ஏமாற்றுகிறதா அக்டோபர்? புதுச்சேரியில் ஒரு சொட்டு மழை இல்லை.. சென்னையில் 99% பற்றாக்குறை.. நெல்லையில் 232% அதிகம்.. மழை நிலவரம் என்ன?

Published On:

| By Mathi

Weather-Rain-Monsoon

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகி வரும் நிலையில், அக்டோபர் மாதத்தின் முதல் 13 நாட்களில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இயல்பைவிட 45% குறைவாகவே மழை பெய்துள்ளது.

குறிப்பாகச் சென்னையில் 99% மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் இதுவரை மழையே பதிவாகவில்லை. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் இயல்பைவிட 232% அதிகமாக மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (அக்டோபர் 13-ந் தேதி) வெளியிட்டுள்ள அறிக்கையில், அக்டோபர் 1 முதல் 13-ந் தேதி வரையிலான மாவட்ட வாரியான மழை விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவையில் இயல்பாக 57.4 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 31.5 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. அதாவது இயல்பைவிட 45% குறைவாக மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

சென்னையில் 99% மழைப் பற்றாக்குறை

சென்னையில் அக்டோபர் 1 முதல் 13-ந் தேதி வரை இயல்பாக 68.8 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் வெறும் 0.5 மில்லி மீட்டர் மழை மட்டுமே பதிவாகியுள்ளது. இதனால் சென்னையில் மழைப் பற்றாக்குறை 99% ஆக உள்ளது.

இதேபோல செங்கல்பட்டு மாவட்டத்தில் இயல்பாக 62.8 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில், 2.4 மில்லி மீட்டர் மட்டுமே பதிவாகியுள்ளது. ராணிப்பேட்டையில் இயல்பான 57.8 மில்லி மீட்டருக்குப் பதிலாக 2.3 மில்லி மீட்டர் மழை மட்டுமே பெய்துள்ளது. இந்த 2 மாவட்டங்களிலும் மழைப் பற்றாக்குறை 96% ஆக உள்ளது.

ADVERTISEMENT

திருவள்ளூர் மாவட்டத்தில் 91%, காஞ்சிபுரத்தில் 88%, மயிலாடுதுறையில் 86%, அரியலூரில் 82%, சேலத்தில் 81%, தஞ்சாவூரில் 80% மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 100% பற்றாக்குறை

புதுச்சேரியில் அக்டோபர் 1 முதல் 13-ந் தேதி வரை இயல்பாக 77.2 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் இந்தக் காலகட்டத்தில் மழை எதுவும் பதிவாகவில்லை. இதனால் புதுச்சேரியில் 100% மழைப் பற்றாக்குறை நிலவுகிறது.

காரைக்காலில் இயல்பான 56.1 மில்லி மீட்டருக்குப் பதிலாக 26.5 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அங்கு மழைப் பற்றாக்குறை 53% ஆக உள்ளது.

திருநெல்வேலியில் 232% அதிக மழை

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பற்றாக்குறை நிலவும் நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நிலைமை முற்றிலும் மாறுபட்டுள்ளது. திருநெல்வேலியில் அக்டோபர் 1 முதல் 13-ந் தேதி வரை இயல்பாக 29 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 96.1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 232% அதிகம்.

தென்காசி மாவட்டத்தில் இயல்பான 40.2 மில்லி மீட்டருக்குப் பதிலாக 65.7 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இது 63% அதிகமாகும்.

கோவை, நீலகிரியில்?

நீலகிரியில் 48%, கோயம்புத்தூரில் 41%, தூத்துக்குடியில் 25%, கன்னியாகுமரியில் 2% இயல்பைவிட அதிகமாக மழை பதிவாகியுள்ளது.

திண்டுக்கல், மதுரையில் மழை எப்படி?

திண்டுக்கல் மாவட்டத்தில் இயல்பாக 66.7 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் 30.5 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளது. இதனால் 54% மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் இயல்பான 59.4 மில்லி மீட்டருக்குப் பதிலாக 33.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு 44% மழைப் பற்றாக்குறை உள்ளது.

திருச்சிராப்பள்ளியில் 69%, ஈரோட்டில் 67%, திருவண்ணாமலையில் 66%, திருவாரூரில் 62%, தர்மபுரியில் 61%, புதுக்கோட்டையில் 60% மழைப் பற்றாக்குறை நிலவுகிறது.

தேனி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் தலா 9% மட்டுமே மழைப் பற்றாக்குறை உள்ளது.

அக்டோபர் 1 முதல் 13 வரை மாவட்டங்களின் மழை நிலவரம்:

வடகிழக்குப் பருவமழை தொடங்குமா?

இதனிடையே அடுத்த 2 நாட்களில் நாட்டின் எஞ்சிய பகுதிகளில் இருந்தும் தென்மேற்குப் பருவமழை முழுமையாக விலகுவதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. அதே நேரத்தில் தென்னிந்தியாவின் தென்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழலும் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்டோபர் 14 முதல் 19-ந் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

அக்டோபர் மாதத்தின் முதல் 13 நாட்களில் பெரும்பாலான மாவட்டங்களில் மழைப் பற்றாக்குறை நிலவும் நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share