சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த ‘ஜெம்’ கிரானைட்ஸ் உரிமையாளர் ஆர்.வீரமணி மீதான போக்சோ வழக்கில், சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் அருண் உள்ளிட்ட 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) விசாரணை நடத்தியுள்ளது.
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஆர்.வீரமணி, சிறுமிகளை சீரழித்ததாக அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டன. இந்தப் புகார்கள் தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்குகளை விசாரிக்க அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழு, தற்போது 3 போலீஸ் அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தியுள்ளது.
சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனரும் கூடுதல் டிஜிபியுமான அருண், அப்போது சென்னை தெற்கு மண்டல கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த என்.கண்ணன், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்த ஏ.ராதிகா ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பட்டியலினப் பிரிவுத் தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார், ”கடந்த 2024-ம் ஆண்டு நவம்பர் 22-ந் தேதி அப்போதைய கூடுதல் போலீஸ் கமிஷனர் கண்ணனிடம் புகார் அளித்தேன்; அந்தப் புகாரில், ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மற்றும் அவரது கூட்டாளி சாந்தி ஆகியோர் சிறுமிகளை பாலியல் ரீதியாகச் சுரண்டுவதாக தெரிவித்திருந்தேன்; ஆனால் தனது புகாரின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவில்லை” என வெளிப்படையாக பேட்டி கொடுத்திருந்தார். இந்தப் பின்னணியில் அப்போது சென்னை மாநகர காவல்துறையில் பொறுப்புகளில் இருந்த அருண், கண்ணன், ராதிகா ஆகிய 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இதனிடையே, அருண் மற்றும் கண்ணன் ஆகிய 2 ஐபிஎஸ் அதிகாரிகளையும் தமிழக அரசு அண்மையில் கட்டாயக் காத்திருப்பில் வைத்துள்ளது.
பிரகாஷ் வங்கி கணக்கு முடக்கம்?
இந்த வழக்கில் ஜெம் வீரமணிக்கு சாதகமான நடவடிக்கைகள் மேற்கொள்ள பெருமளவில் பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கில் தொடர்புடைய சந்தேக நபர்களின் வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், விலை உயர்ந்த பரிசுப் பொருட்கள் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீடுகள் குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, இந்த வழக்கில் சந்தேக நபர்களில் ஒருவரான என்.பிரகாஷின் வங்கிக் கணக்கில் சுமார் ரூ.20 கோடி இருப்பது தெரியவந்துள்ளது. அந்த வங்கிக் கணக்கை முடக்குவதற்கான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
ஆனால் பிரகாஷ் தலைமறைவாக இருப்பதால் அவரது வங்கிக் கணக்கிற்கு இவ்வளவு பெரிய தொகை எப்படி வந்தது என்பதை உடனடியாகக் கண்டறிய முடியவில்லை. அவரைத் தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
7-வது வழக்கு
மேலும் ஜெம் வீரமணி மீது சென்னை மாநகர போலீசார் 7-வது போக்சோ வழக்கையும் பதிவு செய்துள்ளனர். தான் சிறுமியாக இருந்தபோது வீரமணி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக ஒரு பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே 6 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது 7-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெம் வீரமணி மீது குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சாதகமாக போலீசார் செயல்பட்டார்களா? புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்ததா? பணப் பரிமாற்றங்கள் நடைபெற்றனவா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தி வருகிறது.
