ஈரான் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில், ஹார்முஸ் நீரிணையில் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 2 சரக்குக் கப்பல்கள் அடுத்தடுத்து தாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கியது. மற்றொரு கப்பல் சேதமடைந்தது. 2 கப்பல்களிலும் இருந்த 43 ஊழியர்களும் காயமின்றி உயிர் தப்பியுள்ளனர்.
ஈரானுக்கும் ஓமனுக்கும் இடையே அமைந்துள்ள ஹார்முஸ் நீரிணை, சர்வதேச கடல்வழி வர்த்தகத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு மற்றும் பிற சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இந்த நீரிணை வழியாகப் பயணிக்கின்றன.
அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே பிப்ரவரி 28-ந் தேதி தொடங்கிய போரைத் தொடர்ந்து, இந்தப் பகுதியில் சரக்குக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில், அக்டோபர் 13-ந் தேதி ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட GFS Pride என்ற கண்டெய்னர் கப்பல் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் கப்பல் சேதமடைந்ததுடன் தீப்பற்றியது. பின்னர் அந்தக் கப்பல் கடலில் மூழ்கியது.
கப்பலில் இருந்த 21 ஊழியர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து அக்டோபர் 14-ந் தேதி அதே நீரிணை வழியாகச் சென்ற GFS Giselle என்ற மற்றொரு சிங்கப்பூர் சரக்குக் கப்பலும் தாக்கப்பட்டது.
இந்தத் தாக்குதலில் கப்பலின் ஒருபகுதி சேதமடைந்தது. இருப்பினும் கப்பல் மூழ்கவில்லை. அதிலிருந்த 22 ஊழியர்களும் உயிர் தப்பினர்.
இந்த விவரங்களை சிங்கப்பூர் கடல்துறை மற்றும் துறைமுக ஆணையம் (MPA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
2 கப்பல்களும் அடையாளம் தெரியாத எறிபொருட்களால் தாக்கப்பட்டதாக அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய 43 ஊழியர்களில் சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்தவர்கள் யாரும் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணையின் தெற்குப் பகுதியில் 2,500 கண்டெய்னர்களை ஏற்றிச் சென்ற சரக்குக் கப்பல் கடல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியதாக ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.
அனுமதிக்கப்படாத, ஆபத்தான கடல்வழிப் பாதையில் கப்பல் சென்றபோது கடலில் வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியில் சிக்கியதாக ஈரான் கூறியுள்ளது.
கப்பல் தீப்பிடித்து, ஒருபுறமாகச் சாய்ந்து கடலில் மூழ்கும் வீடியோ காட்சிகளும் வெளியாகியுள்ளன. கடலில் கண்டெய்னர்கள் மிதப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிங்கப்பூர் கடல்துறை ஆணையம் அடையாளம் தெரியாத எறிபொருள் தாக்குதல் என்று கூறியுள்ள நிலையில், ஈரான் கடல் கண்ணிவெடி தாக்குதல் என்று தெரிவித்துள்ளது.
ஈரான் தரப்பில் 2,500 கண்டெய்னர்கள் இருந்ததாகக் கூறப்படும் அந்தக் கப்பலில், துபாயிலிருந்து ஐபோன்கள், வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் ஏற்றிச் செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து பதிவிட்டு வரும் பாபக் தக்வாயி (Babak Taghvaee), தனது X பக்கத்தில் GFS Pride கப்பல் மூழ்கிய பின்னர் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில், கப்பல் ஈரானின் கடல் கண்ணிவெடியில் சிக்கியதாகவும், கப்பலில் இருந்த ஐபோன்கள் கடலில் மிதந்ததாகவும், அவற்றை ஓமன் மீனவர்கள் சேகரித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே GFS Pride கப்பலை நிர்வகிக்கும் GFS Ship Management FZE நிறுவனம் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்தது என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
