தமிழகத்தில் நாளை (அக்டோபர் 15-ந் தேதி) ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கெனவே சென்னை வானிலை ஆய்வு மையமும் நாளை 4 மாவட்டப் பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுத்திருந்த நிலையில், தற்போது தேசிய அளவிலான வானிலை முன்னறிவிப்பிலும் மிக கனமழை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இந்தச் சுழற்சியிலிருந்து வடமேற்கு வங்கக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீண்டுள்ளது.
மேலும், கேரளாவின் மத்திய பகுதிகளிலும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி நிலவுகிறது. இந்த வானிலை அமைப்புகளின் தாக்கத்தால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை அக்டோபர் 15-ந் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
அக்டோபர் 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக அக்டோபர் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மேலும், அக்டோபர் 14-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை இடி, மின்னலுடன் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில நேரங்களில் காற்றின் வேகம் 60 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
கேரளாவில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கும், அக்டோபர் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை கனமழைக்கும் வாய்ப்புள்ளது. தெற்கு உள் கர்நாடகாவில் அக்டோபர் 16-ந் தேதி ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிட்ட வானிலை அறிக்கையில், நாளை அக்டோபர் 15-ந் தேதி நீலகிரி, கோவை, தேனி மாவட்டங்கள் மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என எச்சரித்திருந்தது. இந்த பகுதிகளுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், தென்காசி, கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
