சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் 2500க்கும் அதிகமானோர் பணி செய்து வருகின்றனர். இவர்கள் தற்காலிக பணி நியமன அடிப்படையில் நியமிக்கப்பட்டவர்கள்.
2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள இணை இயக்குனர்கள் மூலம் நியமனம் செய்யப்பட்டனர்.
அப்போது ஐந்து ஆண்டுகள் பணி முடிந்ததும் நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று இவர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையில் சொல்லப்பட்டிருந்தது.
எனினும் பல ஆண்டுகளாகியும் இதுவரை பணி நிரந்தரம் செய்யப்படவில்லை. தினக்கூலி அடிப்படையிலேயே பணி செய்து வருகின்றனர்.
இந்த சூழலில் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தின மைதானத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று அரசு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் கூறியிருந்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு முதலே இவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். சென்னை மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்களை தடுத்து நிறுத்தி வீட்டு காவலில் வைத்தனர்.
இதையும் மீறி 200க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக இன்று ராஜரத்தினம் மைதானத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவர்களிடம் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று போலீசார் கூறிய நிலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சூழலில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை குண்டுகட்டாக கைது செய்து அரசு பேருந்துகளில் ஏற்றி அருகில் உள்ள சமுதாயக் கூட்டத்துக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர்.
ரெஸ்ட் ரூம் சென்றவர்களையும் கூட கதவைத் தட்டி கைது செய்ததாக பணியாளர்கள் சார்பில் கூறுகின்றனர்.
இந்த சூழலில் மருத்துவ பணியாளர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டது தொடர்பாக, சுகாதாரத் துறை அமைச்சர் அருண் ராஜிடம் சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு அவர், ‘அரசு பல்நோக்கு மருத்துவப் பணியாளர்கள் கடந்த வாரம் தான் எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்களது கோரிக்கைகள் தொடர்பாக அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளுடனும் முதலமைச்சருடனும் கலந்து பேசி முடிவு எடுப்போம் என்று சொல்லி இருந்தோம்.
இன்னும் ஒரு வாரம் கூட ஆகவில்லை. அதற்குள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் நாங்கள் மீண்டும் பேச்சு வார்த்தை நடத்துவோம்” என்று பதிலளித்தார்.
