தமிழகத்தில் அரிசி விலை கிலோவுக்கு ரூ.20 வரை கிடுகிடு உயர்வு.. விலையைக் குறைக்க களமிறங்குமா விஜய் அரசு?

Published On:

| By Mathi

Rice-Price

தமிழகத்தில் அரிசி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பொன்னி உள்ளிட்ட சில அரிசி ரகங்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை அதிகரித்துள்ளது. சில உயர்தர அரிசி ரகங்கள் கிலோ ரூ.90 வரை விற்பனையாகின்றன. இந்த விலை உயர்வால் ஏழை, நடுத்தரக் குடும்பங்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய அளவிலும் பொதுவாக அரிசி விலை உயர்ந்துள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரத் துறையின் விலை கண்காணிப்புத் தரவுகளின்படி, 2025-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஒரு கிலோ அரிசியின் சராசரி சில்லறை விலை ரூ.42.98 ஆக இருந்தது. 2026-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந் தேதி ரூ.46.50 ஆக உயர்ந்தது. அக்டோபர் 14-ந் தேதி நிலவரப்படி ரூ.47.21 ஆக இருந்தது.

ADVERTISEMENT

கடந்த ஆண்டு அக்டோபர் மாத சராசரி விலையுடன் ஒப்பிடுகையில் இது சுமார் 10% உயர்வாகும்.

தமிழகத்தில் அரிசி விலை எவ்வளவு உயர்ந்துள்ளது?

தமிழகத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொன்னி, ஆந்திரா பொன்னி, மணச்சநல்லூர் பொன்னி, இட்லி அரிசி, சீரக சம்பா உள்ளிட்ட பல ரகங்களின் விலை உயர்ந்துள்ளது.

ADVERTISEMENT

அக்டோபர் 14-ந் தேதி நிலவரப்படி,

  • 25 கிலோ பொன்னி அரிசி மூட்டை ரூ.1,600-லிருந்து ரூ.1,950
  • ஆந்திரா பொன்னி எனப்படும் BPT அரிசி மூட்டை ரூ.1,500-லிருந்து ரூ.1,850
  • IR-20 அரிசி மூட்டை ரூ.1,100-லிருந்து ரூ.1,400
  • இட்லி அரிசி ரூ.1,150-லிருந்து ரூ.1,450
  • பச்சரிசி ரூ.1,050-லிருந்து ரூ.1,350 ஆக உயர்ந்துள்ளது.

சீரக சம்பா அரிசி மூட்டை ரூ.2,800-லிருந்து ரூ.3,500 ஆக உயர்ந்துள்ளது. அதாவது ஒரு மூட்டைக்கு ரூ.700 அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ஜனவரி முதல் அக்டோபர் வரை விலை உயர்வு

ஒரு கிலோ மிக சன்ன ரக அரிசி ஜனவரி மாதத்தில் ரூ.50 முதல் ரூ.55 வரை விற்பனையானது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.60 ஆகவும், செப்டம்பரில் ரூ.63 ஆகவும் உயர்ந்தது. அக்டோபர் மாதத்தில் ரூ.75 முதல் ரூ.80 வரை விற்பனையாகிறது.

இதேபோல ஜனவரியில் ரூ.1,300 முதல் ரூ.1,400 வரை இருந்த 26 கிலோ மிக சன்ன ரக அரிசி மூட்டையின் விலை, அக்டோபரில் ரூ.1,950 முதல் ரூ.2,000 வரை உயர்ந்துள்ளது.

