உமிழ்நீர் பட்டாலும் ரேபீஸ் பரவும்.

நாய் கடித்தவுடன் காயத்தை குறைந்தது 15 நிமிடங்களுக்கு சோப்பு தண்ணீரால் கழுவ வேண்டும். ரேபீஸ் நோய்க்கு ARV (Anti-Rabies Vaccine) எனப்படும் தடுப்பூசிகள் உள்ளன. நாய் கடித்தவுடன் 4 ஊசிகள் போட்டு கொள்வதன் மூலம் ரேபீஸ் நோயை 100% வரவிடாமல் தடுத்து விடலாம்.
மேலும், நாயின் ஆழமான கடிகளுக்கு ஏற்ப இம்யூனோகுளோபுளின் மருந்தும் அளிக்கப்படுகிறது. இந்த ARV மற்றும் இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகள் அனைத்து அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் (24X7) இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.
எனவே பொது மக்கள் வெறிநாய்கடியின் அவசியத்தை அறிந்து உரிய நேரத்தில் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று ரேபீஸ் எனப்படும் வெறிநாய்கடியிலிருந்து தற்காத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். Preventive Medicine alert rabies