என்ன கொடுமை சார் இது! அங்கிட்டு கனமழைக்கு ஆரஞ்ச் அலர்ட்.. இங்கிட்டு வறுத்தெடுக்கும் வெயில்.. இதான் தமிழ்நாடு!

Published On:

| By Mathi

Rain-Heat-Weather-Tamil Nadu

தமிழகத்தில் நாளை (அக்டோபர் 15-ந் தேதி) மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையங்கள் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ள நிலையில், இன்று (அக்டோபர் 14-ந் தேதி) ஈரோட்டில் வெயில் 37.8 டிகிரி செல்சியஸைத் தொட்டுள்ளது. கரூர் பரமத்தியில் இயல்பைவிட 4.9 டிகிரி செல்சியஸ் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குகிறது. குமரிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட வானிலை மாற்றங்களால் தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

குறிப்பாக நாளை அக்டோபர் 15-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட மாவட்ட வாரியான முன்னறிவிப்பில், நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இப்படி தமிழகத்தின் பல பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள
நிலையில், இன்று பல இடங்களில் வெயிலும் கடுமையாகப் பதிவாகியுள்ளது.

ADVERTISEMENT

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிட்ட வெப்பநிலை அறிக்கையின்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 37.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 4.3 டிகிரி அதிகம்.

கரூர் பரமத்தியில் 36 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அங்கு இயல்பைவிட 4.9 டிகிரி அதிக வெப்பநிலை பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

கோவை விமான நிலையத்தில் 35.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 3.4 டிகிரி அதிகம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் 34.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 1.6 டிகிரி அதிகம். சென்னை விமான நிலையத்தில் 33.2 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது.

சேலத்தில் 34.2 டிகிரி, திருச்சி விமான நிலையத்தில் 34.1 டிகிரி, திருத்தணியில் 33.6 டிகிரி, தருமபுரியில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

வால்பாறையில் 29 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 3.4 டிகிரி அதிகமாகும்.

ஆனால் நாகப்பட்டினத்தில் அதிகபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது இயல்பைவிட 4.9 டிகிரி குறைவாகும். பாளையங்கோட்டையில் 28.6 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 5.2 டிகிரி குறைவு. காரைக்காலில் இயல்பைவிட 4.4 டிகிரி குறைவாக 27.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

ஒரே நாளில் தமிழகத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட அதிக வெப்பமும், வேறு சில பகுதிகளில் இயல்பைவிடக் குறைவான வெப்பமும் பதிவாகியுள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share