தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை… அடுத்த 2 வாரங்களுக்கு எப்படி இருக்கும்? தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

Published On:

| By Mathi

Weather-Tamil Nadu

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் இன்று (அக்டோபர் 14-ந் தேதி) முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் இன்று தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ADVERTISEMENT

சென்னை மற்றும் தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழையின் முதல் மழையை எதிர்பார்க்கலாம்.

அடுத்த 2 வாரங்களுக்கு தமிழகத்தில் திடீரென மழை பெய்யும். பின்னர் சிறிது நேரம் மழை நின்றுவிடும். மீண்டும் திடீரென மழை பெய்யும். சில நேரங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

ADVERTISEMENT

நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்யும் என்று எதிர்பார்க்க வேண்டாம். மழைக்கு இடையே நல்ல வெயில் அடிக்கலாம். சில நேரங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்.

மழை பெய்யும் நேரம், எவ்வளவு நேரம் நீடிக்கும், எவ்வளவு அதிகமாக பெய்யும் என்பதெல்லாம் இடத்திற்கு இடம் மாறுபடும்.

ADVERTISEMENT

ஒரு பகுதியில் மழை பெய்கிறது என்பதற்காக எல்லா இடங்களிலும் அதே நேரத்தில் மழை பெய்யும் என்று அர்த்தமில்லை. அதேபோல எல்லா பகுதிகளிலும் தினமும் மழை பெய்ய வேண்டும் என்பதும் இல்லை.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் அடுத்த 2 வாரங்களுக்கு இப்படித்தான் விட்டு விட்டு மழை பெய்யும். வெளியே போகும்போது குடையை மறக்காதீங்க!

இன்று முதல் வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் குடை அல்லது ரெயின்கோட் எடுத்துச் செல்லுங்கள். எந்த நேரத்தில் திடீரென மழை பெய்யும் என்று சொல்ல முடியாது.

இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சென்னை மற்றும் தமிழகத்திற்கு நல்ல மழையைக் கொடுக்கும். மழை பெய்தாலே வெள்ளம் வந்துவிடும் என்று நினைக்க வேண்டாம். நமக்கு இந்த மழை மிகவும் அவசியம். வடகிழக்கு பருவமழையை மகிழ்ச்சியாக வரவேற்போம். இவ்வாறு தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் கணிப்பு

இதனிடையே, வடகிழக்கு பருவமழை தொடர்பாக டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தரும் இன்று (அக்டோபர் 14-ந் தேதி) புதிய வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், இலங்கை அருகே காற்று சுழற்சி தொடர்ந்து நீடித்து வருவதாகவும், இதனால் ஈரப்பதமான கீழைக்காற்று வீசுவதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய டெல்டா பகுதிகளிலும், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலும் இன்றும் நாளையும் விட்டு விட்டு மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் குறிப்பாக நள்ளிரவு அல்லது அதிகாலை நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவமழையின் இந்த மழை அக்டோபர் 20-ந் தேதி வரை நீடிக்கும் என்றும், இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும் என்றும் ஹேமச்சந்தர் கணித்துள்ளார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share