மனைவியை அவமானப்படுத்த குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை கேட்பதா? கணவருக்கு ரூ.50,000 அபராதம்- உயர்நீதிமன்றம் அதிரடி!

Published On:

| By Mathi

Madras High Court

மனைவியை அவமானப்படுத்தவும், ஜீவனாம்ச வழக்கை இழுத்தடிக்கவும் குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக் கோரிய கணவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்து, கணவருக்கு எதிராக மனைவி குடும்ப வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

இந்த நிலையில், அந்த ஆண் குழந்தை தனக்குப் பிறக்கவில்லை என்பதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை நடத்த வேண்டும் என்று கணவர் மனுத் தாக்கல் செய்தார்.

ஆனால் குழந்தை உருவான காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் ஒன்றாக வாழவில்லை அல்லது உடலுறவு கொள்ள வாய்ப்பில்லை என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி, அவரது மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ADVERTISEMENT

இந்த உத்தரவை எதிர்த்து கணவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றவியல் சீராய்வு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஷமீம் அகமது விசாரித்தார்.

அப்போது கணவர் தரப்பில், குழந்தையின் தந்தை தாம் இல்லை என்று ஆரம்பத்திலிருந்தே மறுத்து வருவதாகவும், அதை நிரூபிக்க டிஎன்ஏ பரிசோதனை அவசியம் என்றும் வாதிடப்பட்டது.

ADVERTISEMENT

ஆனால் மனைவி வழக்கு தொடர்ந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு டிஎன்ஏ பரிசோதனை கோரி மனுத் தாக்கல் செய்ததற்கு தெளிவான காரணம் எதையும் கணவர் தெரிவிக்கவில்லை என்பதை நீதிபதி சுட்டிக்காட்டினார்.

வலுவான ஆதாரங்கள் இல்லாமல் வழக்கமான நடைமுறையாகக் குழந்தைகளுக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி தெரிவித்தார்.

குறிப்பாக, மனைவியின் நடத்தையைச் சந்தேகிப்பதற்காகக் குழந்தையைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்று நீதிபதி கூறினார்.

குழந்தையைப் பகடைக்காயாக்கக் கூடாது

நீதிபதி ஷமீம் அகமது தனது உத்தரவில் கூறியதாவது: 10 ஆண்டுகளுக்கு முன்போ அல்லது குழந்தை பிறந்த பின்னரோ மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு டிஎன்ஏ பரிசோதனையை எளிய வழியாகப் பயன்படுத்த முடியாது.

குழந்தைக்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்த அனுமதிக்க வேண்டுமா என்பதைப் பெற்றோரின் பார்வையில் இருந்து பார்க்கக் கூடாது. குழந்தையின் உரிமைகள் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டுதான் முடிவு செய்ய வேண்டும்.

மனைவி வேறு ஒருவருடன் உறவு வைத்திருந்தார் என்பதை நிரூபிப்பதற்காகக் குழந்தையைப் பகடைக்காயாகப் பயன்படுத்தக் கூடாது.
மனைவியின் நடத்தையைச் சந்தேகிக்கும் கணவர், அதற்கான ஆதாரங்களை வேறு வழிகளில் சமர்ப்பிக்கலாம். ஆனால் அதற்காகக் குழந்தையின் உரிமையைப் பலிகொடுக்க முடியாது.

இந்த வழக்கில் மனைவியை அவமானப்படுத்தவும், சமூகத்தில் அவரது பெயரைக் கெடுக்கவும், அவர் தொடர்ந்த ஜீவனாம்ச வழக்கை இழுத்தடிக்கவுமே கணவர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். டிஎன்ஏ பரிசோதனைக்கு உத்தரவிடுவதற்கான ஆரம்பகட்ட ஆதாரங்களை கூட அவர் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்த மனுவை ஏற்க முடியாது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

இதையடுத்து கணவரின் குற்றவியல் சீராய்வு மனுவைத் தள்ளுபடி செய்த நீதிபதி, மனைவியை அவமானப்படுத்த முயன்றதற்காக அவருக்கு ரூ.50,000 அபராதம் விதித்தார். இந்தத் தொகையை மனைவிக்கு வழங்கவும் உத்தரவிட்டார்.

குழந்தையின் உரிமைகளைப் பாதிக்கும் வகையில், மனைவியின் நடத்தையைச் சந்தேகித்து டிஎன்ஏ பரிசோதனை கோர முடியாது என்பதை சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share