அதாவது 9 மாதங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.550 முதல் ரூ.700 வரை விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் கிலோவுக்கு ரூ.35 வரை உயர்வு

சென்னையில் கர்நாடகா ஸ்டீம் பச்சரிசி கிலோவுக்கு ரூ.21 வரையும், ஆந்திரா பொன்னி ரூ.22 வரையும் உயர்ந்துள்ளது. இட்லி அரிசி கிலோவுக்கு ரூ.7, மணச்சநல்லூர் அரிசி ரூ.10, சாதா புழுங்கல் அரிசி ரூ.7, சீரக சம்பா ரூ.35 வரை உயர்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கரூரில் BPT அரிசி கிலோ ரூ.50 முதல் ரூ.54 வரை விற்ற நிலையில், ரூ.60 முதல் ரூ.65 வரை உயர்ந்துள்ளது. சன்ன ரக அரிசி ரூ.55 முதல் ரூ.60 வரை இருந்த நிலையில், ரூ.65 முதல் ரூ.75 வரை உயர்ந்துள்ளது. இட்லி அரிசி ரூ.36 முதல் ரூ.38 வரை இருந்த நிலையில், ரூ.42 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது.

ஈரோட்டில் 26 கிலோ கர்நாடகா ஸ்டீம் பச்சரிசி மூட்டை ரூ.1,650 முதல் ரூ.1,670 வரை விற்பனையான நிலையில், ரூ.2,100 முதல் ரூ.2,150 வரை உயர்ந்துள்ளது.

திருநெல்வேலியில் கர்நாடகா பொன்னி கிலோவுக்கு ரூ.5 முதல் ரூ.8 வரையும், குண்டூர் அரிசி ரூ.5 வரையும், சீரக சம்பா ரூ.15 வரையும் உயர்ந்துள்ளது.

அரிசி விலை ஏன் உயர்கிறது?

தமிழகத்துக்கு ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து அதிக அளவில் நெல் மற்றும் அரிசி வருகிறது. இந்த மாநிலங்களில் பருவமழை குறைந்ததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக அரிசி ஆலை உரிமையாளர்களும் வியாபாரிகளும் கூறுகின்றனர்.

குறிப்பாக ஆந்திராவிலிருந்து தமிழகத்துக்கு வரும் நெல் வரத்து கணிசமாகக் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

ஆந்திராவில் கிடைக்கும் நெல்லை கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த அரிசி ஆலைகளும் அதிகமாகக் கொள்முதல் செய்வதால் தமிழக ஆலைகளுக்கான வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

தமிழகத்தில் சில அரிசி ஆலைகளுக்கு முன்பு தினமும் 20 முதல் 40 டன் வரை நெல் கிடைத்த நிலையில், தற்போது வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே நெல் வருவதாகத் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

எல் நினோ தாக்கமும் ஒரு காரணமா?

2026-ம் ஆண்டு எல் நினோ காரணமாகப் பருவமழை பாதிக்கப்பட்டிருப்பதும் அரிசி விலை உயர்வுக்கான காரணங்களில் ஒன்றாக சொல்லப்படுகிறது.

ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை குறைந்ததால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் தமிழக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதும் அரிசி உற்பத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அரிசி விலை உயர்வு ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் மாதாந்திரச் செலவை அதிகரித்துள்ளது பெரும் வேதனை தருகிறது என்கின்றனர் பொதுமக்கள்.

அரிசி விலை எப்போது குறையும்?

புதிய நெல் அறுவடை தொடங்கிய பிறகு அரிசி விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர். குறிப்பாக 2027-ம் ஆண்டு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் புதிய நெல் சந்தைக்கு வரும்போது விலை படிப்படியாகக் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அடுத்த சில மாதங்களுக்கு விலை உயர்வு நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

களமிறங்கும் விஜய் அரசு?

இதனிடையே, தமிழகத்தில் அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு புதிய நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருவதாகவும் வெளிமாநிலங்களிலிருந்து குறைந்தது 1 லட்சம் டன் சன்ன ரக அரிசியைக் கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் திட்டத்தின்படி ஒரு கிலோ அரிசியை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது; வெளிச்சந்தையில் சில சன்ன ரக அரிசிகள் கிலோ ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனையாகும் நிலையில், இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரவேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share