ரயில்வே ஊழியர்களுக்கு மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ள நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் போனஸ் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
வரும் நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.
இந்தநிலையில் இன்று (அக்டோபர் 14) ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ”பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்திற்கு இணையான போனஸ் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்காக ரூ.2,009.61 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. சுமார் 11.40 லட்சம் கெசட்டட் அல்லாத (Non-gazetted) ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படும்.
தகுதியான ஒரு ஊழியருக்கு 78 நாட்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,951 வரை கிடைக்கும்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயுத பூஜை / தசரா பண்டிகைக்கு முன்பாக இந்த போனஸ் வழங்கப்படுகிறது..
தண்டவாள பராமரிப்பாளர்கள் , ரயில் ஓட்டுநர்கள் (Loco Pilots), கார்டுகள், ஸ்டேஷன் மாஸ்டர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் ‘C’ பிரிவு ஊழியர்கள் இதில் பயன்பெறுவர்.
2025-26 நிதியாண்டில் ரயில்வே துறை சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. சாதனை அளவாக 1670 மில்லியன் டன் சரக்குகளைக் கையாண்டதுடன், சுமார் 741 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றுள்ளது. ஊழியர்களின் இந்த உழைப்பைப் பாராட்டி ஊக்கத்தொகையாக இந்த போனஸ் வழங்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தசூழலில் மாநில அரசு ஊழியர்களும் போனஸ் அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
