கொலை வழக்கில் குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையாகக் குறைத்த சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தை உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் மகாசமுந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரைமோதி படேல் என்ற பெண், மூங்கில் மரத்தின் அடியில் ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த நிலையில் கிடந்தார். அவரிடம் விசாரித்தபோது சிந்தாமணி என்பவர் தன்னைத் தாக்கியதாகத் தெரிவித்தார். பின்னர் ரைமோதி படேல் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக ரைமோதி படேலின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்த வழக்கை விசாரித்த மகாசமுந்த் மாவட்ட சாராய்பாலி கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றம்சாட்டப்பட்ட சிந்தாமணியை இந்திய தண்டனைச் சட்டத்தின் 302-வது பிரிவின் கீழ் கொலைக் குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு ஆயுள் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டன.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து சிந்தாமணி சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், குற்றவாளிக்கு அந்தப் பெண்ணைக் கொலை செய்யும் நோக்கம் இல்லை என்று கருதியது. அதே நேரத்தில், அவர் ஏற்படுத்திய காயங்களால் உயிரிழப்பு ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டது.
இதையடுத்து கொலைக் குற்றத்துக்கான 302-வது பிரிவின் கீழ் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம், இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-வது பிரிவு பகுதி 2-ன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து குற்றவாளி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று (அக்டோபர் 14-ந் தேதி) நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, கே. வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கடுமையாக விமர்சித்த நீதிபதிகள், சட்டத்தைப் பற்றிய புரிதலே இல்லாமல், மிகவும் அலட்சியமான முறையில் கொலைக் குற்றத்தை 304-வது பிரிவு பகுதி 2-ன் கீழ் மாற்றியிருப்பதாகக் குறிப்பிட்டனர்.
இந்திய தண்டனைச் சட்டத்தின் 304-வது பிரிவில் பகுதி 1-க்கும் பகுதி 2-க்கும் முக்கியமான வேறுபாடு இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஒருவரின் மரணத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டிருந்தால் பகுதி 1 பொருந்தக்கூடும். உயிரிழப்பை ஏற்படுத்தும் குறிப்பிட்ட நோக்கம் இல்லாவிட்டாலும், தனது செயலால் மரணம் ஏற்படக்கூடும் என்பதை அறிந்திருந்தால் பகுதி 2 பொருந்தக்கூடும்.
ஆனால் இந்த வழக்கில் உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்பட்ட காயங்களின் தன்மை, தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதம், சம்பவம் நடந்த விதம் ஆகிய முக்கிய அம்சங்களை உயர்நீதிமன்றம் உரிய முறையில் கவனிக்கவில்லை என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து சத்தீஸ்கர் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத் தீர்ப்பை ஏன் ரத்து செய்யக்கூடாது என்றும், விசாரணை நீதிமன்றம் விதித்த கொலைக் குற்றத்துக்கான ஆயுள் தண்டனையை ஏன் மீண்டும் அமல்படுத்தக்கூடாது என்றும் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணை நவம்பர் 18-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
